பாவம் குழந்தைகள்!

பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில்

பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 136 குழந்தைகள்  மரணித்திருக்கின்றன. ஆரம்பத்தில் குழந்தைகளின் மரணத்துக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருந்ததும், கோடையின் தாக்கமும், "ஹைபோகிளை சிமியா' என்கிற திடீர் ரத்த சர்க்கரை அளவு குறைவும் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டன. குழந்தைகளின் மரணத்துக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஊட்டச்சத்து குறைவும், போதுமான அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாமல் இருப்பதும் குழந்தைகளின் மரணத்துக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் என்று அரசே இப்போது ஒப்புக்கொள்கிறது.

1995 முதல் தொடர்ந்து ஆண்டுதோறும் கோடைகாலத்தில் மூளை அழற்சி நோய் தாக்கி வந்திருக்கிறது. 2010 முதல் 2014 வரையிலான புள்ளிவிவரப்படி 1,000-க்கும் அதிகமான குழந்தைகள் முசாபர்பூர் மாவட்டத்தில் மூளை அழற்சி நோய் பாதிப்புக்குள்ளாகி மரணித்திருக்கின்றன. 

லிட்ச்சி என்கிற பழங்கள் மிக அதிகமாக உற்பத்தியாகும் பகுதியில் முசாபர்பூர் மாவட்டம் இருக்கிறது. மூளை அழற்சி நோயை ஏற்படுத்தும் நச்சுப்பொருள் லிட்ச்சி பழத்தில் காணப்படுகிறது. பகலில் லிட்ச்சி பழங்களைச் சாப்பிடும் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் முறையான உணவில்லாமல் இரவில் உறங்கப் போகும்போது லிட்ச்சியிலுள்ள நச்சுப்பொருள் உயிர்க்கொல்லியாக மாறிவிடுகிறது. லிட்ச்சியிலுள்ள நச்சுப்பொருள் போதுமான ஊட்டச்சத்துள்ள குழந்தைகளைப் பாதிப்பதில்லை.
முசாபர்பூரில் 136 குழந்தைகள் மரணித்திருப்பதற்கு மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென்று குறைந்ததைக் காரணமாக்குகின்றன. மருத்துவமனைகளில் போதுமான அளவு தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாமல் இருப்பதையும், அனல் காற்றையும் காரணிகளாக்குகின்றன. பிகார் மாநிலத்தில் முசாபர்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை ஆண்டுதோறும் இந்த நோய் பாதித்து வந்தும்கூட, இதை எதிர்கொள்ள நிர்வாகம் தயாராக இல்லாதது குறித்து அவர்கள் மெளனம் சாதிக்கின்றனர். 

2014-இல் முசாபர்பூர் மாவட்டத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஐந்து ஆண்டுகளாகியும் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை. மருத்துவர்களின் எண்ணிக்கை தேவையைவிட 25 சதவீதம் குறைவாகக் காணப்படுகிறது. செவிலியர், ஆயாக்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களின் நிலைமையும் அதேதான். தொழில்நுட்ப வசதிகள் மிக மிகக் குறைவு. இவையெல்லாம்தான் முசாபர்பூர் பாதிப்புக்கு மிக முக்கியமான காரணங்கள். 

முசாபர்பூர் மூளை அழற்சி நோய் பாதிப்பு குறித்து 2017-இல் இந்திய - அமெரிக்க மருத்துவக் குழு ஒன்று  ஆய்வு செய்தது. லிட்ச்சி பழங்களைச் சாப்பிட்ட ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள் இரவு உணவருந்தாமல் உறங்கினால் அடுத்த நாள் காலையில் மூளை அழற்சி நோய் பாதிப்புக்குள்ளாவதை அந்த மருத்துவர் குழுவும் உறுதி செய்தது. 

"நோயின் அறிகுறி தெரியத் தொடங்கிய நான்கு மணி நேரத்துக்குள் 10% டெக்ஸ்ட்ரோஸ்  கொடுப்பதன் மூலம் 74% குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்; சாதாரண குறைந்த ரத்த சர்க்கரைக்கு 5% டெக்ஸ்ட்ரோஸýம், அதிக அளவிலான பாதிப்புக்கு 10% டெக்ஸ்ட்ரோஸýம்  கொடுத்தால் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்' என்று 2014-இல் இன்னொரு ஆய்வுக் குழு உறுதிப்படுத்தியிருக்கிறது.

மூளை அழற்சி நோய்தான் குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமென்றால், இந்த மிகவும் எளிமையான டெக்ஸ்ட்ரோஸ் மருத்துவத்தின் மூலம் பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்குமேயானால், ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்திலும் இதேபோன்ற பாதிப்பு காணப்பட்டது. அங்கே "தஸ்டக்' என்கிற திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி ஆரோக்கியம், ஊரக வளர்ச்சி, அடிப்படைக் கல்வி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, தடுப்பூசி போடுதல் உள்ளிட்டவற்றை உடனடியாகக் கவனிக்க வழிகோலப்பட்டது. அதனால் மூளை அழற்சி நோய் உள்ளிட்ட எந்தவொரு பிரச்னையானாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதால், பெருமளவில் நோய்த்தொற்றுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. அதை பிகார் மாநில அரசு பின்பற்றாமல் போனதன் விளைவால்தான் 136 குழந்தைகளின் இழப்புகளை எதிர்கொள்கிறது.

தென்னிந்திய மாநிலங்களில், அதிலும் குறிப்பாக தமிழகத்திலும் கேரளத்திலும், குழந்தைகளுக்கு முறையான சத்துணவு வழங்குதல், தாய் - சேய் நலன் பேணுதல், ஆரம்ப சுகாதார நிலையங்கள் முறையாகச் செயல்படுதல், கிராமப்புற செவிலியர்களின் அளப்பரிய தொண்டு ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுபோல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டால், பிகாரில் ஏற்பட்டிருக்கும் குழந்தைகளின் உயிரிழப்பு முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

இன்னும்கூட இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 44% போதுமான எடையில்லாத நிலையில் காணப்படுகிறார்கள். ஆரோக்கியமில்லாத குழந்தைகளை வைத்துக்கொண்டு உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வது நகைமுரண் அல்லாமல் வேறென்ன?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com