கடைசித் தொடர்பும் அறுந்தது...

ஜார்ஜ் பெர்னாண்டஸின் மறைவுடன் சோஷலிஸ்ட் கட்சியுடனான இந்தியாவின் கடைசித் தொடர்பும் அறுந்துவிட்டிருக்கிறது.

ஜார்ஜ் பெர்னாண்டஸின் மறைவுடன் சோஷலிஸ்ட் கட்சியுடனான இந்தியாவின் கடைசித் தொடர்பும் அறுந்துவிட்டிருக்கிறது. 88 வயதில் மரணமடைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், சுதந்திர இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக ஏறத்தாழ கால்நூற்றாண்டுக்கும் மேலாக வலம் வந்தவர். இந்தியாவின் தொழிற்சங்கத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக இருந்தவர். 1977-லிலும் சரி, 1989-லிலும் சரி, 1998-லிலும் சரி காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைப்பதில் பெரும் பங்களிப்பு நல்கியவர். எல்லாவற்றுக்கும் மேலாக எளிமையான, நேர்மையான அர்ப்பணிப்பு அரசியலுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.
இந்திய அரசியலில் சோஷலிஸ்டுகளின் பங்களிப்பு கணிசமானது. விடுதலைப் போராட்டக் காலத்திலேயே காங்கிரஸ் கட்சியின் ஓர் அங்கமாக சோஷலிஸ்ட் கட்சி திகழ்ந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் சோஷலிஸ்ட்டுகள் ஒருங்கிணைந்து சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள். ஜவாஹர்லால் நேருவுக்கு இணையான செல்வாக்கு அப்போது ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு இருந்தது. 
ஆரம்பகால சோஷலிஸ்ட் தலைவர்கள் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்தனர். ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய கிருபளானி, ஆச்சார்ய நரேந்திர தேவ், அச்சுத் பட்வர்த்தன், பிரபுதாஸ் பட்வாரி, ராம் மனோகர் லோகியா, நாக் பை, மது தண்டவதே, எச்.வி. காமத், அசோக் மேத்தா ஆகியோரின் அரசியல் பங்களிப்பு அளப்பரியது. 
சுதந்திர இந்தியாவில் சோஷலிஸ்ட் இயக்கம் வலுவடையாமல் போனதற்கு ஜவாஹர்லால் நேருவின் ராஜதந்திரம் ஒரு முக்கியமான காரணம். ஆவடியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ஜனநாயக சோஷலிஸத்தை தனது கொள்கையாக காங்கிரஸ் கட்சியே அறிவித்த பிறகு, சோஷலிஸ்ட்டுகளின் அவசியம் குறைந்துவிட்டது. 
சோஷலிஸ்ட் இயக்கம் பல பிளவுகளை எதிர்கொண்டதும்கூட அந்தக் கட்சி வலுப்  பெறாமல் போனதற்கு ஒரு முக்கியமான காரணம். சோஷலிஸ்ட் கட்சி பல்வேறு தலைவர்களின் கீழ் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி என்று பிளவுபடுவதும் இணைவதுமாக இருந்ததன் விளைவாக, தனது தொண்டர் பலத்தை இழந்து தலைவர்களின் கட்சியாக மாற வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது. ஆரம்ப கால சோஷலிஸ்ட் தலைவர்கள் வகுத்த பாதையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது லிமாயி, ரபி ரே, ராஜ் நாராயணன், சுரேந்திர மோகன் போன்ற தலைவர்கள் சோஷலிஸ்ட் இயக்கம் முற்றிலுமாக அழிந்துவிடாமல் பாதுகாத்தனர். குறிப்பாக, சோஷலிஸ்ட்டுகள் தொழிற்சங்கவாதிகளாக பெரும்பங்களிப்பை ஆற்றி இருக்கிறார்கள். 
ரயில்வே தொழிலாளர்களின் தலைவராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் தன்னிகரற்று விளங்கினார். 1967-ஆம் ஆண்டில் தெற்கு மும்பை மக்களவைத் தொகுதியிலிருந்து சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். ஜார்ஜ் பெர்னாண்டஸை தேசிய அளவில் அறிய வைத்தது, 1974-இல் நடந்த ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்தான். ஒட்டுமொத்த இந்தியாவையும் ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு ரயில்வே தொழிலாளர்களின் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்திய இளைஞர்களின் எழுச்சி நாயகனாக அப்போது உயர்ந்திருந்தார்.
அவசர நிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டபோது ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவு ஆனார் என்பது மட்டுமல்ல, அவர் தஞ்சமடைவதற்குத் தேர்ந்தெடுத்த மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவசரநிலைக் காலத்தில் தலைமறைவாக இருந்தாலும் கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முரண்பட்ட எதிர்க்கட்சிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஜனதா கட்சியை உருவாக்கியதில் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு கணிசமான  பங்கு உண்டு.
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஜார்ஜ் பெர்னாண்டஸ், அகில இந்திய தலைவராகத் திகழ்ந்தார் என்பதற்கு எடுத்துக்காட்டு அவரது அரசியல் வாழ்க்கை. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸின் வாழ்க்கையும் அரசியலும் மும்பை நகரத்தில் தொடங்கியது. 1977-இல் ஜார்ஜ் பெர்னாண்டஸால் பிகார் மாநிலம் முசாஃபர்பூர் மக்களவைத் தொகுதியில் பிரசாரத்துக்கு போகாமலேயே வெற்றி பெற முடிந்தது என்பதிலிருந்து அவரது செல்வாக்கும் ஆளுமையும் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 
அவரது அரசியல் வாழ்க்கையில் கடும் விமர்சனத்துக்கு உள்ளான செயல்பாடு, ஜனதா அரசில் அங்கம் வகித்தபோது மொரார்ஜி தேசாய்க்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், 1978  மே 12-ஆம் தேதி அவர் ஆற்றிய உரை. மக்களவை வரலாற்றில் அதுதான் மிக நீண்ட உரையாக இன்றும் திகழ்கிறது. மொரார்ஜி தேசாய்க்கு ஆதரவாகவும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராகவும் உரையாற்றிய ஜார்ஜ் பெர்னாண்டஸ், அடுத்த நாளே மொரார்ஜி தேசாய்க்கு எதிரான சரண் சிங் அணிக்குத் தாவியது பலராலும் விமர்சிக்கப்பட்டது.
ஜனதா கட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு ஜனதா தளம் உருவானதிலும், வி.பி. சிங் தலைமையில் ஆட்சி அமைந்ததிலும் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு பங்கு இருந்தது. பிறகு 1998-இல் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்ததிலும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மிக முக்கியப் பங்கு வகித்தார். அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் அவர் செயல்பட்டார். தனது வாழ்க்கை முழுவதிலும் காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே அரசியலை நடத்தியவர் அவர்.
ஜார்ஜ் பெர்னாண்டஸை அகற்றி நிறுத்திவிட்டு, இந்திய அரசியல்  வரலாற்றை எழுத முடியாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com