மூன்றாம்தர அரசியல்!

பெட்ரோல் குண்டு வீச்சு, கத்திக்குத்துகள், தெருச் சண்டைகள், போராட்டம், கடையடைப்பு, இயல்பு வாழ்க்கைக்குப் பாதிப்பு என்று கேரள மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை

பெட்ரோல் குண்டு வீச்சு, கத்திக்குத்துகள், தெருச் சண்டைகள், போராட்டம், கடையடைப்பு, இயல்பு வாழ்க்கைக்குப் பாதிப்பு என்று கேரள மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை தொடர்கிறது. 
கேரள மாநிலத்தில் நடந்த முழுஅடைப்பின்போது வன்முறையில் ஈடுபட்ட 1,718 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 1,108 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. 174 பேர் காயமடைந்திருக்கிறார்கள். 100-க்கும் அதிகமான பேருந்துகள் உடைக்கப்பட்டிருக்கின்றன.
10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சம்பிரதாயத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடும் பிரச்னை நிலவுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி சபரிமலை சம்பிரதாயங்களையும் ஐதீகங்களையும் தகர்க்கும் முயற்சியில் இறை நம்பிக்கையில்லாத கேரள மாநிலத்தின் இடதுசாரி அரசு முனைப்புக் காட்டுவதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், அரசே வலியப்போய் இந்தப் பிரச்னையைப் பெரிதாக்கி அதன் மூலம் எதையோ சாதித்துவிடப் போவதாகக் கருதுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
ஆண்டாண்டுக் காலமாக இருக்கும் மத நம்பிக்கைகளைத் தகர்ப்பதுதான் மதச்சார்பின்மை என்று கருதுவது சரியான புரிதல் இல்லாமை என்றுதான் கூற வேண்டும். மதச்சார்பின்மை என்பது மத நம்பிக்கைகள் தொடர்பான பிரச்னைகளில் அரசு தலையிடாமல் இருப்பதும், எந்தவொரு மதத்துக்கும் சார்பாக செயல்படாமல் இருப்பதும்தானே தவிர இறை நம்பிக்கை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது என்பதல்ல.
சபரிமலையில் அனைத்து வயது மகளிரும் தரிசனம் செய்யலாம் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் தலைவர்களும்கூட எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இப்போது சபரிமலை சம்பிரதாயங்களில் தலையிட்டிருக்கும் நீதித் துறை வருங்காலத்தில் ஏனைய மதங்களின் நடைமுறைகளிலும் தலையிடக் கூடும் என்கிற அச்சம் பல்வேறு மதங்களைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களை எதிர்கொள்கிறது.
சபரிமலைக்குக் காவல் துறையின் உதவியுடன் இரண்டு பெண்கள் வியாழக்கிழமை அதிகாலையில் அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சபரிமலை சந்நிதானத்துக்கு எப்படி அழைத்து வரப்பட்டார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பம்பையிலிருந்து டிராக்டர் செல்லும் சுப்பிரமணியம் பாதை வழியாக ஆம்புலன்ஸில் சரல்மேடு வரை அழைத்துவரப்பட்டு அங்கிருந்து சந்நிதானத்துக்குச் சென்றார்கள் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பே அவர்கள் இருவரும் அழைத்துவரப்பட்டு, காவல் துறையினரால் மறைவிடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.
அந்த இரண்டு பெண்களும் தரிசனம் செய்துவிட்டுப் போன பிறகு ஐதீகம் மீறப்பட்டதால் சபரிமலை கோயிலின் தந்திரி கண்டரரு ராஜீவரருவின் வழிகாட்டலின்படி கோயில் நடையடைக்கப்பட்டு சுத்தி கலச பூஜை நடத்தப்பட்டது. கோயிலின் ஐதீகங்களைப் பாதுகாப்பது தந்திரியின் கடமை என்பதால், அந்த பூஜை நடத்தப்பட்டதாகத் தெரிவித்திருக்கும் தந்திரியின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதும், அவரிடம் விளக்கம் கேட்டு தேவஸ்வம் போர்டு தாக்கீது அனுப்ப முற்பட்டிருப்பதும், அவர் பதவி விலக வேண்டுமென்று முதல்வர் கூறியிருப்பதும் எந்த அளவுக்கு சபரிமலைக் கோயிலின் நடைமுறையைத் தகர்ப்பதில் பினராயி விஜயன் அரசு தீவிரம் காட்டுகிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
சபரிமலைப் பிரச்னையை முன்வைத்து அரசியல் வியூகம் வகுக்க முற்பட்டிருக்கிறார் பினராயி விஜயன். இந்தப் பிரச்னையை பாரதிய ஜனதா கட்சி முன்னிலைப்படுத்திப் போராட்டம் நடத்தும் என்பது அவருக்குத் தெரியாததல்ல. பாஜக இதன் மூலம் வளர்ந்தால், அது கேரளத்தின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வாக்குகளைப் பிரிக்கும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்பார்ப்பு. காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி பலவீனமடைவதன் மூலம் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றியை அடைந்துவிட முடியும் என்பதுதான் பினராயி விஜயன் போடும் அரசியல் கணக்கு.
மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியும் சபரிமலையை அரசியல் ஆதாயமாக்க முயற்சிக்கிறதே தவிர, சபரிமலைக் கோயிலின் சம்பிரதாயப் புனிதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதாகத் தோன்றவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சாதகமாக்கி, கேரள மாநிலத்தில் இந்துக்களை ஒருங்கிணைத்து தானொரு அரசியல் சக்தியாக மாற வேண்டும் என்பதுதான் பாஜகவின் இலக்கு. 
பெண்களுக்கு சம உரிமை என்கிற பெயரில் சபரிமலை ஐதீகத்தில் தலையிட்டு புரிதல் இல்லாமல் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்; தனது இறைமறுப்புக் கொள்கையை நிலைநாட்ட விரும்பும் கேரள முதல்வர் பினராயி விஜயன்; கேரளத்தில் மாற்றுக் கட்சியாக உருவாக நினைக்கும் பாஜக; ஐதீகத்தைத் தகர்க்க விரும்பும் இறை உணர்வு இல்லாத பெண்ணியவாதிகள் - இவர்களால் காலகாலமாகக் கடைப்பிடிக்கப்படும் சபரிமலை சம்பிரதாயம் பலியிடப்படுகிறது.
பல கோடி பக்தர்களின் நம்பிக்கையில் தலையிடுவது என்பது என்ன ஜனநாயகம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com