பதவி போதை படுத்தும் பாடு!

நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்களின் முதலாவது கூட்டத்தில் அதிகார

நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்களின் முதலாவது கூட்டத்தில் அதிகார துஷ்பிரயோகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி வன்மையாகக் கண்டித்திருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், பாஜகவினரும் கட்சியின் கெளரவத்தைக் குலைக்கும் விதத்தில் நடந்து கொள்வதை சாடி இருக்கும் அவர், அதுபோன்ற செயல்பாடுகளுக்கு எதிரான தனது ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். பிரதமரின் சீற்றத்துக்கும், பரவலாக பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கும் கோபத்துக்கும் வெவ்வேறு மாநிலங்களில் நடந்திருக்கும் அனுமதிக்க முடியாத இரண்டு அதிகார துஷ்பிரயோகங்கள்தான் காரணம்.
கடந்த ஜூன் 26-ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநகராட்சி அதிகாரி ஒருவரை 34 வயது பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஆகாஷ் விஜயவர்கியா கிரிக்கெட் மட்டையால் தாக்கிய நிகழ்வு சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. நீதிமன்ற உத்தரவின்படி, இந்தூர் மாநகராட்சி நிர்வாகம் ஒரு கட்டடத்தை இடிப்பதற்கு முற்பட்டது. அப்போது அந்தப் பகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான ஆகாஷ் விஜயவர்கியாவின் தலைமையில் பாஜக தொண்டர்கள் மாநகராட்சி அதிகாரிகளைத் தங்களது கடமையை நிறைவேற்றவிடாமல் தடுத்தனர். அதிகாரி ஒருவரை அருகில் இருந்த கிரிக்கெட் மட்டையால் ஆத்திரத்துடன் அடித்து விரட்ட முற்பட்டிருக்கிறார் ஆகாஷ். இது செல்லிடப்பேசியில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
ஆங்காங்கே இடிந்துவிழும் நிலையில் இருக்கும் அந்தக் கட்டடம், குடியிருப்புக்கு ஏற்றதல்ல என்று மாநகராட்சி நிர்வாகம் மட்டுமல்ல, நீதிமன்ற விசாரணையிலும் தெரியவந்திருக்கிறது. இத்தனைக்குப் பிறகும், சட்டப்பேரவை உறுப்பினரான ஆகாஷ் விஜயவர்கியா, மாநகராட்சி அதிகாரி திரேந்திர பயாஸ்ஸை மக்கள் நலன் என்கிற பெயரில் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதை என்னவென்று நியாயப்படுத்துவது?
இடிக்கப்பட இருக்கும் கட்டடத்திலிருந்து பெண்மணி ஒருவரை அந்த ஊழியர் பலவந்தமாக இழுத்து வெளியேற்ற முற்பட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவரைக் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாகவும் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் ஆகாஷ். அவரது விளக்கம் உண்மையாகவே இருந்தாலும், இது குறித்து விசாரிக்கவும் தண்டிக்கவும் காவல் துறைக்கும் நீதிமன்றத்துக்கும்தான் அதிகாரமே தவிர, சட்டப்பேரவை உறுப்பினருக்கு அரசு அலுவலர் ஒருவரைத் தாக்குவதற்கான அதிகாரம் இல்லை என்பது பொறுப்பான எம்.எல்.ஏ. பதவி வகிக்கும் அவருக்கு எப்படித் தெரியாமல் போனது?
 தெலங்கானாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர் ஒருவரின் சகோதரரும், அரசியல்வாதியுமான கொனேறு கிருஷ்ணா ராவ் என்பவரின் செயல்பாடு, இந்தூர் சம்பவத்தைப்போலவே வன்மையான கண்டனத்துக்குள்ளாகிறது. பெண் வனத்துறை அதிகாரி ஒருவர், வனத் துறைக்குச் சொந்தமான ஒதுக்கீட்டு நிலத்தில் தனது குழுவினருடன் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கே வந்த கொனேறு கிருஷ்ணா ராவ், அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்றும், அதிலிருந்து வெளியேறும்படியும் அந்தப் பெண் அதிகாரியை மிரட்டி இருக்கிறார். 
அந்தப் பகுதி வனத்துறைக்குச் சொந்தமானது என்று கூறி, தனது மேலதிகாரிகளின் உத்தரவுப்படி அங்கே மரக் கன்றுகளை நடுவதற்கான உத்தரவைக் காண்பித்திருக்கிறார் அந்தப் பெண் அதிகாரி. அந்த உத்தரவைக் கிழித்துப்போட்டது மட்டுமல்லாமல், கொனேறு கிருஷ்ணா ராவ் அந்த அதிகாரியை ஆத்திரத்தில் கன்னத்தில் அறைந்ததை சக அதிகாரி ஒருவர் செல்லிடப்பேசியில் படமெடுத்ததன் விளைவு, சமூக ஊடகங்கள் அந்த நிகழ்வை தேசிய அளவில் எடுத்துச் சென்றுவிட்டன. 
ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் தவறுகளை சாமானியக் குடிமகன் தட்டிக்கேட்க முற்பட்டால், சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறும் அரசியல்வாதிகள், சட்டத்தைத் தங்கள்கையில் எடுத்துக்கொண்டு அதிகார வர்க்கத்தை அச்சுறுத்துவது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? தேசத்துரோக குற்றம், கிரிமினல் மான -நஷ்ட வழக்கு என்று ஊடகவியலாளர்களையும், இடித்துரைப்பாளர்களையும் (விஸில்புளோயர்ஸ்) பிரிட்டிஷ் காலனிய ஆட்சிச் சட்டங்களின் மூலம் வாய்ப்பூட்டுப் போடும் அரசியல்வாதிகள், தங்களது அதிகார துஷ்பிரயோகத்துக்கு அரசியல் சாசன விலக்குத் தரப்பட்டிருப்பதாக எண்ணிச் செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.
அரசியல்வாதிகளின் இதுபோன்ற போக்குக்கு அதிகார வர்க்கமும் ஒரு வகையில் காரணம் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. தங்களது பதவி உயர்வுக்காகவும், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து ஊழலில் பங்கு பெறுவதற்காகவும் சுயமரியாதையையும், தங்களது பதவிக்கான கெளரவத்தையும் அதிகாரிகளில் பலர் அடகு வைக்கும் போக்கு கடந்த அரை நூற்றாண்டு காலமாக அதிகரித்து வருவதன் காரணத்தால்தான், அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளைத் தங்களது ஏவலர்களாகக் கருத முற்பட்டிருக்கிறார்கள்.
அரசியல்வாதிகளே இல்லாமல்கூட இயல்பு நிலையில் இந்தியா செயல்படும். ஆனால், அதிகாரிகளும், அரசு ஊழியர்களும்  இல்லாமல் போனால், ஒட்டுமொத்த நிர்வாகமே ஸ்தம்பித்துவிடும். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 
அரசு ஊழியர்கள் அடிவருடிகள் ஆகிவிட்டார்கள் என்கிற அரசியல்வாதிகளின் மனத்துணிவின் வெளிப்பாடுகள்தான் தெலங்கானாவிலும் மத்தியப் பிரதேசத்திலும் நடந்திருக்கும் மேலே குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளும். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், நாளைய இந்தியா எப்படி இருக்கும் என்பதை இந்நாட்டு மன்னர்கள்தான் (குடிமக்கள்) சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com