மாற்றமா, ஏமாற்றமா?

மியான்மரைப் பொருத்தவரை ஆங் சான் சூ கியின் கட்சி அவரது வழிகாட்டுதலின்படி ஆட்சி நடத்தினாலும்கூட, அந்த அரசு எந்த முடிவையும் ராணுவத்தின் ஒப்புதல் இல்லாமல் எடுக்க முடியாது.

மியான்மரைப் பொருத்தவரை ஆங் சான் சூ கியின் கட்சி அவரது வழிகாட்டுதலின்படி ஆட்சி நடத்தினாலும்கூட, அந்த அரசு எந்த முடிவையும் ராணுவத்தின் ஒப்புதல் இல்லாமல் எடுக்க முடியாது. ராணுவத்தைப் பகைத்துக் கொண்டு தற்போது கிடைத்திருக்கும் அரைகுறை ஜனநாயகத்தையும் ஆங் சான் சூ கி இழந்துவிடத் தயாராக இல்லை என்பதால்தான் மனித உரிமை மீறலின் உச்சகட்டமான ரோஹிங்கயா பிரச்னையில் அவர் மெளனம்  காக்கிறார்.

மியான்மரைப் பொருத்தவரை இப்போதிருக்கும் அரசமைப்புச் சட்டத்தின்படி, ராணுவம்தான் மறைமுக அதிகாரத்தை தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறது. 2008-இல் உருவாக்கப்பட்ட, இப்போது நடைமுறையிலுள்ளஅரசமைப்புச் சட்டத்தின்படி உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான எல்லா அமைச்சகங்களும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அத்துடன் நின்றுவிடவில்லை. மியான்மர் நாடாளுமன்றத்தில் நான்கில் ஒரு பங்கு இடங்கள் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் 25% இடங்களை தன்வசம் வைத்திருக்கும் ராணுவத்தின் நடவடிக்கைகளும், முடிவுகளும்தான் அரசு நிர்வாகத்தைப் பொருத்தவரை முன்னுரிமை பெறுகின்றன.

நீண்ட காலம் ராணுவத்தால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூ கி பிரதமராகவோ, அதிபராகவோ பதவியேற்க அனுமதிக்கப்படவில்லை. அவரது கட்சி பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்றாலும்கூட, ஆங் சான் சூ கி அதிபர் பதவிக்கு நிகரான, ஆனால் அதிபர் என்கிற அங்கீகாரம் இல்லாத தலைமை ஆலோசகர் என்கிற பொறுப்புடன்தான் செயல்பட முடிகிறது. 2015-இல் நடந்த தேர்தல் வெற்றியும், அதனால் கிடைத்த ஆட்சி அதிகாரமும் வெறும் ஜனநாயக அடையாளங்கள்தானே தவிர, ஜனநாயக அரசுக்குக் கிடைக்க வேண்டிய அதிகாரம் இல்லாமல்தான் இருக்கிறது என்பதை சூ கி உணராமல் இல்லை. 

இந்தப் பின்னணியில்தான் ஆங் சான் சூ கி மிகவும் துணிச்சலான ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இப்போது ராணுவத்தின் மேலதிகாரத்துடன் செயல்படும் அரசமைப்புச் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கு ஒரு குழுவை நியமிக்க முற்பட்டிருக்கிறார் அவர். ராணுவம் இந்த முயற்சியை முறியடிக்கக் கூடும் என்று தெரிந்தும் அரசமைப்புச் சட்டத்தில் ஒரு குழுவை நியமிக்க முற்பட்டிருக்கிறார் அவர். ராணுவம் இந்த முடிவை ஆதரிக்கிறதா, இல்லை எதிர்க்கப் போகிறதா என்பதில் தெளிவில்லை.

இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருக்கும் நேரம் மிகவும் முக்கியமானது. 2020-இல் நாடாளுமன்றத்திற்கு நடைபெற இருக்கும் தேர்தலுக்கு ஓராண்டே இருக்கும் நிலையில், துணிந்து அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு குழுவை அமைக்க ஆங் சான் சூ கி முற்பட்டிருப்பது மியான்மர் ராணுவத்தை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறதோ இல்லையோ, சர்வதேச அரசியல் நோக்கர்களை நிமிர்ந்து உட்கார்ந்து மியான்மரில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் குறித்து யோசிக்க வைத்திருக்கிறது. 

ஜனநாயகத்துடனான மியான்மரின் போராட்ட வரலாறு நீண்டதொரு பின்னணியைக் கொண்டது. 1990 தேர்தலில் ஆங் சான் சூ கி மிகப் பெரிய வெற்றி பெற்றும்கூட, அவருக்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு ராணுவத்தால் மறுக்கப்பட்டது. மியான்மரின் அதிபராக பதவியேற்க வேண்டிய சூ கி, காராகிருகத்தில் அடைக்கப்பட்டார். கணவன், குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டாலும் மியான்மரின் ஜனநாயகத்துக்காக மன உறுதியுடன் போராடிய ஆங் சான் சூ கியின் துணிச்சல் வரலாற்றில் இடம்பெற்று அவருக்கு நோபல் விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது. இப்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் பிரச்னைக்குரிய அரசமைப்புச் சட்டத்தைச் சீர்திருத்த முற்பட்டிருக்கிறது. 

அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் ராஜதந்திரம் யாரும் எதிர்பாராதது. நான்கில் ஒரு பங்கு இடங்கள் பெற்றிருக்கும் ராணுவத்தையும் மீறி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் அரசமைப்புச் சட்ட மாற்றத்துக்கான ஒப்புதல் பெற்றிருப்பது மிகப் பெரிய வெற்றி. 

அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அனைத்துக் கட்சிகள் குழு விவாதிக்கும். இப்போது நடைமுறையில் இருக்கும் 2008-இல் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் என்னவெல்லாம் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதைத் தீர்மானித்து, மாதிரி மசோதா ஒன்றை உருவாக்கும் பொறுப்பு அந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 

இப்போது மியான்மர் நாடாளுமன்றத்தில் இருக்கும் இடங்களின் அடிப்படையில், அரசமைப்புச் சட்டத் திருத்த குழுவிலுள்ள 45 இடங்களில், 18 இடங்கள் ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பெறுவார்கள். எட்டு இடங்கள் ராணுவத்துக்கும், மீதமுள்ள இடங்களில் ஏனைய கட்சிகளும் இடம்பெறுவர்.  

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ராணுவம் சூ கியின் இந்த முடிவைத் தடுத்திருக்க முடியும்.  தடுக்கவில்லை என்பதே ஆங் சான் சூ கியின் முதல் வெற்றி என்று கொள்ள வேண்டும். அவரது இந்த முயற்சி வெற்றி பெறும் என்று இப்போதும் கூறிவிட முடியாது. அதற்குக் காரணம், இப்போதைய அரசமைப்புச் சட்டப்படி எந்தவொரு அரசமைப்புச் சட்ட மாற்றத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் ராணுவத்திடம் இருக்கிறது. 

அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் தேவை என்பதை ராணுவத் தலைமைத் தளபதி ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றாலும்கூட, இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது நாடாளுமன்றத்தில் ராணுவத்தின் சார்பிலான உறுப்பினர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். மியான்மரில் ஏற்பட இருப்பது மாற்றமா, இல்லை ஏமாற்றமா என்பதை மியான்மர் ராணுவம்தான் தீர்மானிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com