சுடச்சுட

  

  17 -ஆவது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மே 23-ஆம் தேதி இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் தொடர்வதை மக்கள் விரும்புகிறார்களா அல்லது ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலப் போகிறார்களா என்பது தெரிந்துவிடும். கடந்த 2014 தேர்தலில் ஒன்பது கட்டங்களாக மக்களவைத் தேர்தல் 10 நாள்கள் நடைபெற்றது. இந்த முறை, 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது என்றால், மேற்கு வங்கம், பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஏழு கட்ட வாக்குப்பதிவிலும் பங்குபெற இருக்கின்றன.
   இந்தியாவின் மக்களவைக்கான முதல் பொதுத் தேர்தல் அக்டோபர் 25, 1951 முதல் பிப்ரவரி 21, 1952 வரை 119 நாள்கள் 68 கட்டங்களாக நடைபெற்றது. அப்போது 489 மக்களவைத் தொகுதிகளுக்கு 1,849 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குரிமை பெற்ற 36 கோடி மக்களில் 17.3 கோடி மக்கள் மட்டுமே தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். வாக்குப் பதிவு விகிதம் வெறும் 44.87%.
   2014-இல் 83.4 கோடி வாக்காளர்கள் என்றால், 2019-இல் வாக்காளர்களின் எண்ணிக்கை 90 கோடியாக உயர்ந்திருக்கிறது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.6 கோடி அதிகரித்திருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது.
   இவர்களில் 18 முதல் 19 வயது வரையிலான புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 1.5 கோடி. இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 1.7%. கடந்த 2014 தேர்தலில் இதே வயதுப் பிரிவினர் 2.3 கோடி இருந்தனர். மொத்த வாக்காளர்களில் அவர்கள் 3 சதவீதத்தினர். இந்தத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. 2014-இல் 39.7 கோடியாக இருந்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 8.8% அதிகரித்து, நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் 43.2 கோடியாகிறது. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 6.4% மட்டும்தான் அதிகரித்திருக்கிறது.
   2014 தேர்தலில் 9.27 லட்சம் வாக்குச் சாவடிகள் இருந்தன என்றால், இந்த முறை அது 10.35 லட்சமாக அதிகரிக்க இருக்கிறது. வாக்குச்சாவடிகள் மட்டுமல்ல, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையும் அதனால் கணிசமாக அதிகரிக்கப் போகிறது. 2014-இல் 17 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது 6 லட்சத்துக்கும் அதிகமாக அதிகரித்து 23.3 லட்சமாக உயர்கிறது. முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும், தபால் வாக்குச் சீட்டுகளிலும் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இணைக்கப்பட இருக்கின்றன. இதன் மூலம் ஒரே பெயரிலுள்ள பல வேட்பாளர்கள் போட்டியிடும்போது ஏற்படும் குழப்பம் அகற்றப்படுகிறது.
   இதுவரையில் இல்லாத வகையில் அத்தனை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடனும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இணைக்கப்படுகிறது. இதன் மூலம் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த சின்னத்தில்தான் வாக்குப் பதிவாகி இருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
   மூன்று மாநிலங்கள் தவிர, ஏனைய மாநிலங்களில் மக்களவைக்கான வேட்பாளர்களின் தேர்தல் செலவு ரூ.70 லட்சமாகவும், அருணாசலப் பிரதேசம், கோவா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ரூ.56 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தங்களது உள்நாட்டு - வெளிநாட்டு சொத்து விவரங்கள் மட்டுமல்லாமல், கடந்த ஐந்தாண்டு வருமான வரி விவரங்களையும் தங்களது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்தாக வேண்டும்.
   அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்பது இந்தத் தேர்தலில் முதல் முறையாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் ஜிபிஎஸ் முறையில் பறக்கும் படையால் கண்காணிக்கப்படுவதும் புதிய நடைமுறை.
   தேர்தலுக்காகவே விழிப்புணர்வு செயலி ஒன்றை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி, அதில் வேட்பாளர்களின் தேர்தல் விதிமுறை மீறல்களை புகைப்படங்களாகவும், விடியோக்களாகவும் பொதுமக்கள் பதிவேற்றம் செய்ய வழிகோலப்பட்டிருக்கிறது. செயலியில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு புகார் மீதும் அடுத்த சில நொடிகளில் பறக்கும் படையினர் நேரில் சென்று நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல, 2019 தேர்தலின் இன்னொரு புதிய அம்சம் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் முழுக்க முழுக்கப் பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்படுவது.
   நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலும், பாலாகோட் துல்லியத் தாக்குதலும் முக்கியமான பிரச்னைகளாக முன்னிறுத்தப்பட உள்ளன. வளர்ச்சி, திறமையான செயல்பாடு, மக்கள் நலத் திட்டங்கள் இவற்றுடன் தேசப்பற்று, தேசத்தின் பாதுகாப்பு, வலிமையான தலைமை ஆகியவற்றையும் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மன்றத்தில் முன்னிறுத்த முற்பட்டிருக்கிறார்.
   2014-இல் பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் முன்னிறுத்தியது வருங்காலம் பற்றிய கனவு என்றால், 2019-இல் தேசத்தின் பாதுகாப்பை முன்னிறுத்த முற்பட்டிருக்கிறது. "மோடியா, பலவீனத்தாலும், ஒற்றுமையில்லா தலைமையாலும் ஏற்படும் அராஜகமா?'
   என்பதுதான் பா.ஜ.க.வின் தேர்தல் கோஷமாக இருக்கப் போகிறது. மக்கள் இதை ஏற்றுக்கொள்ளப் போகிறார்களா, நிராகரிக்கப் போகிறார்களா என்பதற்கு 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் விடையளிக்கும்!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai