இனி, அடுத்த காட்சி...

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தனது பதவி விலகல் கடிதத்தை

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் அளித்து அடுத்தகட்ட மாற்றத்துக்கு வழிகோலியிருக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அவரது தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடையும் என்பது தெரிந்தும்கூட, அவர் உடனடியாகப் பதவி  விலகாதது அவருக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.
நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்தின் முடிவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்ததைத் தொடர்ந்து முதல்வர் குமாரசாமி பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலைமை ஏற்பட்டது. 
கடந்த 14 மாதங்கள் ஊழலற்ற ஆட்சியை வழங்கியதாகவும், தான் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க விரும்பவில்லை என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் பின்வாங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தது நகைப்பை வரவழைத்தது. தான் பதவி விலகியதன் மூலம் கடந்த இரண்டு வாரங்களாக கர்நாடகத்தில் நிலவிய அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் குமாரசாமி. 
கர்நாடகத்தில் வரலாறு திரும்பியிருக்கிறது. 2007-இல் இதேபோல பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து, குமாரசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மை பலத்தை இழந்தது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. பெரும்பான்மை பலத்தையும் ஏற்படுத்திக் கொண்டது. 
இந்த முறையும் கடந்த முறை போலவே எடியூரப்பா பெரும்பான்மையை உருவாக்கிக் கொள்வார் என்று நம்பலாம். ஆனால், அரசியல் ஒழுக்கம் எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதன் எடுத்துக்காட்டாக கர்நாடக அரசியல் மாறியிருக்கிறது. கர்நாடக நிகழ்வு கவலையளிக்கும் மூன்று செய்திகளைத் தெரிவிக்கிறது. 
கூட்டணி ஆட்சியின் நம்பகத்தன்மையும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நாணயமும், கொள்கைப் பிடிப்பும் கேள்விக்குறியாகி இருக்கின்றன என்பது முதலாவது செய்தி.
பதவிக்காக கொள்கையைக் கைவிடும் போக்கு கூட்டணி ஆட்சியின் தவிர்க்க முடியாத இயல்பாகியிருக்கிறது என்பதைப் பிகாரும், கோவாவும், கர்நாடகமும் வெளிச்சம் போடுகின்றன. 
ஐரோப்பிய ஜனநாயகத்தில் நீண்ட காலமாகவே கூட்டணி ஆட்சிகள் இருந்துவந்திருக்கின்றன. ஆனால், இந்தியாவில் நடப்பது போன்ற கூட்டணிக் கூத்துகள் நடப்பதில்லை.
இரண்டாவது கவலையளிக்கும் போக்கு என்னவென்றால், அரசியல் சாசன அமைப்புகள் கடமை தவறுகின்றன என்பதும், அந்தப் பதவியை வகிப்பவர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றனர் என்பதும்தான். நாடாளுமன்ற ஜனநாயக முறையில் ஒவ்வோர் அரசியல் சாசன அமைப்புக்கும், அந்தப் பொறுப்பில் இருப்பவருக்கும் தெளிவான கடமைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கடமையும் பொறுப்பும் முறையாக நிர்வகிக்கப்படாத போக்கு அதிகரித்து வருகிறது.
அன்றாட அரசியலில் தலையிடாமல், பொதுவான பொறுப்பை வகிப்பவர் ஆளுநராக இருப்பவர். அதேபோல, பேரவைத் தலைவர் என்பவர் எந்தவொரு கட்சியையும் சாராமல் விதிகளின் அடிப்படையில் சட்டப்பேரவையை நடத்துபவர். கர்நாடகத்தில் ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிக்கும் நடந்த அரசியல் போராட்டத்தில் பாஜக ஆதரவாளரான ஆளுநரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவாளரான பேரவைத் தலைவரும் மறைமுகமாக மோதிக் கொண்டனர். 
இதுபோல பொறுப்பான பதவி வகிப்பவர்கள், சட்டப்படி தங்களது கடமையைச் செய்யாமல் உள்நோக்கத்துடன் செயல்படத் தொடங்கினால், ஜனநாயக முறையின் மீது மக்களின் நம்பிக்கை தகர்ந்துவிடும்.
கடந்த இரண்டு வாரங்களாக கர்நாடகத்தில் நடைபெறுகின்ற அரசியல் குழப்பம் எந்த அளவுக்கு கேலிப் பொருளாக அரசியல் சாசனம் மாற்றப்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. பிரச்னைகள் எழும்போது சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து, வகுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதுதான் அரசியல் சாசனம் வகுத்திருக்கும் பாதை. கர்நாடக சட்டப்பேரவை அதிருப்தி உறுப்பினர்கள் இரு தரப்பாலும் பேரம் பேசப்பட்ட விதமும், அவர்கள் நடந்து கொண்ட விதமும் அரசியல் சாசனத்தைக் கேலி செய்வதாக அமைந்ததை வேதனையுடன் இந்திய ஜனநாயகம் பார்த்துக் கொண்டிருந்தது.
குமாரசாமியின் ராஜிநாமாவைத் தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆளுநரின் ஆதரவும், மத்திய அரசின் ஆசியும் எடியூரப்பாவுக்கு இருக்கும் நிலையில், அவர் நிலையான ஆட்சியைத் தரக்கூடும் என்றும் எதிர்பார்க்கலாம். 
நிலையான ஆட்சி அமைவதாலேயே நல்ல ஆட்சி அமைந்துவிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ருசி கண்ட பூனைகளாக கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாறிவிட்டிருக்கும் நிலையில், எடியூரப்பாவும் தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள, பெரும் விலை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
இந்திய ஜனநாயகத்துக்கு எச்சரிக்கையை கர்நாடகம் எழுப்பியிருக்கிறது. ஆட்சியைப் பிடிப்பதற்காகவும், பதவிக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கர்நாடக அரசியல் சித்தாந்தத்தை இந்தியாவின் ஏனைய மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கினால், அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை ஜனநாயகத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் யோசித்தாக வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com