ரயில் கண்காணிப்புப் பலகை!

கடந்த திங்கள்கிழமை,  "ரயில் கண்காணிப்புப் பலகை' (www.raildrishti.cris.org.in) என்ற இணையதளத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.

கடந்த திங்கள்கிழமை,  "ரயில் கண்காணிப்புப் பலகை' (www.raildrishti.cris.org.in) என்ற இணையதளத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல். பயணிகளின்  பயண அனுபவத்தை செம்மைப்படுத்தும் ரயில்வே துறையின் இன்னொரு முயற்சி இது. இந்த இணையதளம் ரயில் பயணிகளுக்கான  பல்வேறு தகவல்களைத் தெரிந்துகொள்ளும்  வாயிலாகச் செயல்படும். ரயில்களின் இயக்கம்,  ரயில் நிலையங்கள் குறித்த விவரம், பயண முன்பதிவு என்று ரயில் பயணம் குறித்த எல்லா விவரங்களையும் இந்த இணையதளம் வழங்குகிறது. 
அதுமட்டுமல்லாமல், பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள், தயாரிக்கப்படும் விதம், விநியோகிக்கும் முறை ஆகியவை இந்த இணையதளத்தில் தெளிவாக விளக்கப்படுகிறது. சுகாதாரமான சூழலில்,  சுத்தமான முறையில்தான் பயணிகளுக்கான உணவு தரமாகத் தயாரிக்கப்படுகிறது என்பதை விடியோ காட்சிகளுடன் விளக்குவதுதான் இதன் நோக்கம். சமையல் அறைகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்கள் உணவுப் பொருள்களின் சுத்தத்தை உறுதிப்படுத்துகின்றன. 
2017-இல் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.) அறிக்கை, இந்திய ரயில்களில்  உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படும் விதம் குறித்து கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது. 80 முக்கியமான பயணிகள் ரயில் தடங்களிலும் 74 ரயில் நிலையங்களிலும் செய்யப்பட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில் 2017-க்கான தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. பயணிகளுக்கு ரயிலில் வழங்கப்படும் உணவுப் பொருள்களும் தண்ணீரும் மனிதர்கள் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லை என்று குறிப்பிட்டிருந்தது அந்த அறிக்கை. 
முன்பதிவு செய்த பயணிகளுக்கு வழங்கப்படும் விரிப்புகளும், போர்வைகளும்கூட மாதக்கணக்கில் சலவை செய்யப்படாமல் இருப்பதை அந்த ஆய்வு கண்டறிந்து பதிவு செய்திருந்தது.  ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் சுகாதாரமானவையாக இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது தலைமைத் தணிக்கை அதிகாரி அறிக்கை. 
"பயணத்தை இனிமையாக்குவதுதான் ரயில்வே நிர்வாகத்தின்  முனைப்பாக இருக்க வேண்டும்' என்று பதவியேற்கும் ஒவ்வொரு ரயில்வே அமைச்சரும் ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது வழக்கமாக இருந்தாலும், தொடர்ந்து ரயில்வே துறை வழங்கும் சேவை குறைபாடுகளுடன் மட்டுமே தொடர்கிறது. ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக இருக்கிறது. பயணிகளின் தேவைக்கேற்ப உணவை வழங்காமல், தேவையில்லாமல் அவர்கள் மீது அநாவசியமான உணவு திணிக்கப்படுகிறது. 
ரயில்களில் வழங்கப்படும் உணவு குறித்த இன்னொரு முக்கியமான குறையைச் சுட்டிக்காட்ட வேண்டும்.  ரயில்கள் இயங்கும் அந்தந்தப் பகுதிகளுக்குப்  பொருத்தமான உணவு வகைகள் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டு, வழங்கப்பட வேண்டும். உணவு வழங்கும் ஒப்பந்தக்காரர்கள் வேற்று மாநிலத்தவர்களாக இருப்பதால், பயணிகளின் ருசிக்கேற்ற, தேவைக்கேற்ற உணவு பெரும்பாலான அதிவிரைவு ரயில்களில் வழங்கப்படுவதில்லை. 
பல அதிவிரைவு ரயில்களில் பயணத் தொகையுடன் உணவுக்கான கட்டணமும் சேர்த்துத் தரப்படும் நிலையில், பயணிகள் மீது ரயில்வே நிர்வாகம்  அவர்களது விருப்பத்துக்கு மாறான உணவைத் திணிக்க முற்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பல சந்தர்ப்பங்களில் ஆறிப்போன, சாப்பிட முடியாத உணவு வழங்கப்பட்டு அதைச் சாப்பிட பயணிகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். 
இந்திய ரயில்வே துறையில் இயங்கும் தொலைதூர ரயில்களில் சுமார் 400 சமையல் பெட்டிகள் இயங்குகின்றன. பாதிக்கும் மேற்பட்ட சமையல் பெட்டிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. உணவுப் பொருள்கள் தயாரிக்கும் ரயில்களில் இயங்கும் இந்த சமையல் பெட்டிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சமையல் 
எரிவாயு, தீ விபத்துக்குக் காரணமாகிவிடும் அபாயம் நிறையவே காணப்படுகிறது. பாதுகாப்பானதாக அவை இல்லை. இது குறித்து ரயில்வே நிர்வாகம் உடனடியாகக்  கவனம் செலுத்தியாக 
வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது முதலே நடுத்தர உயர் வகுப்புப் பயணிகளுக்குத்தான் ரயில் சேவையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழே ஏறத்தாழ 30 சதவீதத்துக்கு மேல் இந்தியர்கள் இருக்கும் நிலையில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளிலும், குளிர்சாதன வசதியில்லாத,  உறங்கும் வசதி மட்டும் வழங்கப்படும் பெட்டிகளிலும் பயணிகளின் வசதிகள் குறித்து ரயில்வே நிர்வாகம் போதிய அக்கறை செலுத்தாத நிலைமை காணப்படுகிறது. 
இந்தப் பெட்டிகளில் கழிப்பறைகள் மட்டுமல்லாமல், பயணம் செய்யும் இருக்கைகளும் பெட்டிகளும்கூட முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. ஆனால், அந்தப் பயணிகளில் எவரும்  தங்களது குறைகளை ரயில்வே நிர்வாகத்திடம் பதிவு செய்யாமல் இருப்பதால், அது குறித்து ரயில்வே நிர்வாகமும்  கவலைப்படுவதில்லை. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எல்லா முக்கிய ரயில் நிலையங்களிலும், மாவட்ட ரீதியாகவும், மாநில அளவிலும் ரயில் பயணிகளின் அமைப்பு வலிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், 
அப்படி ஓர் அமைப்பு இயங்குவதுகூட பலருக்கும் தெரிவதில்லை. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குப் போதிய மரியாதை ரயில்வே நிர்வாகத்தால் வழங்கப்படுவதும் இல்லை!
"ரயில் கண்காணிப்புப் பலகை' என்கிற இணையதளம் தொடங்கப்பட்டிருப்பது குறித்துப் பரவலான  விழிப்புணர்வு ஏற்படுத்தப்
படுவது அவசியம். அதேபோன்று, ரயில் பயணிகளின் அமைப்பு வலுப்படுத்தப்பட்டு அவர்களது உரிமைகளும், தேவைகளும், குறைகளும் ரயில் கண்காணிப்புப் பலகை இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com