பாரதத்தின் ரத்தினங்கள்!

மூன்று ஆண்டு இடைவெளிக்குப்

மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மூன்று பேருக்கு "பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் சரி, மறைந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரும், அனைவராலும் மதிக்கப்பட்ட சிறந்த சமூக சேவகருமான நானாஜி தேஷ்முக்கும் சரி, தேசத்தின் உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட வேண்டியவர்கள்.

ஏற்கெனவே திரைத்துறைப் பங்களிப்புக்காக, சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் தலைசிறந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுவிட்ட பிரபல பாடகரான பூபன் ஹஸாரிகாவுக்கு அவர் இறந்து பல ஆண்டுகள் கழிந்து இப்போது "பாரத ரத்னா'  விருது வழங்கி கெளரவிக்க வேண்டுமா என்கிற கேள்வி எழாமலில்லை. ஆனால், நானாஜி தேஷ்முக்குக்கு "பாரத ரத்னா' விருது வழங்கியதையும், பூபன் ஹஸாரிகாவுக்கு விருது தரப்பட்டிருப்பதையும் இணைத்துப் பேசுவது தவறு. 

ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளில் தீவிரமாகப் பணியாற்றியவர் நானாஜி தேஷ்முக் என்றாலும், அனைத்துத் தரப்பு மக்களாலும், அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் மதிக்கப்பட்ட ஒரு தலைவராக இருந்து மறைந்தவர் அவர். 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு "பாரத ரத்னா' விருது வழங்கியதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுவது அர்த்தமற்றது. பிரணாப் முகர்ஜி அந்த உயரிய விருதுக்குத் தகுதி அல்லாதவராக இருந்திருந்தால், அந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கடந்த அரை நூற்றாண்டுக் காலம் பிரணாப் முகர்ஜி செய்திருக்கும் பங்களிப்பை எடை போட்டால், இந்த விருதுக்கு அவரைவிடப் பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது என்பது விளங்கும்.

பிரணாப் முகர்ஜிக்கு "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டிருப்பது குறித்த விமர்சனங்களை முன்வைப்பவர்களில் பலர் காங்கிரஸ் கட்சியினர் என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இந்திரா காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் என்று மூன்று காங்கிரஸ் பிரதமர்களின் அமைச்சரவைகளில் மிக முக்கியமான இலாகாக்களைத் திறமையாகக் கையாண்டவர் அவர் என்பது தெரிந்தும் விமர்சனம் செய்வதுதான் அரசியல். 2004 முதல் 2012 வரை, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை சாதுர்யமாக நடத்திச் சென்றதே பிரணாப் முகர்ஜிதான் என்னும் நிலையில், காங்கிரஸ் தரப்பிலிருந்து அவரது விருது குறித்து விமர்சனம்  எழுப்பப்படுவது வியப்பாக இருக்கிறது.

நாகபுரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு உரையாற்றச் சென்றார் என்கிற காரணத்துக்காக பிரணாப் முகர்ஜியைக் குறை கூறுபவர்கள், அங்கே அவர் ஆற்றிய உரையை சரியாகப் படிக்கவில்லை என்பதுதான் உண்மை. சகிப்புத்தன்மை, இந்தியாவின் பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை குறித்தெல்லாம் ஆர்.எஸ்.எஸ். கோட்டைக்கே சென்று முழங்கிவிட்டு வந்தவரை, அவர் ஆர்.எஸ்.எஸ்.-ஸூக்கு விலைபோய்விட்டதாக வர்ணிப்பது புரிதல் இல்லாமை என்றுதான் கூற வேண்டும்.

காமராஜரின் மறைவுக்குப் பிறகு அன்றைய இந்திரா காந்தி அரசும், எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அன்றைய ராஜீவ் காந்தி அரசும் அவர்களுக்கு "பாரத ரத்னா' கொடுத்தது அரசியல் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? இப்போது பிரணாப் முகர்ஜிக்கு "பாரத ரத்னா' விருது வழங்குவதன் மூலம் நரேந்திர மோடி அரசுக்கு அரசியல் ஆதாயம் ஏற்பட்டுவிடும் என்றுதான் சொல்லிவிட முடியுமா? அடுத்தாற்போல காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிரணாப் முகர்ஜிக்கு "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டிருக்கவே மாட்டாது என்னும் நிலையில், இப்போதே அந்த விருதை வழங்க முற்பட்டிருப்பதற்கு நரேந்திர மோடி அரசைப் பாராட்ட வேண்டும்.

1975-இல் வி.வி.கிரிக்கு வழங்கப்பட்டதற்குப் பிறகு 44 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டுதான் முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவருக்கு "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கும், அதற்குப் பிறகு குடியரசுத் தலைவர்களாக இருந்த ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், ஜாகிர் உசேன், வி.வி. கிரி ஆகியோருக்கும் மட்டும்தான் "பாரத ரத்னா' வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பே "பாரத ரத்னா' பெற்றுவிட்டிருந்தவர் டாக்டர் அப்துல் கலாம்.

சச்சின் டெண்டுல்கருக்கு "பாரத ரத்னா' விருது வழங்கப்படும்போது, அதைவிட எந்தவிதத்திலும் குறைவில்லாத பெருமைக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தேசத்தின் உயரிய விருது அறிவிக்கப்பட்டிருப்பதில் தவறே இல்லை. இதற்குப் பின்னால் அரசியல் இருப்பதாகக் குற்றஞ்சாட்டுவது, அந்த உயரிய விருதின் கெளரவத்தையே குலைப்பதாக அமைந்துவிடும். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தும்கூட, அவருக்கு "பாரத ரத்னா' விருது அறிவித்திருப்பதைப் பாராட்ட மனம் வராவிட்டாலும் பரவாயில்லை, விமர்சிக்காமலாவது இருக்கலாம்.

"பாரத ரத்னா' போன்ற உயரிய விருதுகள் குறித்து ஒரு கருத்தை முன்வைக்கத் தோன்றுகிறது. மறைந்து பல ஆண்டுகளாகிவிட்ட பிறகு "பாபா சாஹேப்' அம்பேத்கர், "சர்தார்' வல்லபபாய் படேல், மெளலானா அபுல்கலாம் ஆசாத், அருணா ஆசப் அலி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், மதன்மோகன் மாளவியா, இப்போது நானாஜி தேஷ்முக் போன்றவர்களுக்கு "பாரத ரத்னா' விருது வழங்கி கெளரவிக்கப்படுவானேன்? அவர்கள் விருதுகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் தனிப் பெரும் ஆளுமைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com