அக்கறையல்ல, அரசியல்!

தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்படும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால்,


தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்படும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால், இப்போது தனது முடிவை ஒத்திவைத்திருப்பது வியப்பை ஏற்படுத்தவில்லை. தேர்தல் வரும்போதெல்லாம் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்துவது என்பது முதல்வர் கேஜரிவாலுக்கு வழக்கமாகிவிட்டிருக்கிறது. அதனால், மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவர இருக்கும் நிலையில் அவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை அறிவித்ததும், இப்போது அதை தள்ளிப்போட்டிருப்பதும் எதிர்பாராதது அல்ல.
தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வேண்டும் என்கிற ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கை புதியதல்ல. அந்தக் கட்சி தொடங்கப்பட்டபோதே அதன் இலக்குகளில் ஒன்றாக தில்லிக்குத் தனி மாநில அந்தஸ்து பெற்றுத்தருவதற்கு முன்னுரிமை அளித்திருந்தது. ஆம் ஆத்மி கட்சி மட்டுமல்லாமல், இதற்கு முன்னால் தில்லியில் ஆட்சி புரிந்த பாஜகவும், காங்கிரஸும்கூட தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதை தங்களது தேர்தல் அறிக்கைகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 
முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் உண்ணாவிரத அறிவிப்பைத் தொடர்ந்து, கட்சித் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு காணப்பட்டது என்னவோ உண்மை. அவரது உண்ணாவிரதத்துக்கான இடத்தைத் தேர்வு செய்வதில் அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் மும்முரமாக ஈடுபட்டனர். 
ராம் லீலா மைதானத்தில் வைத்துக்கொள்வதா, வழக்கமாகப் போராட்டங்கள் நடைபெறும் ஜந்தர் மந்தரில் பந்தல் அமைப்பதா, முதல்வரின் இல்லத்தையே உண்ணாவிரதத்துக்கு தேர்ந்தெடுப்பதா என்றெல்லாம் விவாதம் எழுந்தது. கேஜரிவால் மட்டுமல்லாமல், அமைச்சர்களும், ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களும் கட்சித் தொண்டர்களும்கூட முதல்வருடன் உண்ணாவிரதத்தில் பங்குபெற தயாராக இருந்தனர். முதல்வரும் அமைச்சர்களும் தங்களது அலுவலகப் பணிகளை போராட்டப் பந்தலில் தொடர்வதாக அறிவித்தனர். 
இத்தனை பரபரப்பையும், துணைநிலை ஆளுநரும் மத்திய உள்துறை அமைச்சகமும் சட்டை செய்யவில்லை. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து எல்லைப் புறத்தில் பதற்றம் நீடிக்கும் நிலையில் முதல்வர் கேஜரிவாலின் போராட்ட அறிவிப்புக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது. இப்போது பதற்றமான சூழலைக் காரணம் காட்டி முதல்வர் கேஜரிவாலும் புத்திசாலித்தனமாக தனது போராட்டத்தைத் தள்ளிவைத்துவிட்டார்.
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது போராட்டத்தை தள்ளி வைத்திருக்கிறார் என்றாலும், தில்லிக்கு மாநில அந்தஸ்து தரப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடரத்தான் செய்யும். நீண்ட நாள்களாகவே இந்தப் பிரச்னை அடிக்கடி எழுப்பப்படுவதும், பிறகு சிறிது காலம் மறக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது. ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் வாழும் இந்தியத் தலைநகர், நிலப்பரப்பின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் மாநில அந்தஸ்து பெறுவதற்கான எல்லா தகுதிகளையும் பெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படியிருந்தும், தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படாமல் இருப்பது, அது இந்தியாவின் தலைநகராகவும் இருக்கிறது என்பதால்தான். 
மத்திய அரசின் அலுவலகங்கள், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வசிப்பிடம், வெளிநாட்டுத் தூதரகங்கள், முப்படைகளின் தலைமையகங்கள் என்று மிக முக்கியமான பகுதிகள் அமைந்திருப்பதால், தலைநகர் தில்லியின் கட்டுப்பாடு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. 2016 ஆகஸ்ட் மாதம் இந்தப் பிரச்னை தில்லி உயர்நீதிமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது, அமைச்சரவையின் முடிவுகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட தில்லியின் துணைநிலை ஆளுநருக்கு அரசமைப்பு சட்டப் பிரிவு 239 (AA) அதிகாரம் வழங்கியிருக்கிறது என்றும், எந்தவொரு நிர்வாக முடிவுக்கும் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியம் என்றும் அந்தத் தீர்ப்பில் உறுதிசெய்யப்பட்டது.
மத்திய அரசின் முக்கியமான செயல்பாடுகள் உள்ள பகுதிகள் தவிர்த்து ஏனைய பகுதிகளின் நிர்வாகத்தைத் துணைநிலை ஆளுநரின் மூலம், மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வாதம். இதற்கு முன்னால் ஏழு கமிட்டிகள் நியமிக்கப்பட்டன. அவையெல்லாம் தேசியத் தலைநகர் பகுதி தவிர்த்த தில்லி மாநில பகுதிகள், தில்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதைப் பரிந்துரைத்திருக்கின்றன. 
வாஜ்பாய் அமைச்சரவையில் அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தபோது, பிரணாப் முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் குழு, 2003-இல் தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதைப் பரிந்துரைத்ததை ஆம் ஆத்மி கட்சியினர் சுட்டிக் காட்டுகின்றனர். அந்த மக்களவையின் பதவிக் காலம் முடிவடைந்ததால் தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் முடிவும் காலாவதியாகிவிட்டது. அதற்குப் பிறகு அமைந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸின் கூட்டணி அரசு தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் முடிவை கிடப்பில் போட்டுவிட்டது. 
சட்டம் ஒழுங்கு, நிலம், அரசு ஊழியர்கள் என்கிற மூன்று மட்டுமே மாநில அரசின் கீழ் இல்லாதவை. முந்தைய அரசுகள், இந்த மூன்று அதிகாரங்களும் இல்லாத நிலையிலும் தில்லியில்  மிகப்பெரிய வளர்ச்சியை உறுதிப்படுத்த முடிந்தது. முழு அதிகாரமும் தனது கையில் வர வேண்டும் என்பதற்காக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் போராடுகிறாரே தவிர, தில்லியின் வளர்ச்சி மட்டுமே அவரது அக்கறையாக இல்லை. அரவிந்த் கேஜரிவாலின் அறிவிப்புகள் வழக்கமான தேர்தல் நேர அரசியல்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com