இடஒதுக்கீட்டு மாயமான்!

பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பொதுப்பிரிவினருக்குக் கல்வியில் 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.


பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பொதுப்பிரிவினருக்குக் கல்வியில் 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. வர இருக்கும் கல்வி ஆண்டில் இந்தியாவிலுள்ள 40,000 கல்லூரிகளில் 10% கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருக்கிறார். பொதுத் தேர்தலுக்கு முன்பு கல்வியாண்டு தொடங்கி விடாது என்றாலும்கூட, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் 10% இடஒதுக்கீட்டு முடிவு அமல்படுத்தப்படுகிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயம் பிரதமருக்கும் பாஜகவுக்கும் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தியாவிலுள்ள 40,000 கல்லூரிகள், 900 பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் நிகழ் கல்வியாண்டிலேயே 10% இடஒதுக்கீடு பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பொதுப்பிரிவைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டாக வேண்டும் என்று அரசு முனைப்புக் காட்டுவது ஒருபுறம் இருந்தாலும், அதன் நடைமுறைச் சாத்தியம் குறித்து ஐயப்பாடு எழுகிறது. அதிக மதிப்புச் செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவும், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு தழுவிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கையும் போலவே, அரசின் இந்த முடிவும் போதுமான அளவு முன்யோசனையும் திட்டமிடப்படாமலும் வற்புறுத்தப்படுகிறது என்றுதான் தோன்றுகிறது. முறையான அடிப்படைக் கட்டமைப்பு வசதியையும், நிதியாதாரத்தையும், திட்டமிடுதலையும் செய்யாமல் 10% இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்தியாக வேண்டும் என்று வற்புறுத்துவது செயல்வடிவம் பெறுமா என்பது சந்தேகம்தான்.
இதற்கு முன்னால் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கடந்த 2006-இல் பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீட்டை அறிவித்தபோதும், இதேபோல பிரச்னையைக் கல்வி நிறுவனங்கள் எதிர்கொண்டன. அப்போது, தேவையான நிதியுதவியை பல்கலைக்கழக மானியக் குழு வழங்கியது. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 10% இடஒதுக்கீட்டிற்குத் தேவையான நிதியை அந்தந்தக் கல்வி நிறுவனங்களே தேடிக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதுதான் இந்த முடிவின் நடைமுறைச் சாத்தியத்தை கேள்விக்குறியாக்குகிறது. 
10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் 10% கூடுதல் இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம் என்று பிரதமர் அறிவித்திருக்கிறார். கூடுதல் மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இதற்குத் திட்டமிடலும், தயாரிப்பும் தேவை. நிதியாதாரம், இட வசதி, கட்டமைப்பு வசதி என்று ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டாக வேண்டும். 
பல்கலைக்கழகங்கள் புதிய நிதியாதாரங்களைப் பெருக்கிக் கொள்வது எளிதல்ல. ஏற்கெனவே கல்விக் கட்டணம் மிக அதிகமாக இருக்கும் நிலையில், கட்டண அதிகரிப்பு என்பது சாத்தியமல்ல. கடந்த ஆண்டு 14 புதிய பாடத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டும்கூட, பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து நிதியுதவி கிடைக்காததால் அந்தப் பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 
கல்வி நிறுவனங்களில் 10% இடங்கள் அதிகரிக்கப்படுவது மட்டுமே பிரச்னைக்குத் தீர்வாகாது. அதிகரிக்கப்பட்ட இடங்களுக்குப் போதுமான மாணவர் சேர்க்கை கிடைக்க வேண்டும். வகுப்பறை வசதிகளை அதிகரிப்பதுடன், தங்குமிட வசதியும் அதிகரிக்கப்பட்டாக வேண்டும். இவற்றையெல்லாம் சமாளித்தாலும்கூட, தேவையான ஆசிரியர்கள் கிடைப்பது என்பது எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தகுதியும் திறமையும் உள்ள ஆசிரியர்கள் இல்லாமல் ஏற்கெனவே திணறுகின்றன. கல்வியின் தரம் குறைந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது 10% அதிக இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுமானால், அதைக் கல்வி நிறுவனங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பது குறித்துப் போதுமான முன்யோசனை செய்யப்படவில்லை. 
ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மிக அதிகமாக பாதிக்கப்படலாம். இப்போதைய சமநிலை நீடிக்க வேண்டுமானால், அவை 25% அளவுக்கு கூடுதலாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகளையும், தேவையான ஆசிரியர்களையும் அந்த நிறுவனங்கள் தயார் செய்வதற்குக் குறைந்தது ஓர் ஆண்டாவது தேவைப்படும். ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பொதுப்பிரிவினருக்கான வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் என்றாலும்கூட, உயர்கல்வி நிறுவனங்களின் அதிகமான கல்விக் கட்டணத்தைச் செலுத்தி அவர்களால் ஒதுக்கீட்டு இடங்களில் சேர முடியுமா என்பது சந்தேகம். 
வர இருக்கும் கல்வி ஆண்டிலேயே 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்கிற பிரதமரின் முனைப்பும், அரசின் முடிவும் இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. வர இருக்கும் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் அடுத்தக் கல்வி ஆண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டிய அவலத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
அரசியல் தலைமைகள் இடஒதுக்கீடு என்கிற மாயமானைக் காட்டி வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வது போல, கல்வி நிறுவனங்களால் இடஒதுக்கீட்டைக் காரணம் காட்டி இடங்களை அதிகரித்துக்கொள்ள முடியாது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com