மீண்டும் ஹசீனா!

வங்க தேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் மெகா கூட்டணி போட்டியிட்ட 299 இடங்களில் 288 இடங்களை வென்று

வங்க தேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் மெகா கூட்டணி போட்டியிட்ட 299 இடங்களில் 288 இடங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. கடந்த 2014 தேர்தலில் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சி தேர்தலைப் புறக்கணித்துமேகூட, ஆளும் அவாமி லீக் கட்சி 234 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது. வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைமையில் அமைந்த ஜாட்டியா ஒக்கியா தேசிய ஐக்கிய முன்னணி வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்திருக்கிறது. 
தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவரான 82 வயது முன்னாள் நீதிபதி கமால் உசைன் தேர்தல் ஆணையத்திடம் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் 17 பேர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டிருப்பதும், மேலும் 17 பேர் நீதிமன்றங்களால் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருப்பதும், அரசின் வற்புறுத்தலால்தான் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. தேர்தல் பிரசாரத்தின்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமான எதிர்க்கட்சித் தொண்டர்கள் தேர்தல் வன்முறையைக் காரணம் காட்டி, கைது செய்யப்பட்டதால் எதிர்க்கட்சிகளின் பிரசாரம் ஆளும்கட்சியால் முடக்கப்பட்டது என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. 
இப்படிப் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும்கூட, இந்தத் தேர்தல் இதற்கு முந்தைய தேர்தல்களைவிட, சுதந்திரமாகவும், முறையாகவும்தான் நடைபெற்றது என்று கூறவேண்டும். தேர்தல் கண்காணிப்புக் குழு, சார்க் மனித உரிமை ஆணையம் ஆகியவற்றின் நேரடிப் பார்வையில் சர்வதேசக் கண்காணிப்பாளர்களின் பங்களிப்புடன் இந்தத் தேர்தல் நடந்திருக்கிறது என்பதால், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட முடியாது. தேர்தல் குறித்த நேரத்தில் அறிவிக்கப்பட்டு, நடத்தப்பட்டது என்பதுடன் வாக்குப் பதிவும் 2014-இல் இருந்த 51% பங்களிப்பைவிட அதிகமாக, 66% காணப்பட்டதைக் குறிப்பிட வேண்டும்.
1971-இல் விடுதலை அடைந்த சில ஆண்டுகளிலேயே வங்க தேசம் உருவாகக் காரணமாக இருந்த அந்த நாட்டின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானும், அவருடைய மனைவியும், மூன்று மகன்களும் ராணுவ அதிகாரிகள் சிலரால் ஆகஸ்ட் 1975-இல் படுகொலை செய்யப்பட்டனர். நல்ல வேளையாக அவருடைய மகளான ஷேக் ஹசீனா அப்போது வெளிநாட்டில் இருந்தார். 1981-இல் அவர் திரும்பி வந்து அவாமி லீக் கட்சிக்குத் தலைமை தாங்கி வங்க தேசத்தில் ராணுவ ஆட்சியை அகற்றி ஜனநாயகத்தை மீட்க நீண்ட போராட்டத்தில் இறங்கினார். 
வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவியான கலீதா ஜியாவுடன் கைகோத்து, 1990-இல் ராணுவ சர்வாதிகாரி ஹுசைன் முகமது எர்ஷாதின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததில் அவருக்குப் பெரும் பங்குண்டு. விரைவிலேயே ஷேக் ஹசீனாவுக்கும் கலீதா ஜியாவுக்குமான உறவு முறிந்து கடந்த 30 ஆண்டு வங்க தேச அரசியலில் இருவருக்கும் இடையே பதவிப் போட்டி தொடர்கிறது.
ஷேக் ஹசீனா 1996-இல் முதன் முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், 2001 தேர்தலில் பதவி இழக்க நேர்ந்தது. அவருக்குப் பிறகு பதவிக்கு வந்த பேகம் கலீதா ஜியாவாலும் அடுத்த தேர்தலில் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. 2007-இல் ராணுவத்தின் பின் துணையுடன் நடந்த ஆட்சி மாற்றத்தில் ஷேக் ஹசீனாவும் கலீதா ஜியாவும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2008 டிசம்பரில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டு, போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அந்தத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஷேக் ஹசீனா ஆட்சியைக் கைப்பற்றி இப்போது வரை அதைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது அவருடைய அரசியல் சாதுர்யத்துக்கும், ராஜதந்திரத்திற்கும் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி.
உடல்நலக் குறைவுடன் இருக்கும் வங்கதேச தேசியவாதக் கட்சி தலைவி பேகம் கலீதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டிருப்பது மட்டுமே பிரதமர் ஷேக் ஹசீனாவின் தொடர் மூன்றாவது முறை வெற்றிக்குக் காரணம் என்று கூறிவிட முடியாது. அவரது கடந்த 10 ஆண்டு ஆட்சியில் வங்க தேசம் மிகப் பெரிய வளர்ச்சி கண்டிருக்கிறது.
வங்க தேசத்தின் ஜிடிபி கடந்த ஆண்டு 7.86 % ஆக உயர்ந்திருக்கிறது. வறுமை கணிசமாகக் குறைந்து வளர்ச்சி அடையும் நாடுகள் பட்டியலில் விரைவிலேயே வங்க தேசம் சேரும் அளவுக்குப் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் நாடாக வங்க தேசம் வளர்ச்சி அடைந்திருப்பதற்கு பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிதான் காரணம். ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகளை அவரது ஆட்சியின் சாதனைகள் ஓரளவுக்கு மறைத்து விடுகின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை ஷேக் ஹசீனாவின் வெற்றி நமக்குச் சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவுவதற்கும், அஸ்ஸாம் பிரிவினைவாதிகளும், இஸ்லாமியத் தீவிரவாதிகளும் வங்க தேசத்தில் இருந்து செயல்படாமல் இருப்பதற்கும் இந்தியாவுக்குச் சாதகமான ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் ஆட்சி வங்க தேசத்தில் தொடர்வது மிக மிக அவசியம். 
பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஷேக் ஹசீனாவுக்கு வாழ்த்துக் கூறும் அதே நேரத்தில், ஓர் எச்சரிக்கை விடுப்பதும் அவசியம். இதேபோன்று எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளுக்கு வாய்ப்பூட்டு போட்டு எதேச்சதிகாரமாக நடக்க முற்பட்டதன் விளைவாக அவரது தந்தைக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், ராணுவமும் திரும்பின என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com