சம்பிரதாயமா... வாக்குறுதியா?

நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியதற்கு

நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியதற்கு முன்பாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். 17-ஆவது மக்களவைத் தலைவராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 
பல ஆண்டுகளுக்குப் பிறகு தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைந்துள்ளது. 542 உறுப்பினர்களில் 353 பேர் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள்.  பாஜகவின் எண்ணிகை பலம் மட்டுமே 303 இடங்கள். வலுவை இழந்த எதிர்க்கட்சி வரிசையுடன் 17-ஆவது மக்களவை காட்சியளிக்கிறது என்பது மட்டுமல்ல, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்குரிய இடங்களில்கூட வெற்றி பெறவில்லை.  
நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது கட்சி குறித்தோ, எதிர்க்கட்சி குறித்தோ உறுப்பினர்கள் சிந்திக்கக் கூடாது. நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதுடன் மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களது எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுடைய ஒவ்வொரு கருத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்குத் தகுந்த மதிப்பளிக்கப்படும் என்று பிரதமர் கூறியிருப்பது வரவேற்புக்குரியது.
எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மரியாதை அளிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருப்பது சம்பிரதாயத்துக்காகவா அல்லது ஆளும் கட்சியின் அணுகுமுறையின் வெளிப்பாடா என்பதை அன்றாட நடவடிக்கைகளில் நாடாளுமன்றம் ஈடுபடும்போதுதான் தெரிந்துகொள்ள முடியும். எதிர்க்கட்சிகளுக்குப் போதிய வாய்ப்பளித்து, பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள அரசு முற்படுமேயானால் மட்டுமே, கூச்சல், குழப்பம் இல்லாமல் நாடாளுமன்றம் செயல்படும்.
கடந்த 16-ஆவது மக்களவையில் எதிர்க்கட்சிகளின் குரல் எடுபடவில்லை என்பது மட்டுமல்ல, முறையான வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. பல முக்கியமான பிரச்னைகளில் விவாதத்துக்கும், விமர்சனங்களுக்கும் இடமளிக்காமல் அவசரச் சட்டங்களின் மூலம் அணுக அரசு முற்பட்டது. வேறு வழியே இல்லாத நிலையில் மட்டுமே அவசர சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதும், ஒவ்வொரு மசோதாவும் நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்ட பிறகே சட்டமாக்கப்பட வேண்டும் என்பதும் ஜனநாயக நெறிமுறை.
இந்திய ஜனநாயகம் எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கு அடித்தளம் அமைத்தது 1952-இல் அமைந்த முதலாவது மக்களவை. அப்போது 489 இடங்கள் மட்டுமே இருந்த மக்களவையில், பெரும்பான்மை பெறுவதற்கு 245 இடங்கள் போதும். ஆனால், பண்டித ஜவாஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி 364 இடங்களைப் பெற்று, இப்போதைய நரேந்திர மோடி அரசைவிட பலமான ஆளுங்கட்சியாக இருந்தது. எதிர்க்கட்சி வரிசையில் இரண்டு இலக்க  இடங்களுடன் 16 இடங்கள் வென்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், 12 இடங்களைக் கொண்ட சோஷலிஸ்ட் கட்சியும் மட்டுமே காணப்பட்டன.
எதிர்க்கட்சிகளுக்கு எண்ணிகை பலம் இருக்காவிட்டாலும்,   தலைசிறந்த நாடாளுமன்றவாதிகள் பலர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர். தோழர் ஏ.கே.கோபாலன் தலைமையில் கம்யூனிஸ்டுகளும், ராம் மனோகர் லோஹியா, ஆசார்ய கிருபளானி உள்ளிட்டோர் தலைமையில் சோஷலிஸ்டுகளும் எண்ணிக்கை பலவீனத்தை ஈடுகட்டினர். பிரதமர் ஜவாஹர்லால் நேருவும், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசும்போது, தான் அவையில் இருப்பதைக் கட்டாயமாக்கியிருந்தார். அதன் மூலம் அவரது அமைச்சரவை சகாக்கள் எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்கும், விமர்சனங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதை பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு உறுதிப்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் உரையாற்றும்போது, ஆளும்கட்சித் தரப்பிலிருந்து எந்தவித இடையூறோ, குறுக்கீடோ இல்லாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 
பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு கையாண்ட அதே அணுகுமுறையைப் பிரதமர் நரேந்திர மோடியும் கையாள முற்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத்தின் செயல்பாடு ஆக்கப்பூர்வமானதாக  இருக்க முடியும். 16-ஆவது மக்களவையில் கூட்டத்தொடர் நடக்கும்போது அரசு முறைப் பயணமாக பிரதமர் பலமுறை வெளிநாடுகளுக்குச் சென்றது அதுவரை இல்லாத வரம்புமீறல். கூட்டத்தொடர் நடக்கும்போது  நாடாளுமன்றத்தில் இருப்பதை பிரதமர் உறுதிப்படுத்தினால், எதிர்க்கட்சியினரின் குரலுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்கிற அவரது உறுதிமொழியைச் செயல்படுத்த முடியும்.
ஒரே தேசம், ஒரே தேர்தல் பிரச்னையை விவாதிப்பதற்காக அரசுத் தரப்பால் கூட்டப்பட்ட முதல் அனைத்துக் கட்சி கூட்டத்திலேயே எல்லா கட்சிகளும் பங்கு பெறவில்லை என்பதிலிருந்து எந்த அளவுக்கு இரு தரப்பும் இணைந்து செயல்படும் என்பது வெளிப்படுகிறது. எல்லா பிரச்னைகளிலும் ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சிகள் ஒத்துப்போக வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஆளும்கட்சிக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தாலும் அதை வெளிப்படுத்தும் வாய்ப்பை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவது ஆளும் கட்சியின் கடமை. 
ஆளும் கட்சிக்குப் பெரும்பான்மை பலம் இருக்கும் நிலையில், மக்களவையின் செயல்பாட்டு முடக்கம் இருக்காது என்று நம்பலாம். ஆனால், அது மட்டுமே மக்களவையின் வெற்றிகரமான செயல்பாடாக இருக்காது. எதிர்க்கட்சிகளுக்கு எந்த அளவுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது, அவையில் விவாதம் நடைபெறுகிறது என்பதன் அடிப்படையில்தான் ஜனநாயகத்தின் வெற்றி - தோல்வி தீர்மானிக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com