சுடச்சுட

  

  ஒருபுறம் அரசு பாலாகோட் விமானத் தாக்குதலையும், இன்னொருபுறம் எதிர்க்கட்சிகளே நமது விமானப் படையின் தாக்குதலின் விளைவுகள் குறித்துக் கேள்வி எழுப்பியும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. இரு தரப்பின் அக்கறையும், அடுத்த சில வாரங்களில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதில் இருக்கிறதே தவிர, தேச நலன் குறித்தும், நமது ராணுவ வீரர்களின் உற்சாகம் குறித்தும் கிஞ்சித்தும் அக்கறை இல்லை என்பதைத்தான் அவர்களது அறிக்கைகளும், பேச்சுகளும் எடுத்தியம்புகின்றன. 
  புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் நடத்திய விமானத் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவதை நமது ராணுவத்தின் வலிமை மீதும், செயல்பாட்டின் மீதும் ஐயப்பாட்டை எழுப்புவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டுகிறார். தேசிய பாதுகாப்பு குறித்து எழுப்பப்படும் கேள்விகள் பாகிஸ்தானுக்கு ஆதரவானவை என்பது அரசுத் தரப்பின் வாதம். இவற்றை முழுமையாக மறுத்துவிட முடியாது என்றாலும்கூட, இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பும் உரிமை எதிர்க்
  கட்சிகளுக்குக் கிடையாது என்றும் கூறிவிட முடியாது.
  ஆமதாபாதில் ஒரு கூட்டத்தில் பேசும்போது பாஜக தலைவர் அமித் ஷா, பாலாகோட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்திய விமானப் படை தலைமைத் தளபதி கூறியிருப்பதுபோல, தாக்குதல் நடத்தும்போது இலக்கு தாக்கப்பட்டதா இல்லையா என்பதைத்தான் பார்ப்பார்களே தவிர, எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து கணக்கெடுக்கும் வழக்கம் ராணுவத்தில் கிடையாது என்பதை அமித் ஷா உணர வேண்டும். 
  கடந்த வாரம் காங்கிரஸ் தலைமையில் தில்லியில் கூடிய 21 எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், இந்திய ராணுவத்தின் தியாகத்தை வரவிருக்கும் தேர்தலில் ஆளுங்கட்சி தனக்குச் சாதகமாக மாற்ற முயற்சிக்கிறது என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, பாலாகோட் தாக்குதலில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்தும், எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்தும், அங்கே ஏற்பட்ட அழிவு குறித்தும் ஆதாரம் கோரியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 
  பிப்ரவரி 26 தாக்குதல் குறித்து விடியோ ஆதாரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கோரியிருக்கிறார் காங்கிரஸின் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங். இதுபோன்ற கோரிக்கைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் ஆதரவு திரட்டித்தர பயன்படுமே தவிர, எதிர்க்கட்சிகளுக்குத் தேர்தல் ஆதாயமாக மாறாது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. 
  பாலாகோட் தாக்குதல் குறித்த விண்கோள் புகைப்படங்களை அமெரிக்காவைச் சேர்ந்த பிளானட் லாப்ஸ் என்கிற தனியார் விண்கோள் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்திய விமானத் தாக்குதல் முடிந்து ஆறு நாள்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டு, பாலாகோட்டில் உள்ள ஜெய்ஷ் ஏ முகமது, மதரஸா இயங்கிய பகுதியில் ஆறு கட்டடங்கள் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் இருப்பதாக புகைப்படங்களை அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. 
  இது பயங்கரவாதிகளாலோ, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மூலமோ இந்தியாவிற்கு எதிரான சக்திகளாலோகூட வேண்டுமென்றே வெளியிடப்பட்டிருக்கக்கூடும். அதை ஆதாரமாக்கி இந்திய அரசு, புகைப்பட ஆதாரங்களுடன் பாலாகோட் தாக்குதல் குறித்துத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்க முற்படுவது தேசத் துரோகம் இல்லையென்றாலும் பொறுப்பற்றதனம். 
  புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் பாகிஸ்தானின் ஆதரவுடன் கூடிய பயங்கரவாத இயக்கத்தால் நடத்தப்பட்டிருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஜெய்ஷ் ஏ முகமது அந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா வாளாவிருப்பதும் சரியாக இருக்காது. பாலாகோட்டில் சேதம் ஏற்பட்டதா, உயிரிழப்பு ஏற்பட்டதா என்பதல்ல பிரச்னை. இந்தியா தாக்கியதா இல்லையா என்பதுதான் முக்கியம். இந்தியா தாக்கியிருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் கேள்வி. 
  புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா திருப்பி தாக்கியாக வேண்டிய நிர்ப்பந்தம் தேர்தலுக்காக மட்டுமல்ல, இந்திய ராணுவத்தினரின் தன்மானத்தையும் துணிவையும் நிலைநிறுத்துவதற்காக அவசியமாகிறது. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் நேரம் என்பதால், புல்வாமா தாக்குதலும் பாலாகோட் எதிர்வினையும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாறுவது இயற்கை. 
  அதற்காக இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி, அரசுக்கு தர்மசங்கடம் உருவாக்க முற்படுவது தவறான அணுகுமுறை. 
  அரசும் எதிர்க்கட்சிகளும் தங்களது செயல்பாட்டாலும் அறிக்கைகளாலும் தேசத்தின் பாதுகாப்புக்கு ஊறு விளைவித்துவிடக் கூடாது. இந்திய அரசியல்வாதிகளும், இந்திய அரசியல் கட்சிகளும் தேசத்தின் அடிப்படைப் பிரச்னையான பாதுகாப்பில்கூட ஒத்த கருத்தில் இல்லை என்கிற எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் செயல்படுவதை பாகிஸ்தானும் சீனாவும் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. அவர்கள் பயங்கரவாத அமைப்புகள் மூலம் மட்டுமல்லாமல், தவறான தகவல்களை சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி இந்தியர்களை இந்தியர்களுக்கு 
  எதிராக திசைதிருப்ப முற்படக்கூடும் என்பதை ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் உணர வேண்டும். 
  யாகாவாராயினும் நாகாக்க...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai