அவலம் தொடரும்...

சட்ட விரோதமாக சுரங்கங்களில் இருந்து நிலக்கரி எடுப்பது என்பது கட்டுப்படுத்தப்படாமல் தொடர்வது வியப்பை ஏற்படுத்துகிறது. அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் கனிமச் சுரங்கங்கள் செயல்படுவது

சட்ட விரோதமாக சுரங்கங்களில் இருந்து நிலக்கரி எடுப்பது என்பது கட்டுப்படுத்தப்படாமல் தொடர்வது வியப்பை ஏற்படுத்துகிறது. அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் கனிமச் சுரங்கங்கள் செயல்படுவது என்பது இயலாது. கடந்த டிசம்பர் 13-ம் தேதி முதல் மேகாலய மாநிலத்தில் உள்ள ஜைந்தியா மலைகள் மாவட்டத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் 15 சுரங்கப் பணியாளர்கள் சிக்கிக் கொண்டிருப்பது இந்தப் பிரச்னையை வெளிச்சம் போடுகிறது.
 உலகில் மிக வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரம் என்று கருதப்படும் இந்தியாவில் இன்னும்கூட புராதன காலத்து பாணியில் சுரங்கப் பணிகள் நடத்தப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. மேகாலய சுரங்க விபத்து நடந்து 3 வாரங்களுக்கு மேலாகியும்கூட சிக்கிக்கொண்ட பணியாளர்கள் காப்பாற்றப்படாமல் இருப்பது எந்த அளவுக்கு நாம் தொழில்நுட்ப ரீதியாக பின்தங்கி இருக்கிறோம் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
 மேகாலய சுரங்கங்களில் எலி வளைத் தொழில்நுட்பம் என்கிற தொன்மையான முறையில் சட்ட விரோதமாக நிலக்கரி தோண்டியெடுக்கும் முறை நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. 2014-இல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மேகாலயத்தில் செயல்படும் சட்ட விரோதமான சுரங்கப் பணிகளுக்கு தடை விதித்தது. இதற்கு அரசியல் கட்சிகளும் அதிகார வர்க்கமும் துணை நிற்கிறார்கள் என்பதும், மக்கள் மத்தியிலேயேகூட தடை விதிக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது என்பதும் இப்போது தெரிய வந்திருக்கிறது.
 கடந்த ஜூன் - ஜூலை 2018-இல் இதேபோல தாய்லாந்து நாட்டில் குகைக்குள்ளே மாட்டிக்கொண்ட மாணவர் கால்பந்தாட்டக் குழுவின் மீட்புப் பணிக்கு இந்தியாவிலிருந்து அதிகத் திறன் கொண்ட கிர்லோஸ்கர் நீர் உறிஞ்சிகள் அனுப்பப்பட்டன. இப்போது மேகாலய நிலக்கரிச் சுரங்கத்தில் காணப்படும் தண்ணீரை அகற்ற அந்த நீர் உறிஞ்சிகளால் முடியாமல் போனது ஏன் என்று புரியவில்லை.
 நிலக்கரிச் சுரங்கத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் அந்த ஊழியர்களை எப்படியாவது மீட்டாக வேண்டும் அல்லது கண்டுபிடித்தாக வேண்டும் என்பதுதான் இப்போதைய அவசரத் தேவை. அது முறையாக நடைபெறுகிறதா, சட்டவிரோதமாக நடைபெறுகிறதா என்பதல்ல கேள்வி. உள்ளூர்வாசிகளின் கணிப்பில் அந்தத் தொழிலாளர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது.
 மிகப் பழமையான எலி வளைத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் சுரங்கங்களில் மீட்புப் பணியினர் சுலபமாக அவர்களை மீட்டுவிட முடியாது என்று கூறப்படுகிறது. அந்தச் சுரங்கத்துக்கு அருகிலிருக்கும் ஆற்றிலிருந்து சுரங்கத்துக்குள் தண்ணீர் பாய்ந்துவிட்டிருக்கும் நிலையில் மீட்புப் பணியினர் மிகப் பெரிய சோதனையை எதிர்கொள்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
 மக்களவையில் கடந்த வாரம் எழுத்து மூலம் தாக்கல் செய்யப்பட்ட பதிலின் அடிப்படையில் சில புள்ளிவிவரங்கள் கிடைக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 377 சுரங்க விபத்து மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 2015-க்கும் 2017-க்கும் இடையில் நடைபெற்ற சுரங்கப் பணி மரணங்களில் பெரும்பான்மையானவை நிலக்கரிச் சுரங்கங்கள் மூலம்தான் ஏற்பட்டிருக்கின்றன.
 377 மரணங்களில் 129 மரணங்கள் 2017-இல் மட்டும் ஏற்பட்டிருக்கின்றன. 2016-இல் 145 பேரும் 2015-இல் 103 பேரும் சுரங்க விபத்துகளில் சிக்கி மரணமடைந்திருக்கிறார்கள். மொத்தம் 377 சுரங்க விபத்து மரணங்களில் 210 பேர் நிலக்கரிச் சுரங்கங்களில்தான் உயிரிழந்திருக்கிறார்கள். ஜார்க்கண்டில் 69 மரணங்களும், தெலங்கானாவில் 32 மரணங்களும், மத்தியப் பிரதேசத்தில் 29 மரணங்களும் வெவ்வேறு நிலக்கரிச் சுரங்க விபத்துகளில் நடந்திருப்பதாகத் தெரிகிறது.
 மேகாலயத்தில் சட்ட விரோதமாக நடைபெறும் நிலக்கரிச் சுரங்கங்களில் கூடுதல் ஊதியம் கிடைக்கிறது என்பதற்காக அண்டை மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வேலைக்கு வருகிறார்கள். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தடையால் மேகாலய அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.416 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும் பலரும் வாழ்வாதாரம் இழக்கிறார்கள் என்றும் அதனால் தடை அகற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுகின்றனவே தவிர சுரங்கப் பணிகள் முறையாக நடத்தப்படுவது குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
 முறைப்படுத்தப்படாத, நவீனப்படுத்தப்படாத சுரங்கப் பணிகளால் அருகிலுள்ள ஆறுகள் மாசுபடுகின்றன. சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. ஆனால் கட்சி பேதமில்லாமல் அரசியல் தலைவர்கள் சுரங்கப் பணிகள் முடங்குவதை எதிர்க்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் சுரங்க உடைமையாளர்களாகவோ திருட்டுத்தனமாக நிலக்கரி வியாபாரம் செய்பவர்களாகவோ அல்லது போக்குவரத்துத் துறையைச் சார்ந்தவர்களாகவோ இருப்பதுதான் அதற்குக் காரணம்.
 டிசம்பர் 13 சுரங்க விபத்தைத் தொடர்ந்து சுரங்கத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்படலாம், இல்லாமல் போகலாம். ஆனால், சட்ட விரோத சுரங்கப் பணிகள் இதனால் முடங்கிவிடும் என்று தோன்றவில்லை. இதற்கு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ரகசியமாக ஆதரவு வழங்குவது முற்றிலுமாகத் தடுக்கப்படாத வரையில் சுரங்க விபத்துகள் அதிகரிக்குமே தவிர குறையப் போவதில்லை.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com