தேர்தலுக்காக...

மத்திய அரசின் வர்த்தகம்

மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கடந்த மாதம் இணைய வணிகம் குறித்த கொள்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாற்றங்கள் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன. வர இருக்கும் மக்களவைத் தேர்தலை மனதில் கருதி செய்யப்பட இருக்கும் இந்த விதிமுறை மாற்றங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துவரும் இணைய வணிகத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். 
இணைய வணிக நிறுவனங்கள், அவர்களது நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பொருள்களின் தயாரிப்பு நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பதோ அல்லது அவற்றின் நேரடி உரிமையாளராகவோ இருப்பது தடை செய்யப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் அதிக அளவிலான விலைக் குறைப்போ, தள்ளுபடியோ செய்வது தடுக்கப்படும். 
அதுமட்டுமல்லாமல், தங்களுக்கென்று எந்த ஒரு பொருளுக்கும் முழுமையான விற்பனை உரிமையை ஏற்படுத்திக்கொள்வதும் தடுக்கப்படும். குறிப்பாக, இந்தியாவின் மொத்த இணைய வணிகத்தில் சரிபாதி அளவிலான விற்பனைக்கு வழிகோலும் அறிதிறன் பேசிகளின் விற்பனை பாதிக்கப்படலாம். இணைய வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அரசின் இந்த விதிமுறை மாற்றங்களால் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். 
அமேசான் நிறுவனத்தின் மூலம் இணைய வழியில்  வாடிக்கையாளர்களால் கோரப்படும் பொருள்கள் பெரும்பாலும் "கிளவுட் பேர்ட்' அல்லது "ஆதாரியோ ரீடெய்ல்' என்கிற இரண்டு நிறுவனங்களிலிருந்துதான் பெறப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் தாங்கள் கோரி பெரும் பொருள்கள் எல்லாம் அமேசானிடமிருந்து நேரடியாக வாங்குவதாக நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு யாரிடமிருந்து வாங்குகிறார்கள் என்பதைவிட, வீட்டிலிருந்தபடியே சுலபமாக சந்தை விலையைவிடக் குறைவாகப் பொருள்கள் கிடைக்கின்றன என்பதுதான் முக்கியம். 
அது அமேசான் இந்தியாவானாலும், பிளிப்கார்ட் நிறுவனமானாலும் அவை இரண்டுமே அந்நிய நிறுவனங்கள். இந்தியாவில் அந்த நிறுவனங்கள் இணைய வணிகச் சந்தைகளாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, சில்லறை விற்பனை நிறுவனங்களாக செயல்படுவதற்கான அனுமதி தரப்படவில்லை. அதற்குக் காரணம், இந்தியாவிலுள்ள நேரடி சில்லறை விற்பனையாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். 
2012 முதல் 2017 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் இணைய வணிகம் 11 பில்லியன் டாலரிலிருந்து 36 பில்லியன் டாலராக உயர்ந்தது. 2022-க்குள் இந்தியாவின் இணைய வணிகத்தின் வளர்ச்சி 150 பில்லியன் டாலரை எட்டக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் அடிப்படையில்தான் சேமிப்புக் கிடங்குகள், விநியோக மையங்கள், சரக்குகள் கொண்டு செல்வதற்கான வாகன வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு தேவைகளில் பெரிய அளவிலான முதலீடு செய்யப்படுகிறது, செய்யப்பட்டிருக்
கிறது. 
பொருள்களைத் தயாரிப்பாளரிடமிருந்து  வாங்குவது, தரம் பிரித்து விற்பனைக்குத் தயார் செய்வது, சரக்குகளை லாரிகள் மூலம் கொண்டு சேர்ப்பது, கடைசியாக வாடிக்கையாளர்களுக்கு அவரவர் இடத்தில் அவர்கள் கேட்ட பொருள்களை நேரில் வழங்குவது ஆகியவற்றுக்காக ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் மத்திய அரசின் கொள்கை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடும்.
இணைய வணிகச் சந்தை என்பது பல்வேறு உற்பத்தியாளர்கள் தங்கள் பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும்  நிறுவனமாக மட்டுமே செயல்பட வேண்டும். அதாவது, உற்பத்தியாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே பாலமாகச் செயல்படும் பணியில் ஈடுபடுவது மட்டுமே அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணைய நிறுவனங்களின் செயல்பாடாக இருக்க வேண்டும். அதனால், இணைய வணிகச் சந்தையாக செயல்படும் நிறுவனம், தான் விற்பனை செய்யும் பொருள்களின் தயாரிப்பாளராகவோ, அந்த பொருள்களின் மீது கட்டுப்பாடு செலுத்துபவர்களாகவோ இருக்கக் கூடாது. அதாவது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் கிளவுட் பேர்ட், ஆதாரியோ ரீடெய்ல் ஆகிய நிறுவனங்களின் பொருள்களை அமேசான் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடியாது.
அரசின் புதிய விதிமுறைகள், இந்தியாவில் பெரிய அளவிலான இணைய வழி சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வால்மார்ட் பன்னாட்டு நிறுவனத்தின் கனவுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. இந்தியாவில் 5 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் அமேசான் நிறுவனத்தின் தீர்மானமும், பிளிப்கார்ட் நிறுவனத்தில் 77% பங்குகளை 16 பில்லியன் டாலருக்கு வாங்கும் வால்மார்ட் நிறுவனத்தின் முடிவும் வெறும் இணையதள வர்த்தகச் சந்தையாக செயல்படுவதற்காக செய்யப்பட்டதல்ல. 
மற்றவர்களின் பொருள்களை விற்பனை செய்து கொடுப்பதல்ல அவர்களின் நோக்கம். இணையதள வர்த்தகச் சந்தையாக செயல்படத் தொடங்கி, அடுத்தகட்டமாக வாடிக்கையாளர்களுக்கு நேரடி சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்படும் என்கிற புரிதலில்தான் அந்த நிறுவனங்கள் இந்த அளவிலான முதலீட்டை செய்ய முன்வந்திருக்கின்றன. 
செலாவணி செல்லாததாக்கப்பட்டது, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ஆகியவற்றால் பாஜகவின் நிரந்தர வாக்கு வங்கியாக இருக்கும் சில்லறை நேரடி வணிகர்களும்  மொத்த வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த புதிய விதிமுறைகள் கோடிக்கணக்கான இந்தியாவின் நேரடி சில்லறை விற்பனையாளர்களை வர இருக்கும் மக்களவைத் தேர்தலுக்காக சமாதானப்படுத்தவும் மகிழ்ச்சி அடையச் செய்யவும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 
அரசியல் காரணங்களுக்காக, வர்த்தகக் கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்துவது அந்நிய முதலீட்டை மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com