தொடரும் கும்பல் கொலைகள்...

கும்பல் வன்முறைக்கும், கும்பல் கொலைகளுக்கும் முற்றிலுமாக

கும்பல் வன்முறைக்கும், கும்பல் கொலைகளுக்கும் முற்றிலுமாக முற்றுப்புள்ளி விழும் என்கிற எதிர்பார்ப்பைத் தகர்த்திருக்கிறது ஜார்க்கண்ட சம்பவம். தப்ரஸ் அன்சாரி என்பவர் கும்பல் வன்முறைக்கு ஆளாகி கடந்த சனிக்கிழமை உயிரிழந்திருக்கிறார். ஜார்க்கண்ட் கும்பல் கொலை தொடர்பாக  தான் அந்தச் சம்பவத்தால் மிகவும் வேதனை அடைந்திருப்பதாகவும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 24 வயது தப்ரஸ் அன்சாரி தாக்கப்பட்டிருக்கும் விதம் புதிதொன்றுமல்ல. வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளாகவே பசுப் பாதுகாவலர்கள் நடத்தி வரும் வன்முறைக் கொலைகளின் அதே பாணியில்தான் இதுவும் நடந்தேறியிருக்கிறது. இந்த முறை பசுக்களைப் பாதுகாப்பது அல்லது மாட்டிறைச்சிக்காக மாடுகளைக் கொண்டு செல்வது போன்ற காரணங்கள் இல்லை என்பதுதான் வேறுபாடு. தப்ரஸ் அன்சாரி திருட்டில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, மரத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டிருக்கிறார். ஆனால், இஸ்லாமியரான அவரை ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான் என்று கோஷம் எழுப்ப அந்த வன்முறைக் கும்பல் வற்புறுத்தியிருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
ஜார்க்கண்ட் சம்பவம் குறித்துப் பொதுவெளியில் பரவலான விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய சிலர் கொலை முயற்சி குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது என்றாலும்கூட, பொறுப்பற்ற விதத்தில் செயல்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 
அன்சாரியை பல மணி நேரம் மரத்தில் கட்டிவைத்து நையப்புடைத்த பிறகுதான் சம்பவ இடத்துக்குக் காவல் துறையினர் வந்திருக்கிறார்கள். அப்போதும்கூட, அவரைத் துன்புறுத்திய வன்முறையாளர்கள் கைது செய்யப்படாமல், திருட்டுக் குற்றத்துக்காக தப்ரஸ் அன்சாரி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீதிருந்த காயங்கள் குறித்து எந்தப் பதிவும் செய்யப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையில் அவர் தாக்கப்பட்டிருப்பது குறித்தோ, காயம் அடைந்திருப்பது குறித்தோ எதுவுமே குறிப்பிடப்படவில்லை. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அன்சாரியின் நிலைமை மோசமானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கே உயிரிழந்தார்.
ஜார்க்கண்ட் சம்பவம் ஏதோ திடீரென்று நடந்திருக்கும் சம்பவம் அல்ல. கடந்த மார்ச் 2014 முதல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை 18 பேர் வன்முறைக் கும்பலால்  கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த நிகழ்வுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்றாலும்கூட, இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. அதற்குக் காரணம், தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகைகளில் வலுவான சாட்சியங்களோ சட்டப்பிரிவுகளோ காவல் துறையினரால் சேர்க்கப்படவில்லை. எல்லாவற்றையும்விட அதிர்ச்சி அளிப்பது என்னவென்றால், கும்பல் வன்முறைக்  கொலைகளில் ஈடுபட்டவர்களை முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உள்ளிட்ட ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர்கள் ஆதரித்தும் பாராட்டியும் பேசுவதும்தான். 
இதுபோன்ற கும்பல் கொலைகளில் ஒரு பாணி கடைப்பிடிக்கப்படுகிறது. வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவது செல்லிடப்பேசிகளில் படமெடுக்கப்பட்டு, சமூக ஊடகங்களின் மூலம் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதனால் ஏனைய பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு முன்மாதிரியாகவும், தூண்டுதலாகவும் அந்தச் சம்பவங்கள் மாறிவிடுகின்றன. சமூக ஊடகங்கள் வாயிலாக வதந்திகள் பரப்பப்படுவதும், துவேஷங்கள் உருவாக்கப்படுவதும் ஒருவகை வியாதியாகவே மாறியிருக்கிறது.
கும்பல் கொலைகள் குறித்தும், கும்பல் வன்முறை குறித்தும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கியது. கும்பல் கொலைகளுக்கு என்று தனியான சட்டம் ஏற்படுத்தப்பட்டு அதற்கான தண்டனை நாடாளுமன்றத்தால் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இதற்கென்று தனியான சட்டம் இயற்றப்பட்டால்தான் கும்பல் கொலையில் ஈடுபடும் வன்முறையாளர்களுக்கு அச்சம் ஏற்படும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த கருத்து வரவேற்புக்குரியது. அரசும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசிக்க அமைச்சர் குழு ஒன்றை ஏற்படுத்தியது. இதுவரை அது குறித்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கும்பல் வன்முறைக்கும் கொலைக்கும் தனியாகச் சட்டம் இயற்றியாக வேண்டும் என்கிறஅவசியம் இல்லை. இப்போதிருக்கும் சட்டங்களே போதுமானவை. ஆனால், அரசும் நிர்வாகமும் கும்பல் வன்முறைக்கும் கொலைக்கும் எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுக்காமல் போனால், புதிய சட்டங்கள் கொண்டுவருவதால் மட்டும் எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடாது. 
சட்டத்தை மீறுபவர்களும், முறையான நடவடிக்கைகளை எடுக்காத காவல் துறையினரும் உடனடியாகவும் கடுமையாகவும் தண்டிக்கப்படுவார்கள் என்கிற அழுத்தமான எச்சரிக்கை ஆட்சியாளர்களால் வெளியிடப்பட்டு செயல்படுத்தினால் மட்டும்தான் இதற்கு முற்றுப்புள்ளி விழும். 
பிரதமர் வருத்தம் தெரிவித்தால் போதாது; தனது வார்த்தைக்கு அழுத்தமும், அர்த்தமும் கொடுத்தால் மட்டும்தான், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்பவர்களின் கொட்டத்துக்கு முற்றுப்புள்ளி விழும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com