சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் செயற்குழுவில் ராகுல் காந்தி அறிவித்து இன்றுடன் 67 நாள்கள் கடந்துவிட்டன. தனது முடிவை மாற்றிக்கொள்வதில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக ராகுல் காந்தி தெரிவித்துவிட்ட பிறகும்கூட, அடுத்தகட்ட முடிவை காங்கிரஸ் கட்சி எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் நீண்ட நெடிய  வரலாற்றில் இதுபோன்ற நீண்ட நாள் தலைமை வெற்றிடம் இதுவரை ஏற்பட்டதில்லை. 
  2019 மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்து அடுத்தகட்ட அரசியல் முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் கட்சியின் செயல்பாடுகளில் அழுத்தமோ, முனைப்போ, இலக்கோ இல்லாமல் இருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் தொலைநோக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் பல்வேறு சட்டத்திருத்தங்களை நரேந்திர மோடி அரசு எந்தவித வலிமையான எதிர்ப்போ, விமர்சனமோ, விவாதமோ இல்லாமல் சுலபமாக நிறைவேற்றிக் கொண்டிருப்பதற்கு, காங்கிரஸ் கட்சியின் தலைமை வெற்றிடம் மிக முக்கியமான காரணம். 
  கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி அரசு கவிழ்ந்திருக்கிறது. இது குறித்து ராகுல் காந்தி தனது சுட்டுரையில் கட்சிக்குள்ளேயே இருக்கும் சில சுயநலவாதிகளின் பங்களிப்பும் காரணம் என்று தெரிவித்திருக்கிறார். அதிலிருந்து காங்கிரஸின் கோஷ்டி மோதல்தான் குமாரசாமி அரசு கவிழ்ந்ததற்குக் காரணம் என்பதை அவர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். கர்நாடகத்தில் மட்டுமல்லாமல்,  இந்தியாவின் வேறு பல மாநிலங்களிலும் கோஷ்டி மோதல்கள் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன.
  அடுத்த ஆறு ஏழு மாதங்களில் மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர், தில்லி ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், அந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் வாய்ப்பு எப்படியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 
  அடுத்த தலைவர் குறித்து முடிவெடுக்க வேண்டிய காங்கிரஸின் செயற்குழு கூடவில்லை. தலைவர் பதவிக்குப் பல பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால், தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் அடுத்த தலைவர் மூத்தவர்களில் ஒருவரா, இளைய தலைமுறைத் தலைவரா, வடநாட்டைச் சேர்ந்தவரா, தென்னாட்டைச் சேர்ந்தவரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடைகாண  முடியாமல் காங்கிரஸ் கட்சியில் மெளனம் நிலவுகிறது. 
  காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கப்போவது நேரு குடும்பமா அல்லது ராகுல் காந்தி தனது குறிப்பில் கூறியிருப்பதுபோல அந்தக் குடும்பம் விலகி நிற்கப் போகிறதா என்பது குறித்த தெளிவு ஏற்பட்டாக வேண்டும். ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா ஆகியவர்களின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்பது குறித்த தெளிவான நிலைப்பாட்டை கட்சி எடுத்தாக வேண்டும். அப்படி எடுக்காமல் போனால், அடுத்தாற்போல தலைமைப் பொறுப்பை ஏற்க இருப்பவரின் ஆளுமை பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெறும் வாய்ப்பு தடுக்கப்படும். நரசிம்ம ராவால் கட்சியைத் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் போனதற்கு நேரு குடும்பத்து விசுவாசிகள் ஏற்படுத்திய பிரச்னைகள்தான் காரணமென்பதை நாடறியும்.
  நேரு குடும்ப விசுவாசிகள் பலரின் பெயர்கள் தலைமைப் பதவிக்கு அடிபடுகின்றன. தங்களது விசுவாசி ஒருவரை தலைமைப் பொறுப்பில் நேரு குடும்பம் நியமிக்குமேயானால், கட்சிக்குப் புத்துயிர் அளிக்கும் முயற்சி வெற்றி பெறாது என்பதை இப்போதே கூறிவிடலாம். காங்கிரஸை ஒற்றுமையாக வைத்திருப்பது நேரு குடும்பம்தான் என்று கருதி பழைய பாணியில் காங்கிரஸ் செயல்படுமேயானால், மீண்டும் நியமன முறை தொடர்ந்து உள்கட்சி ஜனநாயகம் இல்லாமல் அந்தக் கட்சி மேலும் சரிவைத்தான் சந்திக்க நேரிடும்.
  1969 காங்கிரஸ் பிளவுக்கு முன்னால் வரை, காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முறையாக நடத்தப்பட்டு எல்லா பதவிகளுக்கும் தேர்தல் மூலம் மட்டுமே பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதனால்தான் சேலத்திலிருந்து தொண்டரான ராஜாஜியும், விருதுநகரிலிருந்து சாதாரண தொண்டரான காமராஜரும் கட்சியின் தலைவர்களாக உருவெடுக்க முடிந்தது. 
  காங்கிரஸ் மீண்டும் மாநில காங்கிரஸ் கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, காங்கிரஸ் செயற்குழு ஆகியவற்றுக்கான தேர்தலை நடத்த முற்பட வேண்டும். சுதந்திரத்துக்கு முன்னால் வரை அந்தக் கட்சி அப்படித்தான் செயல்பட்டது. இந்திரா காந்தியின் வரவுக்குப் பிறகுதான் காங்கிரஸில் நியமனக் கலாசாரமும் வாரிசு கலாசாரமும் வலுப்பெற்றன. அகில இந்திய தலைமையைப் பின்பற்றி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கூட  அதேமுறை கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிலைநாட்டப்பட்டுவிட்டது.
  காங்கிரஸ் தன்னுடைய பழைய வீரியத்தையும், செல்வாக்கையும் மீட்டெடுக்க, ராகுல் காந்தியின் பதவி விலகல் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளப்போகிறதா, இல்லை ஒரேயடியாகத் தன்னை மேலும் பலவீனமாக்கிக்கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் ஒரு கட்சி ஆட்சி முறைக்கு வழிகோலப் போகிறதா என்பதுதான், இந்திய ஜனநாயகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கேள்வி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai