தேர்தல்தான் தீர்வு!

கடந்த 14 மாதங்களாக முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி அரசு ஆட்சியில் தொடர்கிறது என்பதுதான் ஆச்சரியம்.

கடந்த 14 மாதங்களாக முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி அரசு ஆட்சியில் தொடர்கிறது என்பதுதான் ஆச்சரியம். ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைவர்களும் மஜத தலைவர்களும் கடைசி நேர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும், இதற்காக எல்லாவிதமான குதிரை பேரங்களும் நடந்து வருகின்றன என்பதும், என்ன காரணத்துக்காக இந்த ஆட்சி அமைந்ததோ அந்தக் காரணத்தையே முறியடிக்கிறது.
 கடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், மிக அதிகமான இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியை முறைப்படி ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அனுமதித்ததும், பெரும்பான்மையை நிரூபிக்கப் போதிய அவகாசம் அளித்தும் அரசியல் சாசன வரம்பின் கீழ் உட்பட்டுத்தான் செய்யப்பட்டன. ஆனாலும், பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று கூறி காங்கிரஸும், மஜதவும் நீதிமன்றத்தை அணுகி உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உடனடியாக சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது.
 பெரும்பான்மை பலத்தை எட்டுவதற்கு பாஜகவுக்கு போதிய அவகாசம் அளிக்கப்படாத நிலையில், முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை தீர்மானத்தை எதிர்கொள்ளாமலேயே பதவி விலகினார். 79 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், வெறும் 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த மஜதக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து கூட்டணி ஆட்சிக்கு வழிகோலியது.
 முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் ஆரம்பம் முதலே மஜதக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்ததை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த நிலையில், நித்திய கண்டம் பூர்ண ஆயுசாகத்தான் கடந்த 14 மாதங்கள் அந்தக் கூட்டணி அரசு ஆட்சியில் தொடர்கிறது.
 கடந்த வாரம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஆனந்த் சிங்கும், ரமேஷ் ஜர்கி ஹோலியும் பதவி விலகுவதாக அறிவித்தனர். இரு சுயேச்சைகளின் ஆதரவுடன் 225 பேர் கொண்ட அவையில் ஆளும் கட்சியின் பலம் 115-ஆகக் குறைந்தது. நேற்று 10 காங்கிரஸ் உறுப்பினர்களும் மஜதவின் மூன்று உறுப்பினர்களும் ராஜிநாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். விரைவிலேயே மேலும் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவி விலகக்கூடும் என்கிற நிலையில், எந்த நேரமும் ஆட்சி கவிழும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
 காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சிங், கடந்த வாரம் பதவி விலகியதற்கு முதல்வர் குமாரசாமி எடுத்த ஒரு முடிவுதான் காரணம். ஆனந்த் சிங்கின் தொகுதியான விஜயநகரில் 3,677 ஏக்கர் நிலத்தை, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1.20 லட்சம் விலையில் பலாரி என்கிற இடத்தில் உள்ள ஜெ.எஸ்.டபிள்யு. உருக்கு ஆலைக்கு அளித்ததற்கு அமைச்சரவை எடுத்த முடிவுதான் அவர் பதவி விலகக் காரணம். தனது தொகுதிக்கும், தொகுதி மக்களுக்கும் எதிரான அந்த முடிவை ஆரம்பம் முதலே அவர் எதிர்த்து வந்தார்.
 கோகக் தொகுதி உறுப்பினர் ரமேஷ் ஜார்கி ஹோலி, கூட்டணி ஆட்சி அமைந்தது முதலே அதிருப்தியாளராகத்தான் தொடர்ந்து வந்திருக்கிறார். முதல்வர் குமாரசாமியின் பல முடிவுகள் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை மிகவும் காயப்படுத்தி இருக்கின்றன. அவரது அமைச்சரவை விரிவாக்கம் காங்கிரஸில் மட்டுமல்லாமல் மஜதவிலும் அதிருப்தியாளர்களை உருவாக்கி இருக்கிறது. மஜத தலைவர் தேவெ கௌடாவுக்கும், காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கும் இடையேயான அரசியல் பகை புதிதொன்றுமல்ல.தேவெ கௌடாவின் மகன் குமாரசாமி மஜதவில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தவர் சித்தராமையா. அதனால், அவரது முதல் அரசியல் எதிரியாக பாஜகவைவிட, மஜதவைதான் கருதி செயல்படுபவர். இப்போது போர்க்கொடி தூக்கியிருக்கும் பலரும் அவரது ஆதரவாளர்களாக இருப்பது வியப்பை ஏற்படுத்தவில்லை.
 மஜதவின் மூன்று உறுப்பினர்களும் காங்கிரஸின் 10 உறுப்பினர்களும் தங்களது பதவி விலகல் கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் அலுவலகத்திலும் ஆளுநர் வஜுபாய் வாலாவிடமும் அளித்துவிட்டு மும்பை நட்சத்திர விடுதியில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். அவர்களைத் திருப்திப்படுத்தவும் சமாதானப்படுத்தவும் குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கிறது. பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடும் என்று கூறி பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் வழங்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்துக்கு போன காங்கிரஸும் மஜதவும், இப்போது குதிரை பேரத்துக்கு காலஅவகாசம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
 கடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அப்போதே ஆளுநர் ஆட்சியை அறிவித்து மறுதேர்தலுக்கு வழிகோலியிருக்க வேண்டும். கடந்த 14 மாதங்கள் எந்தவித இலக்கும் இல்லாமல், ஊழல் கட்டவிழ்த்துவிடப்பட்டு, நிர்வாகம் சீர்குலைந்து, குமாரசாமி தலைமையில் ஆட்சி என்கிற பெயரில் ஜனநாயகம் தடம்புரள வழிகோலப்பட்டது. இனியும் அந்தக் கேலிக்கூத்து தொடரக்கூடாது.
 உடனடியாக ஆட்சியைக் கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, ஹரியாணா, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் கர்நாடக மாநிலத்திலும் வரும் டிசம்பர் மாதம் தேர்தலை நடத்துவதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வாக இருக்கும். காங்கிரஸாக இருந்தாலும், மஜதவாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் சரி, போதும் குதிரைப் பேர கூட்டணி ஆட்சி!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com