கோடீஸ்வரர்களின் கூடாரம்!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூட, நாடாளுமன்ற

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூட, நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிரண்டு சொகுசு வாகனங்களைப் பார்ப்பதுகூட அரிதாக இருக்கும். இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் வாகன நிறுத்தத்தில் இப்போது சாதாரண சிறிய வாகனங்கள் தென்படுவதில்லை என்பதுதான் நிலைமை.
10-ஆவது மக்களவையின் உறுப்பினர்களில் பலர், நிதிநிலை அறிக்கை விவாதிக்கப்பட்டபோது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற வேறுபாடில்லாமல் ஒரு கோரிக்கையை முன்வைத்துக் குரலெழுப்பினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சொந்த வாகனம் வாங்குவதற்கு, தவணை முறைக் கடன் வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. 
அப்போதெல்லாம் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்தும், ஆட்டோ ரிக்ஷாக்களிலும், பொது வாகனங்களிலும் நாடாளுமன்ற நுழைவாயிலை அடைந்து, அங்கிருந்து நாடாளுமன்ற வளாகத்துக்கு நாடாளுமன்ற வாகனங்களில் செல்வது வழக்கமாக இருந்தது. இப்போது இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களையும், இணையமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில பாஜக உறுப்பினர்களையும் தவிர, ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் தங்களது விலை உயர்ந்த வாகனங்களில்தான் நாடாளுமன்றத்துக்கு வருகிறார்கள். ஜனநாயகத்தின் கோயில் இப்போது ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நிகராகக் காட்சி அளிக்கும் அவலத்தை என்னவென்று கூறுவது? 
கோடீஸ்வரர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும், வெற்றி பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பதன் விளைவுதான், நாடாளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக இருப்பதற்குக் காரணம். அதனால், தங்களது பணக்காரத்தனத்தைப் பறைசாற்றிக் கொள்ளும் போக்குக்கு மரியாதை ஏற்பட்டிருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. 
2009-இல் இருந்த 15-ஆவது மக்களவையின் 543 உறுப்பினர்களில் 315 பேர் கோடீஸ்வரர்கள். 2014-இல் 16-ஆவது மக்களவையில் 443 பேர் கோடீஸ்வரர்கள். தற்போதைய 17-ஆவது மக்களவையில் 475 பேர் கோடீஸ்வரர்கள். அவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ.20.93 கோடி என்றாலும்கூட, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல நூறு கோடிகளுக்கு அதிபர்கள் என்பது நாடறிந்த உண்மை.
தேர்தலுக்குத் தேர்தல் மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரிப்பதன் ரகசியம் என்னவென்று விசாரணை நடத்துவதிலோ ஆய்வு செய்வதிலோ அர்த்தமொன்றும் இல்லை. அதன் காரணம், உறுப்பினர்களுக்கும், வருமான வரித் துறைக்கும், வாக்களிக்கும்  வாக்காளர்களுக்கும் நன்றாகவே தெரியும். 
நமது அரசியல்வாதிகள் மிகவும் புத்திசாலிகள். எப்படி சம்பாதித்தார்கள் என்பது குறித்த கேள்வியில்லாமல், ஈட்டிய வருமானத்துக்கு வருமான வரி செலுத்திவிட்டால், இந்தியாவில் நேர்மையான வரி செலுத்தும் குடிமக்களாகிவிடுகிறார்கள். வரி செலுத்தப்பட்டதா என்பது மட்டும்தான் கேள்வியே தவிர, வருமானம் எப்படி ஈட்டப்பட்டது என்பது, வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு குறித்த கேள்வியைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. 
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு ஓர் உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் சொத்து மதிப்பு அதிகரிப்பது குறித்துக் கண்காணிப்பதற்கு ஒரு நிரந்தர அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. தேர்தலுக்குத் தேர்தல் மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மதிப்பு அதிகரிப்பது ஜனநாயகம் தோல்வியடைவதன் அறிகுறி என்றும், இதை இப்படியே அனுமதித்தால் வருங்காலத்தில் மாஃபியா கும்பலின் ஆட்சியாகிவிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை செய்தது.
அப்படி ஓர் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என்பதுடன் தேர்தல் வேட்புமனுப் படிவத்தில் தங்களது சொத்து மதிப்பு குறித்து விவரம் தரப்படாமலோ, முழுமையாகத் தரப்படாமல் இருந்தாலோ அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்றமாக்கப்படவும் இல்லை. 2003-இல் இது குறித்து உச்சநீதிமன்றம் எச்சரித்திருக்கிறது.
தேர்தல் வேட்புமனுப் படிவத்தில் வேட்பாளரின் கல்வித்  தகுதி, சொத்து மதிப்பு, கடன் மதிப்பு, குற்றப் பின்னணி ஆகியவை குறித்த விவரங்கள் தரப்படுவது வாக்காளர்களின் அடிப்படை உரிமை என்றும், அவை தவறாகத் தரப்பட்டிருந்தால் முறையாகத் தனது  தேர்வை வாக்காளர் செய்வது தடுக்கப்படுகிறது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. 
கடந்த செப்டம்பர் 2017-இல் 98 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 7 மக்களவை உறுப்பினர்கள் ஆகியோரது  சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பது  குறித்து விசாரணை நடத்துவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய நேரடி வரி ஆணையம் தெரிவித்தது. ஆனால், இன்றுவரை அந்த விசாரணையின் முடிவு என்ன என்பது குறித்துப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அதைத் தட்டிக் கேட்கவோ, விளக்கம் கேட்கவோ நமது மக்கள் பிரதிநிதிகள் ஏன் முன்வரவில்லை என்பதற்கு விளக்கம் தேவையில்லை.
பணக்காரர்கள் மக்கள் பிரதிநிதிகளாகக் கூடாது என்பதல்ல. ஆனால், பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் பணக்காரர்களாக இருப்பது என்பது இந்தியாவின் 80%- கும் அதிகமான சாமானிய, நடுத்தர, அடித்தட்டு வர்க்கத்து மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவோ, நலன் பேணுவதாகவோ, அவர்களது பிரச்னையை எடுத்துரைப்பதாகவோ இருக்காது. அது மக்களாட்சித் தத்துவமுரண்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com