நோய் நாடி...நோய் முதல் நாடி...!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இரண்டரை மணி நேர நிதிநிலை

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இரண்டரை மணி நேர நிதிநிலை அறிக்கை உரையில், சுகாதாரம் குறித்து ஒரு வார்த்தைகூட இல்லை என்பது வேதனை அளிக்கிறது. கோரக்பூரிலும், முசாபர்பூரிலும் அரசின் கவனக்குறைவால் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இரண்டொரு வார்த்தைகளையாவது அவர் கூறியிருக்கலாம். அதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருப்பதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நிதி ஒதுக்கீடுகளையாவது அறிவித்திருக்கலாம்.
சந்தைப் பொருளாதாரத்தை இந்தியா வரித்துக் கொண்டது முதல் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது நடுத்தர, மாதச் சம்பள வர்க்கத்தினரும், அடித்தட்டு மக்களும்தான். நடுத்தர, மாத ஊதிய வர்க்கத்தினரின் பிரச்னைகள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் முழுமையாக ஈடுகட்டப்படுவதில்லை. அரசு மருத்துவமனைகளை நாட அவர்களது கெளரவம் அனுமதிப்பதில்லை. தனியார் மருத்துவமனைகளால் கடனாளியாகி, தங்களது வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மத்திய தர வர்க்கத்தினரின்  சோகக் கதைகள் தெருவுக்குத் தெரு, குடும்பத்துக்குக் குடும்பம் சொல்லி மாளாது. 
நடுத்தர வர்க்கத்தினரின் நிலைமை இதுவென்றால், அடித்தட்டு மக்களின் அவஸ்தை அதைவிடக் கொடுமை. அரசு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப தரமான மருத்துவர்களும் கிடையாது, மருந்துகளும் கிடையாது என்பதுதான் இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களிலும் காணப்படும் நிலைமை. கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து எதுவும் கூறாமல் இருப்பதுதான் நல்லது. எந்த அளவில் அடித்தட்டு மக்களின் மருத்துவச் சேவை, பொது மருத்துவத் துறையால் பேணப்படுகிறது என்பதை வெளிச்சம் போடுவதற்கு, கோரக்பூர், முசாபர்பூர் சம்பவங்களே போதும். 
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த ஜிடிபியில், சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு 2.5% அதிகரிக்கும் என்று அரசு கூறியிருந்தது. நிதியமைச்சர் தாக்கல் செய்திருக்கும் இந்த நிதியாண்டுக்கான ரூ.27,86,349 கோடிக்கான நிதிநிலை அறிக்கையில், சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு வெறும் ரூ.64,999 கோடி. அதாவது, மொத்த நிதிநிலை அறிக்கையில் 2.3%. கடந்த நிதியாண்டின் ரூ.23,99,147 கோடி நிதிநிலை அறிக்கையில், சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு ரூ.52,800 கோடி. அதாவது, 2.2%. இந்த நிதியாண்டில் பெயரளவிற்கு 0.1% சுகாதாரத்துக்காக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் என்கிற மருத்துவக் காப்பீட்டுத்  திட்டத்தின் கீழ், இந்திய மக்கள்தொகையில் 40% பேருக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். அதற்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.6,400 கோடி மட்டுமே அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆயுஷ்மான் பாரத் எப்படி நடைமுறை சாத்தியமாகும் என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
ஃபிட்னஸ் அண்ட் வெல்னஸ் கிளினிக் எனப்படும் ஒரு லட்சம் நல்வாழ்வு மருத்துவமனைகளுக்கான நிதி ஒதுக்கீடு இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.1,200 கோடியிலிருந்து ரூ.1,600 கோடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒவ்வொரு மருத்துவமனைக்கும் ஒரு மாதத்திற்கு ரூ.13,333 அளவில்தான் வழங்க முடியும். இந்தத் தொகையில் நல்வாழ்வு மருத்துவமனைகள் எப்படி செயல்படும் என்று நிதியமைச்சர் எதிர்பார்க்கிறார்? 
அடித்தட்டு மக்களின் மருத்துவச் சேவைக்குத் தனியார் மருத்துவமனைகள் உதவிக்கரம் நீட்டப் போவதில்லை. அரசு மருத்துவமனைகள்தான் ஒரே வழி. இந்த நிலையில், மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.3,108 கோடியிலிருந்து ரூ.2,000 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலாக இப்போதிருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 
ஏற்கெனவே மாவட்ட மருத்துவமனைகளைத் தனியாரின் பராமரிப்புக்கு விட்டுவிடுவது என்றும், அதன் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பயன்பெறும் என்றும் கூறப்படும் நிலையில், அதற்கான முன்னோட்டமாக நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறதோ என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது இந்த நிதிநிலை அறிக்கை.
வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் மருத்துவ சிகிச்சை என்கிற நிலைமை ஜனநாயக முரண். கண்காணிக்கப்படாத-ஒழுங்குபடுத்தப்படாத தனியார் மருத்துவமனைகள் மூலம் மட்டுமே மருத்துவ சிகிச்சை என்பது மிகப் பெரிய பிரச்னையை உருவாக்கும்.  
அதைவிடக் கவலை அளிக்கும் மிக முக்கியமான இன்னொரு ஆபத்தும் இதில் அடங்கியிருக்கிறது. மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் அடித்தட்டு மக்களாக இருக்கும் நிலையில் போதுமான, தரமான மருத்துவ வசதி அவர்களுக்கு வழங்கப்படாமல் போனால், அதன் விளைவாக ஏற்படும் பயங்கரமான நோய்த்தொற்றுகளுக்கு ஒட்டுமொத்த தேசமே பலியாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 
அடித்தட்டு மக்களின் சுகாதாரம் முறையாகவும் முழுமையாகவும் பேணப்படாமல் போனால், அதனால் ஏற்படும் பாதிப்பு ஒட்டு மொத்த மக்கள்தொகையையும் பாதிக்கும். மெட்ராஸ் ஐ பாதிப்பில் தொடங்கி டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், காலரா, மலேரியா, டைஃபாய்டு என்று அடித்தட்டு மக்களைப் பாதிக்கும் நோய்த் தொற்றுகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பரவும் என்பதை உணர்ந்தால், வலுவான பொதுத் துறை மருத்துவத்தின் அத்தியாவசியம் என்ன என்பது புரியும்.
இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை குறித்த விவாதங்களில் சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு குறித்து யாருமே கவலைப்படாமல் இருப்பது, நாம் எந்த அளவுக்கு சமூகப் புரிதல் இல்லாமல் இருக்கிறோம் என்பதைத்தான் உணர்த்துகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com