முடிவில்லா தொடர்கதை!

அயோத்தி வழக்கை ஜனவரி 10-ஆம் தேதி முதல் விசாரிப்பதற்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கடந்த

அயோத்தி வழக்கை ஜனவரி 10-ஆம் தேதி முதல் விசாரிப்பதற்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கடந்த வியாழக்கிழமை ஏற்படுத்தினார். ஐந்து பேர் கொண்ட அந்த அரசியல் சாசன அமர்வே விவாதத்துக்கு உள்ளானது என்றால், முதல் நாள் விசாரணையின்போது அந்த அமர்விலிருந்து நீதிபதி யு.யு. லலித் விலகியது மேலும் சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கிறது. 
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த வியாழக்கிழமை விசாரணையைத் தொடங்கியபோது, முஸ்லிம்களின் சார்பில் வாதிடும் மூத்த வழக்குரைஞரான ராஜீவ் தவண், 1997 நவம்பர் 20-ஆம் தேதி அயோத்தி பிரச்னை தொடர்பான வழக்கு ஒன்றில் வழக்குரைஞராக நீதிபதி லலித் வாதாடியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். உடனே, இந்த விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி லலித் தெரிவித்தார். இப்போது விசாரணை ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்திப்போடப்பட்டிருக்கிறது. 
அயோத்தியிலுள்ள ராமஜன்ம பூமி, பாபர் மசூதி தொடர்பான வழக்கு ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப் பிரதேச 
மாநிலம் பைஸாபாதில் தொடரப்பட்டது. 1989-இல் இந்த வழக்கு அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பிரச்னை மசூதியா, ராமர் கோயிலா என்பதல்ல. பாபர் மசூதி அமைந்திருக்கும் நிலத்தின் உரிமையாளர் யார் என்பதுதான், உயர்நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்த அந்த வழக்கு. அலாகாபாத் உயர்நீதிமன்றம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 2010-இல் தனது தீர்ப்பை வழங்கியது. 
அலாகாபாத் உயர்நீதிமன்றம் 88 சாட்சிகளை விசாரித்தது. இந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், அரபிக், குருமுகி, பாரசீகம், உருது என்று பல்வேறு மொழிகளிலுள்ள 227 ஆவணங்கள் உயர்நீதிமன்றத்தால் பரிசோதிக்கப்பட்டன. அதன் பிறகு 21 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 2010-இல் தனது தீர்ப்பை வழங்கியது. 
அதன் பிறகு 2010-இல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்டது. உயர்நீதிமன்றத் தீர்ப்பு பிரச்னைக்குரிய பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தையும், அதைச் சுற்றியுள்ள 2.77 ஏக்கர் பிரச்னைக்குரிய இடத்தையும் ராம் லல்லா, நிர்மோஹி அகாரா, சன்னி வக்புபோர்டு ஆகிய மூன்று வழக்குதாரர்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்திருந்தது. அந்தத் தீர்ப்புதான் உச்சநீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்டது. 
கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி பூஷண், நீதிபதி நஸீர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட அமர்வு, அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டை மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் நீதிபதி நஸீர் ஐந்து பேர் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த மேல்முறையீடு தொடர்பாக இந்துக்கள் சார்பிலும், முஸ்லிம்கள் சார்பிலும் 14 மேல்முறையீடுகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 
இந்தப் பின்னணியில்தான், 70 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னையாகத் தொடரும் அயோத்தி விவகாரம் குறித்து விசாரிக்க இப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தனது தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, என்.வி. ரமணா, யு.யு. லலித், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் அமர்வு விசாரிக்கும் என்று அறிவித்தார். இப்போது அந்த ஐந்து பேரில் ஒருவரான நீதிபதி லலித் விலகிக் கொண்டிருக்கும் நிலையில், அவருக்குப் பதிலாக இன்னொரு நீதிபதியை தலைமை நீதிபதி நியமிக்க வேண்டும். 
அயோத்தி பிரச்னை குறித்து விசாரிக்க எத்தனை பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட வேண்டும் என்பதில் ஆரம்பம் முதலே கருத்துவேறுபாடு நிலவி வருகிறது. பொதுவாக நிலத்தகராறு குறித்த பிரச்னைகளை உச்சநீதிமன்றத்தில் இரண்டு பேர் கொண்ட அமர்வுதான் விசாரிக்கும். அயோத்தி வழக்கு முக்கியமானது என்பதால், தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மூன்று பேர் கொண்ட அமர்வை அமைக்க ஒப்புக்கொண்டது. தீபக் மிஸ்ரா அமர்வின் உத்தரவை நிராகரித்து, இப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஐந்து பேர் கொண்ட அமர்வை ஏற்படுத்தியதை சிலர் விமர்சிக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற விதிகளின்படி தலைமை நீதிபதியால் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டுக்கும் குறையாத நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்தந்த வழக்குகள், மேல்முறையீடுகள், பிரச்னைகள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரிக்கும். இரண்டுக்கும் குறையாத நீதிபதிகள் கொண்ட அமர்வு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர, மூன்று நீதிபதிகளா, ஐந்து நீதிபதிகளா, அதற்கும் மேற்பட்ட நீதிபதிகளா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு உண்டு என்று இதற்கு விளக்கம் கூறுகிறார்கள் விவரமறிந்த நீதித் துறையினர். 
தலைமை நீதிபதி உடனடியாக இன்னொரு நீதிபதியை அமர்வில் சேர்த்துக் கொண்டாலும்கூட, ஜனவரி 29 முதல் தொடங்கும் விசாரணை மக்களவைத் தேர்தலுக்கு முன்னால் நிச்சயமாக 
முடிவுக்கு வராது. ஏப்ரல் மாதம் நீதிமன்ற விடுமுறை தொடங்கிவிடும். இடைப்பட்ட 12 வாரங்களில், வாரத்துக்கு மூன்று நாள்கள்தான் அரசியல் சாசன அமர்வு கூடும். 
அதனால், அயோத்தி ராமஜன்ம பூமி பிரச்னை தேர்தல் பிரச்னையாக இருக்கப் போவதில்லை. இப்போதைக்கு இதற்கு முடிவு எட்டப்படும் வாய்ப்பும் இல்லை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com