பயனளிக்குமா பிரம்மாஸ்திரம்?

எல்லா வழிமுறைகளையும்

எல்லா வழிமுறைகளையும் கையாண்டு அத்தனையும் பலனளிக்காமல் போகும் நிலையில்தான் போர் முனையில் பிரம்மாஸ்திரத்தைக் கையில் எடுப்பார்கள். பிரம்மாஸ்திரம் இலக்கு தவறக்கூடாது. தவறினால், இரண்டாவது முறை பயன்படுத்த முடியாது. இப்போது காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் என்கிற பிரம்மாஸ்திரத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

இத்தனை நாளும் இல்லாமல் இப்போது மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், பிரியங்கா காந்தியை அகில இந்தியப் பொதுச் செயலாளராக்கி, கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பொறுப்பாளராக நியமித்திருப்பது யாரும் எதிர்பார்க்காத திருப்பம்.

அரசியலில் களம் இறங்கும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த 10-ஆவது நபர் இவர். மோதிலால் நேருவில் தொடங்கி இதற்கு முன்னால், ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, மேனகா காந்தி, ராகுல் காந்தி, வருண் காந்தி என்று அரசியல் பிரவேசம் நடத்திய நேரு குடும்பத்தினர் ஒவ்வொருவரும்  மக்களின் அங்கீகாரத்துடன் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதிலிருந்து இந்தியாவில் நேரு குடும்பத்தின் மீதான விசுவாசம் தொடர்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் கட்சி ரீதியாக மட்டும்தான் இருக்குமா அல்லது அவர் தேர்தல் களத்தில் குதிப்பாரா என்பதை மக்களவைக்கான காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல்தான் வெளிப்படுத்தும்.

பிரியங்கா காந்தி நேரடி அரசியலில் ஈடுபடாவிட்டாலும் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து தன் தாயார் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியிலும்,  சகோதரர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியிலும் அவர்கள் சார்பில் கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்து வந்திருக்கிறார். எல்லா அரசியல் பிரச்னைகளிலும் திரைக்குப் பின்னால் அவரது பங்களிப்பு காங்கிரஸýக்கு இருந்திருக்கிறது. இதற்கு முன்னால் பலமுறை அவரது அரசியல் பிரவேசம் குறித்த  செய்திகள் வெளிவந்தபோதெல்லாம் அதை நிராகரித்த பிரியங்கா காந்தியும், சோனியா குடும்பத்தினரும் இப்போது பிரியங்காவை அரசியல் களத்தில் நேரடியாக இறக்கி இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது முதலே ஏனைய மாநிலங்களிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்கிற குரல் எழுப்பப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசம், தில்லி, மேற்கு வங்கம், பிகார், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தனித்துப் போட்டியிடுவதற்கான முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. காங்கிரûஸ மாநிலக் கட்சிகள் மதிக்காமல் இருக்கும் போக்கு அதற்கு முக்கியமான காரணம். 

மக்களவைத் தேர்தலில் போட்டியிட உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மொத்தமுள்ள 80 இடங்களில் 76 இடங்களை, தலா 38 இடங்கள் வீதம் பிரித்துக்கொண்டு கூட்டணி அறிவித்திருக்கின்றன. ராஷ்ட்ரீய லோக்தளத்துக்கு 2 இடங்களும், காங்கிரஸýக்கு சோனியாகாந்தியும் ராகுல் காந்தியும் போட்டியிடும் ரேபரேலி, அமேதி ஆகிய 2 இடங்களும் மட்டுமே  ஒதுக்கப்பட்டிருக்கின்றன.  

காங்கிரஸ் பலமாக இருக்கும்  ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சியையும் பகுஜன் சமாஜ் கட்சியையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாமல் காங்கிரஸ் தவிர்த்ததைப் போல, இப்போது உத்தரப் பிரதேசத்தில் அந்தக் கட்சிகள் காங்கிரûஸத் தவிர்க்க முற்பட்டிருக்கின்றன. இதன் எதிரொலிதான் உத்தரப் பிரதேசத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது என்கிற முடிவும், இப்போது பிரியங்கா காந்தியை நேரடியாகக் களமிறக்கி இருப்பதும்.

1989-க்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில்,  தான் இழந்த செல்வாக்கை மீட்டு காங்கிரஸôல் இதுவரை ஆட்சி அமைக்க முடிந்ததில்லை. 2009-ஆம் ஆண்டு தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டபோது, காங்கிரஸ் 21 மக்களவைத் தொகுதிகளில்  வெற்றி பெற்றது. ஆனால், தொடர்ந்து வந்த இரண்டு சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் 2014 மக்களவைத் தேர்தலிலும் மிகப்பெரிய பின்னடைவைத்தான்  காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 

காங்கிரஸின் வாக்கு வங்கிகளாக இருந்த உயர் ஜாதியினர், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள் ஆகியோர் காங்கிரûஸக் கைவிட்டதுதான் அதற்குக் காரணம். பெளத்த மதத்தைப் பின்பற்றும், கிறிஸ்தவர் ஒருவரின் மனைவியான பிரியங்கா காந்தியின் வரவால் சிறுபான்மையினரும், பட்டியல் இனத்தவர்களும் மீண்டும் காங்கிரஸýக்கு ஈர்க்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் தலைமை (ராகுல் காந்தி) எதிர்பார்க்கிறதோ என்னவோ? 

பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்துக்கு இன்னொரு காரணமும்கூட இருக்கலாம். அவருடைய கணவர் ராபர்ட் வதேராவின் மீதான பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தை எட்டியிருக்கின்றன. நீதிமன்றத் தீர்ப்பு அவருக்கு எதிராகத் தரப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்தைத் தொடர்ந்து எடுக்கப்படும் பழிவாங்கும் நடவடிக்கையாக சித்தரிக்கப்படலாம்.

2019 மக்களவைத் தேர்தலின் முக்கிய நிகழ்வாக பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் குறிப்பிடப்படும் என்பது மட்டும் நிச்சயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com