எங்கேயோ இடிக்கிறது...

மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த அலோக் குமார் வர்மாவின் பதவிக்காலம் இந்த மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது.

மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த அலோக் குமார் வர்மாவின் பதவிக்காலம் இந்த மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. சிபிஐ-யின் இயக்குநர் அவரது இரண்டாண்டு பதவிக்காலம் முடிவடைவது வரை அகற்றப்படக் கூடாது, மாட்டார் என்பது பொதுவான விதி. அலோக் குமார் வர்மாவைப் பொருத்தவரை இந்த விதி மீறப்பட்டிருக்கிறது. மத்திய அரசு தான் விரும்பியதுபோலவே அலோக் குமார் வர்மாவை அந்தப் பதவியிலிருந்து முறைப்படி அகற்றி வெற்றி கண்டிருக்கிறது.
 மத்திய அரசுக்கும் சிபிஐ தலைமை இயக்குநர் அலோக் குமார் வர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. அலோக் குமார் வர்மாவின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ராகேஷ் அஸ்தானாவை சிபிஐ-யின் சிறப்பு இயக்குநராக நியமித்தபோதே அது அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது தெரிந்தது.
 சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது மற்றொருவர் லஞ்சக் குற்றச்சாட்டை முன் வைத்தனர். சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்ட ராகேஷ் அஸ்தானாவின் உத்தரவின் பேரில் அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக தலைமை இயக்குநர் அலோக் குமார் வர்மாவின் உத்தரவின்படி லஞ்ச ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
 இருவருக்குமிடையேயான மோதல்போக்கு உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து இருவரும் பொறுப்பிலிருந்து விடுக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
 இந்தப் பின்னணியில்தான் மத்திய புலனாய்வுத் துறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தை எட்டியது. தன்னைக் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து அலோக் குமார் வர்மா உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
 மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து, அலோக் குமார் வர்மா மீண்டும் சிபிஐ-யின் தலைமை இயக்குநராக பணி ஏற்றுக்கொள்வதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது. கட்டாய விடுப்பில் அலோக் குமார் வர்மா அனுப்பப்பட்டது தவறு என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அவரை நிபந்தனை இல்லாமல் மீண்டும் பதவியில் தொடர அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், அவர் கொள்கை முடிவுகள் எதுவும் எடுக்காமல் அன்றாட அலுவல்கள் மட்டுமே கவனிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்ததன் காரணம், இப்போதுதான் தெரிகிறது.
 பிரதமர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவர் அடங்கிய குழுவால் பதவியில் அமர்த்தப்படும் சிபிஐ-யின் தலைமை இயக்குநரை விடுப்பில் அனுப்புவதையோ, பதவி நீக்கம் செய்வதையோ மத்திய அரசு தன்னிச்சையாகச் செய்ய முடியாது என்பதுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு. அலோக் குமார் வர்மாவுக்கு முழு அதிகாரம் வழங்குவது தொடர்பாக பிரதமர் தலைமையிலான குழு ஒருவாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
 77 நாள் விடுப்புக்குப் பிறகு மீண்டும் தனது பணியைத் தொடங்கிய மத்திய புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குநர் அலோக் குமார் வர்மா, இரண்டாவது நாளே பதவியிலிருந்து அகற்றப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் பதவியேற்ற மறுநாளே பிரதமர் தலைமையில் உயர்நிலைக் குழு கூடி, அவருக்கு பணியிட மாற்றம் வழங்கியது. பிரதமரும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் பிரதிநிதியான நீதிபதி ஏ.கே. சிக்ரியும் இந்த முடிவை ஆதரித்தனர்.
 முடிவெடுப்பதற்கு முன்னால், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க சிபிஐ தலைமை இயக்குநர் அலோக் குமார் வர்மாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது, உயர்நிலைக் குழுவின் மூன்றாவது உறுப்பினரான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்து. அவரது கருத்தை எழுத்து மூலம் வழங்கும்படி தெரிவித்து, அலோக் குமார் வர்மாவைப் பணியிட மாற்றம் செய்ய உயர்நிலைக்குழு முடிவெடுத்தது.
 அலோக் குமார் வர்மாவின் பதவிப் பறிப்பு சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அரசியல் தலையீடு இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டிய மத்திய புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குநரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மறைமுகமாக மத்திய அரசுக்கு வழங்கப்படுவது சரிதானா என்பதுதான் முக்கியமான கேள்வி.
 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில், நியமனக்குழு அலோக் குமார் வர்மாவைப் பணியிட மாற்றம் செய்யும் முடிவை எடுத்திருக்கிறது. அலோக் குமார் வர்மாவுக்கு எதிரான மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பெற்றிருந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக்கின் மேற்பார்வையில்தான் அந்த விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. தனது அறிக்கையில் அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக விசாரணைக்கான முகாந்திரம் இல்லை என்று நீதிபதி பட்நாயக் குறிப்பிட்டிருந்தும்கூட, அதை ஏன் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் அலோக் குமார் வர்மாவுக்குச் சாதகமாகக் குறிப்பிடவில்லை?
 இதையே முன்னுதாரணமாக்கி, சிபிஐ உள்ளிட்ட முக்கியமான பதவிகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்குச் சாதகமாக செயல்படாவிட்டால், ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் அவர்களைப் பதவியிலிருந்து அகற்ற, வருங்காலத்தில் மத்திய ஆட்சியாளர்கள் முற்படமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com