வெளிநாடுவாழ் தூதுவர்கள்!

பிரவாசி பாரதிய திவஸ் என்று அழைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் மூன்று நாள் மாநாடு வாராணசியில்

பிரவாசி பாரதிய திவஸ் என்று அழைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் மூன்று நாள் மாநாடு வாராணசியில் இன்று நிறைவு பெறுகிறது. 15-ஆவது வெளிநாடுவாழ் இந்தியர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள உலகெங்கிலுமிருந்து 6,000-த்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் பெருமையுடன் வாராணசியில் கூடியிருக்கிறார்கள்.
கடல் கடந்து பிற நாடுகளுடன் இந்தியா தொடர்பு வைத்துக்கொள்வதும், பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் குடியேறுவதும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே நடைபெறுகிறது என்பதை வரலாறு உணர்த்துகிறது. கிறிஸ்துவுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் கனிஷ்கரின் காலத்திலேயே வெளிநாடுகளில் இந்தியர்கள் குடியேறுவது என்பது தொடங்கிவிட்டிருக்கிறது. 
1834 முதல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்றத் தொடங்கியது முதல் இங்கிருந்து தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. பிரிட்டிஷார் மட்டுமல்லாமல், பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியும் அதேபோல இந்தியத் தொழிலாளர்களைத் தங்களது ஆதிக்கத்துக்கு உட்பட்ட காலனிகளில் கொத்தடிமைகளாக வேலை செய்ய அழைத்துச் சென்றது. அப்படிச் சென்றவர்கள்தான் பிஜி தீவு, மேற்கிந்தியத் தீவு, தென்னாப்பிரிக்கா, இலங்கையின் மலையகப் பகுதி, மலேசியா, மியான்மர் (பர்மா) ஆகிய நாடுகளுக்கு தோட்டத் தொழிலாளிகளாகச் சென்றவர்கள். 
இப்படி அழைத்துச் செல்லப்பட்டு அங்கு குடியேறியவர்கள் இந்திய வம்சாவளியினர் என்றும், வெளிநாட்டுப் பிரஜைகளான இந்தியர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இதுபோல வெளிநாடுகளில் நூற்றாண்டு காலமாகக் குடியேறி அந்த நாடுகளின் பிரஜைகளாக வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடி. 
இவர்களல்லாமல், உலகெங்கிலும் ஏறத்தாழ 1.32 கோடி இந்தியர்கள், இந்தியக் குடியுரிமையுடன் வாழ்கிறார்கள். அவர்களைத்தான் வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) என்று அழைக்கிறோம். அரை நூற்றாண்டு காலத்துக்கும் முன்னால் இந்தியாவிலிருந்து வேலைவாய்ப்புத் தேடி வெளிநாடுகளில் குடியேறியவர்கள் இவர்கள். இப்போதும் இந்தியாவிலுள்ள தங்கள் குடும்பத்தினருடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ளாமல், இந்தியக் குடிமக்களாகவே இருப்பவர்கள்.
மத்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரத் துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, உலகெங்கிலுமுள்ள 208 நாடுகளில் ஏறத்தாழ 3.32 கோடி இந்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 70% பேர் ஒன்பது நாடுகளில் இருப்பதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அமெரிக்கா (46.6 லட்சம்), சவூதி அரேபியா (40 லட்சம்), மலேசியா (24 லட்சம்), ஐக்கிய அரபு அமீரகம் (28 லட்சம்) என்று வெளிநாடுவாழ் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். 
வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்கள், அவர்கள் குடியேறிய நாடுகளை மேம்படுத்தி இருக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், அந்த நாடுகளில் தங்களது ஆளுமையை நிலைநாட்டியும் இருக்கிறார்கள். ஏறத்தாழ 11 நாடுகளில், 28 இந்திய வம்சாவளியினர் அந்த நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். சிங்கப்பூரின் நாயர், நாதன், மோரீஷஸ் தீவின் பிரவீண் ஜகந்நாத், மலேசியாவின் மகாதீர் முகமது, போர்ச்சுகல் நாட்டின் அந்தோனியோ போஸ்டா, நெதர்லாந்தின் லியோ வரத்கர் என்று ஒரு மிகப் பெரிய பட்டியலே இருக்கிறது. 
அதுமட்டுமல்லாமல் எத்தனையோ இந்திய வம்சாவளியினர் பல்வேறு நாடுகளில் அமைச்சர்களாகவும், நீதிபதிகளாகவும் இருந்திருக்கிறார்கள். சுமார் 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 20-க்கும் அதிகமான மாநகர மேயர்கள் என்று 20-க்கும் அதிகமான நாடுகளில் இந்திய வம்சாவளியினர் பதவி வகித்திருக்கின்றனர்.
இந்திய வம்சாவளியினரின் மொத்த சொத்து மதிப்பு என்று எடுத்துக் கொண்டால், ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகம். ஆண்டுதோறும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் தங்களது குடும்பத்துக்கு அனுப்பும் பணத்தின் அளவு 70 பில்லியன் டாலர். உலகிலேயே தங்களது நாட்டுக்கு மிக அதிகமாகப் பணம் அனுப்பும் நாட்டினர் இந்தியர்கள்தான் என்கிறது 2014-இல் வெளியாகி இருக்கும் உலக வங்கியின் அறிக்கை.
இப்போது சீனா இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம், வெளிநாடுவாழ் சீனர்களின் அந்நிய நேரடி முதலீடுதான். இந்தியா அடுத்த ஆறேழு ஆண்டுகளில் தனது ஜிடிபியை இரட்டிப்பாக்கி ஐந்து டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அந்த இலக்கை எட்ட வேண்டுமானால் சீனாவைப் போலவே, வெளிநாடுவாழ் இந்தியர்களையும், இந்திய வம்சாவளியினரையும் நாம் துணை சேர்த்துக் கொண்டால் மட்டுமே அது சாத்தியம் ஆகும். 
அவர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு உதவ வேண்டும், தங்களது தொப்புள் கொடி உறவைத் தொடர வேண்டும் என்று நாம் விரும்பினால் நாமும் அவர்களுக்காக சில சிறப்புச் சலுகைகளைச் செய்தாக வேண்டும். ஐ.நா. சபையின் 194 நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, ஜெர்மனி, வங்க தேசம், இலங்கை, பாகிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட 114 நாடுகள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற தங்கள் பிரஜைகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கியிருக்கின்றன. 115 நாடுகள் அவர்களுக்கு வாக்குரிமை வழங்கியிருக்கின்றன. 
ஆண்டுதோறும் வெளிநாடுவாழ் இந்தியர்களையும், இந்திய வம்சாவளியினரையும் அழைத்து கெளரவிப்பதுடன் நமது கடமை முடிந்துவிடுவதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் வெளிநாடுவாழ் இந்தியத் தூதர்கள் என்பதை நாம் உணரவும் வேண்டும், அவர்களுக்கு உணர்த்தவும் வேண்டும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com