மாற்றத்துக்கேற்ற சட்டம்!

மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் மீண்டும்

மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 1988-இல் கொண்டுவரப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் 2001-இல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2016-இல் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 2017 பிப்ரவரியில் மக்களவையால் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காததால், முந்தைய மக்களவையின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அந்த மசோதா காலாவதியாகிவிட்டது. இப்போது 17-ஆவது மக்களவையில் மீண்டும் அதே மசோதா அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 
பயணிப்பதற்குத் தகுதி இல்லாத மோசமான சாலைகள், போதுமான கடுமை இல்லாத போக்குவரத்து விதிகள், முறையாக நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து அமைப்புகள், ஆபத்தான வாகன ஓட்டிகள் என்று சாலை விபத்துகள் இந்தியாவின் மிகப் பெரிய உயிர்க்கொல்லியாக மாறியிருக்கின்றன. அதனால், அதிவேகமாக அதிகரித்துவரும் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப, மோட்டார் வாகனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை காலத்துக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 
ஏறத்தாழ 1.5 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்கள். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைகிறார்கள். இதற்கெல்லாம் வாகன ஓட்டிகளின் கவனக்குறைவு முக்கியமான காரணம் என்றாலும்கூட, கணிசமான விபத்துகளுக்கு அளவுக்கு அதிகமான பயணிகளை அல்லது சரக்குகளை ஏற்றுவது, பராமரிக்கப்படாத சாலைகள், முறைப்படுத்தப்படாத நாற்சந்திகள், ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டிருக்கும் வேகத்தடைகள் ஆகியவையும்கூட முக்கியமான காரணிகள். 
எண்ம தொழில்நுட்பம் (டிஜிட்டல் டெக்னாலஜி') மூலம் ஓட்டுநர் உரிமம் பெறுவது முறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் முறைகேடுகளைத் தடுக்க சட்டத்திருத்தம் வழிகோலுகிறது. 
இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், ஓட்டுநர் உரிமம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இணையத்தின் மூலம் வழங்கப்படும். ஓட்டுநர் உரிமம் பெறுவதில் முறைகேடுகள், இடைத்தரகர்கள் தடுக்கப்பட்டு அதன் மூலம் கையூட்டு பெறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க சட்டத்திருத்தம் வகை செய்கிறது. 
புதிய மசோதாவில் இன்னொரு புதிய அம்சம், அதிகரிக்கப்பட்டிருக்கும் அபராதத் தொகை. அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றினால் ஒரு பயணிக்கு ரூ.200 அபராதம் வசூலிக்க நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இருக்கைப் பட்டை அணியாமல் இருப்பதற்கான அபராதத் தொகை ரூ.100-லிருந்து ரூ.1,000-ஆக அதிகரிக்கப்படுகிறது. சாலைகளில் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவது, உரிமம் இல்லாமல் ஓட்டுவது ஆகியவற்றுக்கான  அபராதம் ரூ.500-லிருந்து ரூ.5,000-ஆக அதிகரிக்கப்படுகிறது. 
மது அருந்தி வாகனத்தை ஓட்டினால் அபராதம் ரூ.2,000-த்திலிருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்படுகிறது. வாகனம் ஓட்டுவதற்கு தடை செய்யப்பட்டவர்கள் அதை மீறி ஓட்டினால் இனிமேல் ரூ.10,000 அபராதம் செலுத்தியாக வேண்டும்.
வாகன ஓட்டுநர்கள் மட்டுமல்ல, வாகன விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள்கூட மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். மோட்டார் வாகனங்களின் பராமரிப்பில் கவனக்குறைவு இருந்தால் விற்பனையாளர் வாகனத்துக்கு ரூ.1,00,000 அபராதமும், சிறைத் தண்டனையும் எதிர்கொள்ள வேண்டும். அதேபோல, வாகனத் தயாரிப்பில் குறைபாடுகள் இருந்தால், தயாரிப்பாளர் மீதான அபராதம் ரூ.100 கோடி வரை விதிப்பதற்கு சட்டம் வழிகோலுகிறது. 
திருத்த மசோதாவில் பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகள் அல்லாத சாலை பயன்பாட்டாளர்களுக்குமான பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. மோட்டார் வாகனங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில்10.5% பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். குழந்தைகளை மோட்டார் வாகனங்களை இயக்க அனுமதிக்கும் பெற்றோர்களும், மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்பது மிக முக்கியமான அம்சம். 
மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவின் இன்னொரு மிக முக்கியமான அம்சம், ஈர நெஞ்சத்தாருக்கு (குட் சமாரிட்டன்') தரப்படும் பாதுகாப்பு. விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவப் போய் ஈர நெஞ்சத்தார் படும் அவஸ்தை சொல்லி மாளாது. அதனால், பலரும் சாலை விபத்துகளின்போது மனதை கல்லாக்கிக் கொண்டு அகன்று விடுகிறார்கள். அந்த  நிலைமைக்கு இந்த மசோதா முற்றுப்புள்ளி வைக்கிறது என்பது வரவேற்புக்குரிய திருத்தம் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. 
மாநில அரசுகளின் உரிமைகளை மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா பறிக்கிறது என்கிற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில உரிமைகளைவிட பொது மக்களின் உயிரும், பாதுகாப்பும் முக்கியமானது. மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக வேண்டும். இந்த  சட்டத்திருத்த மசோதா கொண்டுவருவதன் நோக்கத்தையும் உணர்வையும் புரிந்துகொண்டு, மாநில அரசுகள் அதற்கு வெற்றிகரமாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும். போக்குவரத்து விதிமீறல்கள் தடுக்கப்பட வேண்டும். நெடுஞ்சாலை மரணங்கள் இல்லாத நிலையை இந்தியா எய்த வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com