ஹரியாணா வழிகாட்டுகிறது..

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சி, ஹரியாணா மாநிலத்தில் உள்ள 10 இடங்களையும் கைப்பற்றியிருப்பது

 நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சி, ஹரியாணா மாநிலத்தில் உள்ள 10 இடங்களையும் கைப்பற்றியிருப்பது ஆச்சரியப்படுத்தவில்லை. ஹரியாணாவைப் பொருத்தவரை, 2014 அக்டோபரில் மனோகர் லால் கட்டரின் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல், பாஜகவின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதுதான் உண்மை. இதற்கு முன்னால் நடந்த நகராட்சித் தேர்தல்களிலும், ஜிந்த் சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் ஆளும் பாஜக பெற்ற வெற்றிகளின் நீட்சிதான் இப்போதைய மக்களவைத் தேர்தல் வெற்றி.
 பாஜகவின் செல்வாக்குக்கும் தொடர் வெற்றிக்கும் அடிப்படைக் காரணம் முதல்வர் கட்டரின் தலைமையிலான பாஜக அரசின் திறமையான நிர்வாகமும், ஊழலற்ற ஆட்சியும்தான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் ஹரியாணா அரசு கொண்டு வந்திருக்கும் பல நிர்வாகச் சீர்திருத்தங்கள் அந்த மாநிலத்தின் மீதான ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட கறைகளை பெருமளவில் துடைத்தெறிந்திருக்கிறது.
 பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1966-இல் ஹரியாணா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது முதல் பன்சிலாலில் தொடங்கி, கட்டருக்கு முன்பு முதல்வராக இருந்த பூபிந்தர் சிங் ஹூடா வரையிலான அத்தனை முதல்வர்களும் ஏதாவது ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி மக்களின் வெறுப்பை எதிர்கொண்டவர்கள்தான். தனியார் குடியிருப்பு நிறுவனங்களுக்கும் மனை வணிக நிறுவனங்களுக்கும் சலுகை வழங்கி மாநில ஆட்சியாளர்கள் கோடிகளில் புரள்வது வாடிக்கையாக இருந்தது. போதாக்குறைக்கு அரசு ஊழியர்களின் இடமாற்றம், நியமனம் உள்ளிட்டவை ஆட்சியாளர்களால் ஒரு தொழிலாக மாற்றப்பட்டிருந்தது.
 தேவி லாலின் மகன் ஓம் பிரகாஷ் சௌதாலா 1989-90-லும், 1999-2005-லும் முதல்வராக இருந்தார். இவரது பதவிக் காலத்தில் 3,206 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் மிகப் பெரிய முறைகேடு நடந்தது. முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவும் அவரது மகன் அஜய் சிங் சௌதாலாவும் நேரடியாகவே கையூட்டுப் பெற்று ஆசிரியர்களை நியமித்தனர். 2008 ஜூன் மாதம் முன்னாள் முதல்வர் சௌதாலா உள்ளிட்ட 53 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சௌதாலாவுக்கும் அவரது மகனுக்கும் 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் 2013-இல் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்திய நிலையில் அவர்கள் இருவரும் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
 9-ஆவது முதல்வராக ஆட்சிக்கு வந்து, 2005 முதல் 2014 வரை ஆட்சியிலிருந்த பூபிந்தர் சிங் ஹூடாவும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் வழக்குகளையும் எதிர்கொள்கிறார். பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு வரம்பு மீறிய சில சலுகைகளை வழங்கி, பல நூறு கோடி ரூபாய் முறைகேடுகளுக்கு வழிகோலிய குற்றச்சாட்டு அவர் மீது நிலவுகிறது.
 இந்தப் பின்னணியில்தான் 2014-இல் ஆட்சிக்கு வந்த மனோகர் லால் கட்டர் தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடுகள் மக்களால் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் நில ஒதுக்கீட்டுப் பிரச்னைகளில் முற்றிலுமாக வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தியிருப்பது கட்டர் அரசின் மிகப் பெரிய வெற்றி. அடுத்தபடியாக வரைமுறை இல்லாத அரசுப் பணியாளர்களின் இடமாற்றத்துக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சிக்காரர்கள் ஆகியோரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப இடமாற்றம் வழங்குவதற்கும் முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
 இதற்கு முன்னால் ஹரியாணாவில் அரசுப் பணியாளர்கள் நியமனத்தில் பரவலாகக் காணப்பட்ட ஊழலும், அரசியல் தலையீடும் மக்களை ஆட்சியாளர்கள் மீது சலிப்படையவும், வெறுப்படையவும் வைத்திருந்தது. அந்த நிலைமையை முற்றிலும் மாற்றி வெளிப்படைத்தன்மையுடன் முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில் மட்டுமே அரசு வேலைவாய்ப்பு என்பதை கட்டர் அரசு உறுதிப்படுத்தியிருக்கிறது. கட்டார் அரசின் துணிச்சலான இந்த முடிவுதான் அந்த அரசுக்கு மிகப்பெரிய செல்வாக்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 ஹரியாணா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம்தான் காவல் துறைக்கான சீருடைப் பணியாளர்கள், "கிளாஸ் 4' ஊழியர்கள், கணக்கர்கள், "குரூப் சி', "குரூப் டி' ஊழியர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கட்டர் அரசு அமைந்த பிறகு, வேறு சில மாநிலங்களைப் போலவே "குரூப் சி', "குரூப் டி'-க்கான நேர்முகத் தேர்வுகள் அகற்றப்பட்டிருக்கின்றன. இதுவரை நடந்து வந்த முறைகேடுகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஹரியாணா அரசுப் பணியில் உள்ள "குரூப் சி' ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு தேர்வெழுதியாக வேண்டும் என்கிற புதிய வரைமுறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
 லட்சக்கணக்கான இளைஞர்கள் தகுதியின் அடிப்படையில் எந்தவிதக் கையூட்டும் வழங்காமல் அரசுப் பணியில் இணைகிறார்கள். அதன் விளைவாக மேலதிகாரிகளும் தங்களது பழைய வழிமுறைகளை மாற்றிக்கொண்டு ஊழலில்லாத நேர்மையான நிர்வாகத்தை வழங்க முற்பட்டிருக்கிறார்கள். இப்படியொரு மாற்றம், ஊழலில் கொழித்த ஹரியாணா மாநிலத்தில் நிகழுமென்று யாருமே கனவில்கூட எதிர்பார்த்திருக்க முடியாது.
 ஊழல், அரசியல் தலையீடு போன்றவற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்று யார் சொன்னது? ஹரியாணா வழிகாட்டுகிறது. இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் அதைப் பின்பற்ற முற்பட்டால், ஊழலற்ற இந்தியாவை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், ஊழல் குறைந்த இந்தியா சாத்தியப்படக்கூடும்!
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com