சுடச்சுட

  

  இந்திய நாடாளுமன்றத்துக்கு என்றொரு மரபு உண்டு. நமது நாடாளுமன்றத்தின் மாண்புகள் புனிதமானவையாகக் கருதப்படுபவை. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமராக இந்திய நாடாளுமன்றத்துக்குள் நரேந்திர மோடி நுழைந்தபோது தரையில் விழுந்து வணங்கிவிட்டு நுழைந்தார் என்றால், நாடாளுமன்றத்தின் மீதான அவரது மதிப்பும் மரியாதையும் எந்த அளவிலானது என்பது வெளிப்பட்டது. நாடாளுமன்றத்தின் மதிப்புக்கு அவரது ஆட்சியில் களங்கம் ஏற்படுவது வேதனை அளிக்கிறது.
  பதினேழாவது மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடந்தது. இதுவரை இல்லாத புதிய சில தேவையற்ற பழக்கங்கள் இந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பின்போது கையாளப்பட்டதுதான் விமர்சனத்துக்கும், முகச்சுளிப்புக்கும் காரணமாகியிருக்கிறது. அமைதியாக நடந்திருக்க வேண்டிய உறுப்பினர்களின் பதவியேற்பு, ஏதோ திருவிழா போலக் கோஷங்களுடன் நடைபெற்றதைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது.
  பதவியேற்க வந்த மேற்கு வங்க பாஜக உறுப்பினர்கள், பதவியேற்பதற்கு முன்னால் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமெழுப்ப, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தங்கள் பங்குக்கு ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் அதை வழிமொழிய, நாடாளுமன்றம் ஏதோ கட்சி மாநாடு போலக் காட்சியளித்தது. பாஜகவினரைப் பின்பற்றி, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெய் பங்களா, ஜெய் மா துர்கா என்று கோஷமெழுப்பத் தொடங்கியபோது, நோய்த்தொற்றுபோல எல்லா கட்சியினரும் தங்கள் பங்குக்கு கோஷமெழுப்பியபடி பதவியேற்றது, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக மாற்றியது.
  ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு திடீரென்று ஏன் பாபா சாகேப் அம்பேத்கர் மீது பாசம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. அவரது பங்குக்கு ஜெய் பீம், ஜெய் மீம், தக்பீர் அல்லாஹு அக்பர், ஜெய் ஹிந்த் என்று கோஷமெழுப்பிப் பதவியேற்றுக் கொண்டார்.
  நமது தமிழக திமுக கூட்டணி உறுப்பினர்களும் சளைத்தவர்களில்லை. தமிழ் வாழ்க கோஷத்துடன் நிறுத்திவிடாமல், சிலர் கருணாநிதி, பெரியார் என்று தங்களது தலைவர்களுக்கும் வாழ்க கோஷம் போட்டுப் பதவி ஏற்றுக்கொண்டனர். 
  பாஜகவில் தொடங்கி, கோஷம் எழுப்பியபடி பதவியேற்ற அத்தனை உறுப்பினர்களிடமும், நாடாளுமன்றத்தின் மாண்பையும் மரபையும் காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறையைவிட, அரசியல் ரீதியாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம்தான் மேலெழுந்திருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது.
  130 கோடி மக்களைப் பிரதிபலிக்கும் 542 உறுப்பினர்கள் எனும்போது, அந்த உறுப்பினர்களின் பொறுப்பும், கடமையுணர்வும் எந்த அளவில் இருக்க வேண்டும் என்று நாம் சிந்தித்துப் பார்த்தால், பதவியேற்பின்போது எழுப்பப்பட்ட கோஷங்களின் தரக்குறைவு புரியும். ஓட்டப் பந்தயத்தில் பங்கு பெற்று வெற்றி பெறுவது போலல்ல, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பதவியேற்பது என்பதுகூடப் புரியாதவர்களை நாம் தேர்ந்தெடுத்து அனுப்பி விட்டோமோ என்கிற அச்சம் மேலெழுகிறது.
  பதினேழாவது மக்களவையில், கடந்த மக்களவையைவிட அதிக அளவில் மகளிர் இடம்பெறுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது. 542 உறுப்பினர்கள் உள்ள அவையில் 78 பேர், அதாவது 14.3% மகளிர் என்பது, இடஒதுக்கீடு இல்லாமலேயே மகளிரின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது என்பதைத்தான் காட்டுகிறது.
  மகளிரின் எண்ணிக்கை பலம் அதிகரிக்கும்போது, அவையின் செயல்பாடுகள் மேம்படும். எனினும், கோஷம் எழுப்புவதில் தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்தனர்.
  கடந்த 2014-இல் மொத்த உறுப்பினர்களில் 316 பேர் நாடாளுமன்றத்துக்குப் புதியவர்கள் என்றால், இந்த முறை முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233 மட்டும்தான். முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குப் போகிறோம் என்கிற மிகப் பெரிய எதிர்பார்ப்புடனும், கனவுடனும் பதவி ஏற்றவர்களில் பலரும், பதவியேற்பின்போது காணப்பட்ட கோஷங்களைப் பார்த்து, ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்தார்களா என்றால் இல்லை. 
  அவர்கள் மற்றவர்களைவிட உரக்க கோஷங்களை எழுப்பி பதவி ஏற்றனர்.
  பதினேழாவது மக்களவையில் இடம்பெற்றிருக்கும் உறுப்பினர்களில் 233 பேர், அதாவது 43% பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்று தெரியும்போது, நமக்கு நம்பிக்கை எப்படி ஏற்படும்?
  தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்குகள் அரசியல் ரீதியிலானவை என்று, குற்றப் பின்னணியுள்ள எல்லா உறுப்பினர்களாலும் தங்களை நியாயப்படுத்திக் கொண்டுவிட முடியாது. 29% வழக்குகள் பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எனும்போது, அதை அவர்கள் எப்படி நியாயப்படுத்த முடியும்?
  நாடு தழுவிய அளவில் காணப்படும் வறட்சியும் அதனால் ஏற்பட்டிருக்கும் தண்ணீர்ப் பஞ்சமும் அச்சுறுத்துகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம், உணவுப் பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்டவை இதர பிரச்னைகள். இப்படி, கவலைப்படுவதற்கு நிறையவே இருக்கும்போது, 130 கோடி மக்களின் பிரதிநிதிகளாக மக்களவைக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டிருப்பவர்கள் கோஷங்களை எழுப்பிக் குதூகலிப்பது  என்பது எந்தவிதத்திலான ஜனநாயகம்?
  புதிய மக்களவை உறுப்பினர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்-கோஷம் போடுவதற்காக மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பவில்லை. அவையின் மாண்பைக் குலைத்து விடாதீர்கள்!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai