வேளாண் இடருக்குத் தீர்வு!

இந்திய விவசாயி எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை அவர்களது விளை பொருள்களுக்குப் போதுமான விலை கிடைக்காமல் இருப்பது.


இந்திய விவசாயி எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை அவர்களது விளை பொருள்களுக்குப் போதுமான விலை கிடைக்காமல் இருப்பது. அவர்களது முதலீட்டுக்கும், உழைப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் ஏற்ற விலை கிடைப்பதில்லை. விவசாய விளைபொருள் விற்பனைக் குழுக்களின் ஆதிக்கமும், அத்தியாவசியப் பொருள்கள் சட்டமும், அரசின் விளைபொருள் ஏற்றுமதிக் கொள்கையும், விவசாயிகளுக்குப் போதுமான விலை கிடைக்காமல் இருப்பதற்கு முக்கியமான காரணிகள்.
மத்தியில் ஆளும் பாஜக மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து வேளாண் இடருக்குத் தீர்வு காண சில முயற்சிகளை மத்திய அரசு முன்னெடுக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், உடனடித் தீர்வு காணும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க மத்திய அரசு முனைந்திருப்பதில் வியப்பில்லை. அதிகரித்த குறைந்தபட்ச ஆதார விலை, கடன் தள்ளுபடி, நேரடி மானியத்தின் மூலம் ஆதரவு என மூன்று தீர்வுகள் அரசின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. 
2017 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது, 23 பொருள்களுக்கு அதிகரித்த குறைந்தபட்ச ஆதார விலையில் கடன் தள்ளுபடி பிரதமரால் அறிவிக்கப்பட்டு, பாஜக மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. சமீபத்தில் நடந்த மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அதேபோல கடன் தள்ளுபடியையும், குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பையும் அறிவித்து, அதன் பயனால் தேர்தல் வெற்றியை காங்கிரஸ் அடைந்திருக்கிறது. இந்தப் பின்னணியில் மத்திய வேளாண் அமைச்சகம் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த உத்தேசிப்பதில் வியப்பொன்றுமில்லை.
ஆனால், குறைந்தபட்ச ஆதாரவிலைக் கொள்கை பெருமளவில் விவசாயிகளுக்குப் பயனளித்துவிடப் போவதில்லை. கரும்பு, கோதுமை, நெல் ஆகியவை பயிரிடும் விவசாயிகள் இதனால் ஓரளவுக்குப் பயனடையக்கூடும். ஆனால், மொத்த விவசாயிகளில் 10% மட்டுமே தங்களது விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதார விலைக்கு வழங்குகிறார்கள். பருப்பு, தானியம், எண்ணெய் வித்துக்கள் என்று எல்லா விளைபொருள்களையும் சேர்த்து எடுத்துக்கொண்டாலும் கூட, இதனால் பயனடைபவர்கள் 20%-க்கும் அதிகமாக இருக்கப் போவதில்லை.
குறைந்தபட்ச ஆதார விலை என்பது அளவுக்கு அதிகமான உற்பத்தி செய்யும் பெரிய விவசாயிகளுக்குத்தான் பயனுள்ளதாக இருக்கும். இதன் விளைவாக அரசுக்கு ஏற்படும் விரயமும் மிகமிக அதிகம். கோதுமை, நெல் ஆகியவற்றின் கையிருப்பு அளவு 24.4 மில்லியன் மெட்ரிக் டன்தான் நமக்குத் தேவை. ஆனால் இன்றைய நிலையில், அரசின் உணவு தானியக் கிடங்குகளில் 45.4 மில்லியன் மெட்ரிக் டன் கையிருப்பு அரசிடம் இருக்கிறது. அரசு கொள்முதலிலும், பாதுகாப்பிலும், விநியோகத்திலும் காணப்படும் ஊழலும், இழப்பும், சீரழிவும் தேவையில்லாத நிதிச் சுமையை ஏற்படுத்துகின்றன.
அரசின் இன்னொரு யோசனையான கடன் தள்ளுபடி என்பதும் எல்லா விவசாயிகளுக்கும் பயனளித்து விடாது. நபார்டு ஆய்வின் படி, விவசாயக் குடும்பங்களில் 43.5% மட்டுமே கடன் வாங்கு
கிறார்கள். அதிலும்கூட, வங்கிகளிலிருந்து கடன் பெறுபவர்களின் அளவு 30% மட்டுமே. 70% இந்திய விவசாயிகள் நில உடைமையாளர்கள் அல்ல என்பதால், வங்கிகள் மூலம் கடன் பெற முடியாதவர்கள். இந்தப் பின்னணியில் குறைந்தபட்ச ஆதார விலையோ, விவசாயக் கடன் தள்ளுபடியோ விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்காது. 
தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசு கடந்த ஆண்டு ரைத்து பந்து திட்டத்தை அறிவித்தது. எல்லா விவசாயிகளுக்கும் காரிஃப் பருவத்துக்கு முன்பும், ரபி பருவத்துக்கு முன்பும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,000 வீதம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் எல்லா விவசாயிகளும் பயிரிடுவதற்கான அடிப்படைச் செலவை மானியமாகப் பெறுகிறார்கள். தேசிய அளவில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு ரூ.4 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை தேவைப்படும் என்றால், ரைத்து பந்து திட்டஅடிப்படையில் ரூ.2 லட்சம் கோடி மட்டும்தான் செலவாகும்.
இந்தத் திட்டத்திலும் பல குறைபாடுகள் இருக்கின்றன. இதனால், பெரும் நிலச்சுவாந்தார்கள்தான் பயன்படுவார்களே தவிர, நில குத்தகைதாரர்களும், நிலமில்லா விவசாயத் தொழிலாளர்களும் பயனடைவதில்லை. நிலத்தை குத்தகைக்குக் கொடுத்திருப்போருக்கு ஒவ்வொரு பயிரிடும் பருவத்தின்போதும் ஏக்கருக்கு ரூ.4,000 கிடைக்குமே தவிர, குத்தகைக்கு எடுத்துப் பயிரிடுபவர்கள் இதனால் பயனடையப் போவதில்லை. இந்தக் குறையை ஓரளவு தீர்க்கிறது ஒடிஸாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதாதள அரசு அறிவித்திருக்கும் காலியா திட்டம். 
காலியா திட்டத்தின்படி (விவசாயிகள் வருவாய் மேம்பாட்டுத் திட்டம்) ஒவ்வொரு பயிர்ப் பருவத்தின்போதும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது. பெரு விவசாயிகள் இந்தத் திட்டத்தில் இடம்பெற மாட்டார்கள். குத்தகைதாரர்களும் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடுபவர்களுமான 30 லட்சம் சிறிய, நடுத்தர விவசாயிகள்தான் இந்தத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள். 
விவசாயக் கடன் தள்ளுபடியை நவீன் பட்நாயக் அரசு நிராகரித்திருக்கிறது. இதன் மூலம் நேர்மையாக வட்டியும் கடனும் செலுத்துபவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றும், கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதியுள்ள பெரும் நிலக்கிழார்கள்தான் பயன்படுகிறார்கள் என்றும், மிகச் சரியாக பட்நாயக் அரசு கணித்திருக்கிறது.
வேளாண் இடருக்குக் காலியா திட்டம்தான் சரியான தீர்வாக இருக்கும். ஆனால், இது உடனடித் தீர்வாக இருக்குமா, வாக்கு வங்கித் தீர்வாக இருக்குமா என்பதை கணிக்க முடியவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com