அச்சார வெற்றி!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் அடைந்திருக்கும் வெற்றி வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் அடைந்திருக்கும் வெற்றி வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. 1947-48-இல்தான் லாலா அமர்நாத்தின் தலைமையில் முதன்முதலாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் பந்தயம் விளையாடச் சென்றது. அன்று முதல் இத்தனை ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மைதானத்தில் அந்த அணியை நம்மால் வெற்றி பெற முடிந்ததில்லை. இந்த முறை விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி டெஸ்ட் பந்தய வெற்றியை அடைந்திருக்கிறது. 
1932-இல் இந்தியா முதன்முதலாக இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் டெஸ்ட் பந்தயங்களில் கலந்து கொண்டது. அதைத் தொடர்ந்து, இந்திய மைதானத்தில் மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டியிருந்தாலும் அயல்நாட்டு கிரிக்கெட் மைதானங்கள் பெரும்பாலும் இந்தியாவுக்குச் சாதகமாக இருந்ததில்லை. இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அணிகளை அவர்கள் நாட்டில் நடந்த போட்டிகளில் இந்திய அணி வெற்றி கண்டு சாதனை படைத்திருந்தும்கூட, இதுவரை ஆஸ்திரேலியாவில் அவர்களது மைதானத்தில் அந்த அணியை வீழ்த்த நமது வீரர்களால் முடிந்ததில்லை. 
இந்த முறை விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணியினர், தொடக்கத்திலிருந்தே வெற்றி முகம் நோக்கி நகரத் தொடங்கினர். அடிலெய்டில் நடந்த டெஸ்ட் பந்தயத்தில் மிகச் சிறிய வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது என்றால், ஆஸ்திரேலிய வீரர்களுக்குச் சாதகமான சூழல் உள்ள பெர்த்தில் நடந்த டெஸ்டில் நமது அணி தோல்வியைத் தழுவ நேர்ந்தது. அடுத்தாற்போல் நடந்த மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று, தனக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொண்டது. நான்காவதாக, சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் பந்தயம் மழையால் நிறைவு பெறாமல் சமனில் முடிந்தது என்றாலும்கூட, மழையில்லாமல் இருந்திருந்தால் அந்த டெஸ்டிலும் இந்தியா வெற்றி அடைந்திருக்கும். 
ஆஸ்திரேலியாவில் இந்தியா அடைந்திருக்கும் 2-1 டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பின்னால் பல வீரர்களின் சாதனைகள் இருக்கின்றன. சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில் சேதேஸ்வர் புஜாரா 193 ரன்களும், ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 159 ரன்களும் எடுத்துச் சாதனை படைத்திருக்கிறார்கள். சேதேஸ்வர் புஜாரா, ரிஷப் பந்த், விராட் கோலி என்கிற மூவர் அணியின் பேட்டிங்குக்கு ஆஸ்திரேலிய பந்து வீச்சுக்காரர்களால் ஈடுகொடுக்க முடியாமல் போனதும்கூட இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம். 
பேட்டிங்கில் மட்டுமல்லாமல், இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது ஜஸ்ப்ரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சமி என்கிற பந்து வீச்சாளர்களின் மூவர் அணி. இவர்களால் ஆஸ்திரேலியச் சூழலை முழுமையாகப் பயன்படுத்தி எதிரணியின் பேட்ஸ்மேன்களை திணறடிக்க முடிந்தது மிகப்பெரிய சாதனை. இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. குறிப்பாக, ஜஸ்ப்ரீத் பும்ரா வீழ்த்திய 21 விக்கெட்டுகள் குறிப்பிடத்தக்கவை. ஜஸ்ப்ரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சமி ஆகிய மூவருமாக 48 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியைத் திணறடித்தார்கள். 
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும், அந்த அணியின் மிக முக்கியமான ஆட்டக்காரருமான டேவிட் வார்னரும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் தொய்வும் அனுபவமின்மையும் காணப்பட்டது. ஸ்மித்தின் இடைநீக்கம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட டிம் பெய்னின் அனுபவமின்மை அந்த அணியின் தோல்விக்குக் காரணம் என்று சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். இவையெல்லாம் இந்தியாவின் குற்றமல்ல. ஆஸ்திரேலிய அணியின் பலவீனத்தைப் பயன்படுத்தி இந்திய அணி தனது வெற்றியைச் சாதுர்யமாக நிலைநாட்டியது. 
இந்திய அணியின் வெற்றிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தும், துணைக் கேப்டன் அஜிங்க்யா ரஹானேயும் நல்கியிருக்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் பயணத்தில் சில பிரச்னைகள் இருக்காமல் இல்லை. தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜயும், கே.எல். ராகுலும் வழக்கமான உற்சாகத்துடன் விளையாடாததால் அவர்களை மாற்ற வேண்டி வந்தது. காயம்பட்டிருப்பதால் விக்கெட் கீப்பர் ரித்திமன் சாஹாவும், தொடக்க ஆட்டக்காராரர் பிருத்வி ஷாவும் அணியில் இடம்பெறவில்லை. அடிலெய்ட் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியைத் திணறடித்த சுழற்பந்து வீச்சுக்காரர் அஸ்வின் முதுகுப்பிடிப்பு காரணமாக கடைசி டெஸ்டில் விளையாட முடியவில்லை. இவற்றையெல்லாம் மீறி இந்திய அணி பெற்றிருக்கும் வெற்றி சாதாரணமானதல்ல. 
கடந்த ஆண்டு எதிர்கொண்ட தோல்விகளிலிருந்து உயிர்த்தெழுந்து இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே முதல் வெற்றியை ஈட்டியிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. ஆஸ்திரேலிய அணியை அவர்கள் மண்ணில் தோற்கடித்து டெஸ்ட் தொடர் வெற்றியுடன் இந்திய அணியின் வெற்றிப் பயணம் முடிந்துவிடக் கூடாது. கடந்த 28 ஆண்டுகளில் இதுவரை தென்னாப்பிரிக்க அணியை அவர்களது மண்ணில் இந்திய அணி டெஸ்ட் பந்தயத்தில் தோற்கடித்ததில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 
இதே உற்சாகத்துடன் அடுத்து இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்திலும் இந்திய அணி வெற்றி வாகை சூட வேண்டும். அதற்கான அச்சாரமாக ஆஸ்திரேலிய வெற்றி அமையட்டும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com