அமெரிக்க அதிபரா இப்படி?

அமெரிக்காவின் அதிபராக இருக்கும் ஒருவர் பின்விளைவுகள் குறித்து

அமெரிக்காவின் அதிபராக இருக்கும் ஒருவர் பின்விளைவுகள் குறித்துச் சிந்திக்காமல், ஆதாரமில்லாத கருத்துகளை வெளிப்படுத்துவது மிகுந்த கண்டனத்துக்குரியது. காஷ்மீர் பிரச்னை குறித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்து இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் அதிர்ச்சி அலையையும், கடுமையான விமர்சனத்தையும் எழுப்பியிருக்கிறது. 
பாகிஸ்தான் பிரதமரின் சமீபத்திய முதலாவது சந்திப்பின்போது, ஜப்பானில் கூடிய ஜி-20 மாநாட்டின்போது காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னைக் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார் அதிபர் டிரம்ப். அதன் விளைவாக இந்திய நாடாளுமன்றம் அமளி துமளிப்பட்டது. 
பிரதமர் மோடி அப்படியொரு கருத்தைத் தெரிவிக்கவில்லை என்று, அதிபர் டிரம்ப்புடனான பிரதமர் மோடியின் சந்திப்பின்போது உடன் இருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இந்தியாவின் நிலைமையைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். காஷ்மீர் பிரச்னையையே பிரதமர் எழுப்பவில்லை என்பதையும், பாகிஸ்தானுடனான எல்லாப் பிரச்னைகளும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுமே தவிர, மூன்றாவது நபரின் அல்லது நாட்டின் தலையீட்டுக்கு இடமில்லை என்பதையும் ஐயப்பாட்டுக்கு இடமின்றி வெளியுறவுத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருக்கிறார்.
இந்திய அரசால் முற்றிலுமாக மறுக்கப்பட்டிருக்கும் அதிபர் டிரம்ப்பின் கருத்து வியப்பை ஏற்படுத்திவிடவில்லை. இதுபோல தொடர்பில்லாமலும், ஆதாரமில்லாமலும் கருத்துகளைத் தெரிவிப்பதும், ஏனைய நாடுகளுடனான நல்லுறவை பாதிக்கும் அறிவிப்புகளை வெளியிடுவதும் அதிபர் டிரம்ப்புக்கு புதிதொன்றுமல்ல. 
கனடா, மெக்ஸிகோ, முக்கியமான ஐரோப்பிய நட்பு நாடுகள் ஆகியவற்றுடனான அமெரிக்காவின் ராஜாங்க ரீதியான நெருக்கத்தை அதிபர் டிரம்ப்பின் செயல்பாடுகள் குலைத்திருக்கின்றன. தன்னிச்சையாக ஈரானிய அணு ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டு, உலகைப் போரின் விளிம்புக்கு கொண்டு நிறுத்தும் அளவுக்கு அவரது பொறுப்பற்ற செயல்பாடு இருந்து வருகிறது. சர்வதேசப் பொருளாதார சமநிலையை டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுகள் கடந்த சில மாதங்களாகப் புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அவர் புரிந்து வைத்திருப்பார் என்கிற எதிர்பார்ப்பு கடந்த சில மாதங்களாகவே பொய்த்து வருகிறது. சீனாவுடன் பொருளாதாரப் பிரச்னைகளில் அமெரிக்கா பனிப்போர் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவுடனான உறவை பலமாகத் தக்கவைத்துக் கொள்வார் என்று நினைத்தால், வர்த்தக ரீதியாக இந்தியாவுக்கு எதிரான நிலையை டிரம்ப் நிர்வாகம் கையாண்டு வருகிறது. 
இந்தியா எத்தனையோ பிரச்னைகளுக்கு இடையிலும், சீன-பாகிஸ்தான் நெருக்கத்தின் காரணமாக, அமெரிக்காவுடனான நல்லுறவை மிகவும் பொறுமையாகவும் சாதுர்யமாகவும் பேணி வருகிறது. ஆனால் அதிபர் டிரம்ப்போ, அளவுக்கு மீறி இந்தியாவின் பொறுமையைச் சோதிக்க முற்பட்டிருக்கிறார். 
காஷ்மீர் பிரச்னையைப் பொருத்தவரை, 1972-இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும், பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி புட்டோவுக்கும் இடையே கையொப்பமான சிம்லா ஒப்பந்தத்தை இன்று வரை இந்தியா மதித்து நடந்து வருகிறது. இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சங்கள் ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மதிப்பதும், இரு நாடுகளுக்கிடையேயான எல்லா பிரச்னைகளுக்கும் நேரடியான இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே முடிவு காண்பது என்பதும்தான். 
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை பாகிஸ்தான் பலமுறை தொடர்ந்து மீறி சிம்லா ஒப்பந்தத்தின் உணர்வை மதிக்காமல் நடந்திருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை, காஷ்மீர் பிரச்னையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்கிற தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதில்லை. அதே நிலை தொடர்கிறது என்பதை நரேந்திர மோடி அரசும் நாடாளுமன்றத்தில் இப்போது தெளிவுபடுத்தியிருக்கிறது. நமது நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை உரக்க வலியுறுத்த வாய்ப்பளித்ததற்கு அதிபர் டிரம்ப்புக்கு நாம் நன்றி கூற வேண்டும்.
ஆப்கானிஸ்தானிலிருந்து தனது துருப்புகளை அமெரிக்கா விலக்கிக்கொள்ள விரும்புகிறது. அதற்கு பாகிஸ்தானின் உதவி அமெரிக்காவுக்குத் தேவைப்படுகிறது. காஷ்மீர் பிரச்னை என்கிற கேரட்டைக் காட்டி பாகிஸ்தானிய ராணுவத்தையும், ஆட்சியாளர்களையும் திருப்திப்படுத்தவும், அவர்கள் உதவியுடன் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்கா விழைகிறது என்று தோன்றுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறினால், அங்கே வியத்நாம் போன்ற நிலைமை ஏற்பட்டு தெற்காசியாவையும் உலகத்தையும் அச்சுறுத்தும் பயங்கரவாதத்தின் உலைக்கலன் உருவாகும் என்பதை டிரம்ப் நிர்வாகம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. 
அதிபர் டிரம்ப்பின் ஆதாரமற்ற, புரிதல் இல்லாத காஷ்மீர் குறித்த கருத்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. காஷ்மீர் விவகாரம் இருதரப்புப் பிரச்னை என்பதை ஏற்றுக்கொண்டு, அதிபர் டிரம்ப்புக்கு பிம்பச் சரிவு ஏற்படாமல் இருப்பதற்கான முயற்சியில் அது ஈடுபட்டிருக்கிறது. 
ஆதாரமில்லாத கருத்தை வெளியிடுவதும், அவசியமில்லாமல் பிரச்னைகளை உருவாக்குவதும், சர்வதேச அரசியலில் தனிமைப்படுவதும், நட்புறவை சிதைத்துக்கொள்வதும் அமெரிக்காவின் அதிபராக இருப்பவருக்குப் பெருமை சேர்க்காது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com