நம்பிக்கையூட்டும் முயற்சி!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜன்ம பூமி - பாபர் மசூதி நில விவகாரம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜன்ம பூமி - பாபர் மசூதி நில விவகாரம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு நீண்ட காலமாக இந்தியாவை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் சமரசத் தீர்வை எட்ட கடைசியாக ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.
 உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம்.இப்ராஹிம் கலிஃபுல்லா, "வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சமரசப் பேச்சுவார்த்தைகளில் அனுபவசாலியான மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய மூவரை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவிடம் அயோத்தி பிரச்னைக்கு சமரசத் தீர்வு காணும் பொறுப்பை உச்சநீதிமன்றம் ஒப்படைத்திருக்கிறது. அடுத்த ஒருவாரத்தில் பணிகளைத் தொடங்கி எட்டு வாரங்களில் பேச்சுவார்த்தை மூலம் முடிவை எட்டுவதற்கான முயற்சிக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
 மத்திய ஸன்னி வக்ஃபு வாரியம் சார்பில் முஹமத் ஹாஷிம் அன்சாரியின் தலைமையில் ஃபைசாபாத் குடிமையியல் நீதிமன்றத்தில் பாபர் மசூதி அமைந்த 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை கோரி 1961-இல் மனு தாக்கல் செய்யப்பட்டது. பாபர் மசூதி பிரச்னை தொடர்பான எல்லா வழக்குகளையும் அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. 2010 செப்டம்பரில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் பிரச்னைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் நீட்சிதான் இப்போதைய உத்தரவு.
 அலாகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டில், கடந்த பிப்ரவரி 2018-இல் அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மத உணர்வை அகற்றி நிறுத்தி வெறும் நிலத் தகராறாக மட்டுமே வழக்கை எடுத்துக்கொள்ள முற்பட்டார். அதேபோல சமரசப் பேச்சுவார்த்தை குறித்து நீதிமன்றம் கருத்துக் கூற முடியாது என்றும் அது நீதிமன்றத்தின் பணியல்ல என்றும் மறுத்துவிட்டார். இப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, அயோத்தி பிரச்னையை வெறும் நிலத் தகராறு என்பதாக அல்லாமல் மக்களின் உணர்ச்சி தொடர்புடையது என்று அங்கீகரித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முற்பட்டிருப்பது வரவேற்புக்குரிய முயற்சி.
 இதற்கு முன்னால், அயோத்தி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலாவது முக்கியமான முயற்சி, 1986-இல் காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்டது. அயோத்தி பிரச்னைக்கு சமரச முடிவு காண அவர் முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின் தலைவர் அபுல் ஹஸன் அலி ஹஸானி நத்வியை சந்தித்துப் பேசினார் என்றாலும் முடிவு எட்டப்படவில்லை. 1990-இல் அன்றைய பிரதமர் சந்திரசேகர் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சமரச உடன்பாடு ஏற்படுத்த முயன்றார். அதற்குள் அவரது ஆட்சி கலைந்துவிட்டது.
 2003-இல் மீண்டும் ஒருமுறை காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்தப் பிரச்னையுடன் தொடர்புடைய முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டார். அயோத்தி பிரச்னைக்கு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்வைத்த ஆலோசனைதான் சரியான தீர்வு என்று இப்போது ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமிய அமைப்புகள் அப்போது ஏற்றுக்கொள்ளவில்லை.
 அகில இந்திய அகாரா பரிஷத்தின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி, முதல் வழக்குதாரர் முஹமத் ஹாஷிம் அன்சாரியை தொடர்ந்து சந்தித்து பேச்சுவார்த்தையும் ஓரளவுக்கு முடிவுக்கு வரும் நிலையில் தனது 95-ஆவது வயதில் அன்சாரி இறந்ததுடன் இன்னொரு முயற்சி முற்றுப்பெற்றது.
 இந்தப் பின்னணியில்தான் இப்போது உச்சநீதிமன்றம் மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிக்கு வழிகோலியிருக்கிறது. 2003-இல் காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்மொழிந்த யோசனையை இப்போது பேச்சுவார்த்தைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் குழு மறுபரிசீலனை செய்வது உகந்ததாக இருக்கும் என்று தோன்றுகிறது.
 1992-இல் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கே தொழுகை நடத்தப்படுவது கைவிடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் "மர்மமான முறையில்' விக்ரகங்கள் கொண்டு வைக்கப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அப்படி இருந்தும், பாபர் மசூதியை இந்துக்களுக்கு விட்டுக் கொடுத்து, இந்தப் பிரச்னைக்கு இஸ்லாமிய அமைப்புகள் முற்றுப்புள்ளி வைக்க மறுப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.
 பாபர் மசூதி பிரச்னையில் விட்டுக்கொடுத்தால் அடுத்தபடியாக காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்திலும், மதுராவில் கிருஷ்ண ஜன்ம பூமி கோயில் வளாகத்திலும் எழுப்பப்பட்டிருக்கும் மசூதிகளுக்கும் ஹிந்து அமைப்புகள் உரிமை கோரும் என்பது மட்டுமல்லாமல், இந்தியாவிலுள்ள பல நூறு மசூதிகளையும் உரிமை கோருவார்கள் என்கிற அச்சம்தான் அதற்குக் காரணம். அயோத்தி, காசி, மதுரா ஆகிய மூன்று இடங்களையும் முஸ்லிம் அமைப்புகள் விட்டுக் கொடுப்பது என்றும் ஹிந்து அமைப்புகள் இந்தியாவிலுள்ள ஏனைய எந்தவொரு மசூதிக்கும் உரிமை கொண்டாட மாட்டோம் என்று எழுத்து மூலம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதும்தான் காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்மொழிந்த சமரசத் தீர்வு.
 உச்சநீதிமன்றத்தின் முடிவால் அயோத்தி பிரச்னை தேர்தல் பிரச்னையாக இருக்கப் போவதில்லை. தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும் அயோத்தி பிரச்னைக்கான முடிவு நல்ல முடிவாக இருந்து அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com