ஜனநாயகமல்ல, பணநாயகம்!

ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு (அசோசியேஷன் ஃபார் டெமாக்ரட்டிக் ஃபோரம்) என்கிற தன்னார்வ அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.


ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு (அசோசியேஷன் ஃபார் டெமாக்ரட்டிக் ஃபோரம்) என்கிற தன்னார்வ அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கை அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்களைத் தெரிவிக்கிறது. 2017-18 நிதியாண்டில் ரூ.20,000-க்கும் அதிகமாக 4,201 நன்கொடைகள் தேசிய கட்சிகளால் பெறப்பட்டிருக்கின்றன. அந்த நன்கொடைகளின் அளவு ரூ.469. 89 கோடி என்னும்போது நம்மால் எப்படி அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியும்?
கடந்த நிதியாண்டில் பெறப்பட்ட ரூ.20,000-க்கும் அதிகமான நன்கொடையில், பெருமளவு நன்கொடை ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்குத்தான் தரப்பட்டிருக்கிறது. பாஜகவுக்கு ரூ.437.04 கோடி நன்கொடை கிடைத்திருக்கிறது என்றால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ரூ.26.66 கோடி நன்கொடை கிடைத்திருக்கிறது. இதில் வியப்படைய ஒன்றுமில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது, இதே அளவில் அந்தக் கட்சி நன்கொடை பெற்றது என்பதை இங்கே பதிவு செய்ய வேண்டும். 
கார்ப்பரேட் மற்றும் தொழில்துறையின் சார்பில் 1,361 நன்கொடைகள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. ரூ.422.04 கோடி அளவிலான இந்த நன்கொடை, மொத்த அரசியல் நன்கொடையில் 89.82 சதவீதம். 2017-18-இல் தனி நபர்களால் வழங்கப்பட்ட அரசியல் நன்கொடைகள் 2,772. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மிக அதிகமான நன்கொடை வழங்கியிருப்பது புரூடண்ட் தேர்தல் அறக்கட்டளை என்று தெரிவிக்கிறது ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பின் அறிக்கை. 
அரசியல் நன்கொடைகள் என்பதை அதிகாரப்பூர்வ கையூட்டு என்றுதான் கருத வேண்டும். ஆளுங்கட்சியாக இருக்கும் அரசியல் கட்சிக்கு அதிக அளவில் நன்கொடை குவிகிறது என்றால், அது கட்சியின் மீதான ஈடுபாட்டுக்காக வழங்கப்படுவதில்லை என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்தும், தொழில்துறையினரிடமிருந்தும், தனியாரிடமிருந்தும் கட்சி ரீதியான நன்கொடை என்கிற பெயரில் கையூட்டு பெறும் இழிநிலையை மாற்ற எந்தவோர் அரசியல் கட்சியும் தயாராக இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை. 
அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்திடமிருந்து கடந்த 2009-இல் அன்றைய ஆளுங்கட்சியான காங்கிரஸும் எதிர்க்கட்சியான பாஜகவும் அந்நியச் செலாவணியில் நன்கொடை பெற்றன. 2014-இல் தில்லி உயர்நீதிமன்றம் அப்படி நன்கொடை பெற்றது சட்டவிரோதம் என்று கூறித் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில்தான் வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறுவதற்கான சட்ட விதிமுறைகளை 1976-லிருந்து பின்நோக்கி திருத்தி எழுத இப்போதைய மத்திய அரசு முற்பட்டது. உச்சநீதிமன்றத்தில் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தில் 1976-லிருந்து பின்நோக்கி கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
அந்நியச் செலாவணி மூலம் தாங்கள் பெற்ற நன்கொடைகளைச் சட்டப்பூர்வமாக்குவதற்காக 2018 நிதிச் சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டுவர முற்பட்டிருக்கிறது என்று அந்தப் பொதுநல வழக்கு குற்றஞ்சாட்டுகிறது. 2018 நிதிச் சட்டத்தில் அரசு உட்படுத்திய திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டன. நிதி மசோதாவுக்கு மாநிலங்களவையின் ஒப்புதல் தேவையில்லை என்பதால், மக்களவைப் பெரும்பான்மையின் அடிப்படையில் அந்தத் திருத்தங்கள் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. 
வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறுவது என்பது இரண்டு வகையானது. இந்தியாவில் பெறப்படும் ஊழல் பணம் வெளிநாட்டிலிருந்து நன்கொடை என்கிற பெயரில் அரசியல் கட்சிகளின் கணக்கில் கொண்டுவரப்பட்டு அவை சட்டப்பூர்வமாக்கப்படுகிறது. இரண்டாவதாக, இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களுக்குச் சாதகமான அரசின் உத்தரவுகளுக்காக அந்நியச் செலாவணியில் கையூட்டுப் பணத்தை கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்குகின்றன. இதன் மூலம் பல போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, பினாமி பரிமாற்றங்கள் நடத்தப்படுவது ஊக்குவிக்கப்படுகிறது. இப்படி வழங்கப்படும் நன்கொடைகள் யாரால், எதற்காக வழங்கப்படுகின்றன என்பது குறித்து விசாரிப்பதற்கான விதிமுறைகள் இதுவரையில் இல்லை. 
ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் அரசியல் நன்கொடைகள் பிரச்னையில் தொடர்ந்து இரட்டை வேடம் போடுகின்றன. ஏனைய அரசியல் கட்சிகள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. வெளித்தோற்றத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கருப்புப் பணம் குறித்தும், ஊழல் குறித்தும் எல்லா அரசியல் கட்சிகளும் நியாயவான்கள் போலத் தங்களைக் காட்டிக் கொண்டாலும், உண்மையில் நன்கொடை குறித்த வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதிலோ, சட்ட ரீதியாக நன்கொடைகளை நெறிப்படுத்துவதிலோ எந்தவோர் அரசியல் கட்சிக்கும் அக்கறை இல்லை.
வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தில் கடந்த 2018 நிதிச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் திருத்தங்கள் தெளிவாகத் தெரிவிக்கும் உண்மை என்னவென்றால், இந்தியாவில் சாமானிய குடிமகனுக்கு ஒரு விதியும், அரசியல் கட்சிகளுக்கு இன்னொரு விதியும் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதுதான். வெளிப்படைத் தன்மையில்லாத அரசியல் நன்கொடைகள் அனுமதிக்கப்படும் வரை, இந்திய ஜனநாயகம் பணநாயகமாகத்தான் இருக்கும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com