சுடச்சுட

  


  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்பார்த்ததைப் போலவே சில விமர்சனங்களும், வாக்குப்பதிவு தேதியை தள்ளிப்போட வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்திருக்கின்றன. ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கவிருக்கும் வாக்குப்பதிவு மே 19-ஆம் தேதி வரை நீண்டு, மே 23-ஆம் தேதிதான் முடிவுகள் வெளிவரப் போகின்றன. இந்த இரண்டரை மாத இடைவெளியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு தொகுதிகளிலும் ஆங்காங்கே திருவிழாக்களும், சமயம் சார்ந்த நிகழ்வுகளும் நடைபெறுவதைத் தவிர்க்க முடியாது. எல்லோருக்கும் ஏற்புடைய தேதிகளில்தான் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றால், இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மையுள்ள தேசத்தில் அது சாத்தியமா என்பது சந்தேகம்தான். 
  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற இருக்கும் வாக்குப்பதிவை தள்ளி வைக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 18-ஆம் தேதி மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எதிர்சேவை நிகழ்ச்சியும், அதற்கு அடுத்த நாள் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் நடைபெறுவதைக் காரணம் காட்டி வாக்குப்பதிவு தேதியை மாற்றி வைக்கக் கோரியிருக்கிறார் மனுதாரர். மாநிலம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதால் அவர்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 
  இந்த முறை தேர்தல் ஆணையம் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவை நடத்த முடிவெடுத்திருக்கிறது. நிலப்பரப்பு அளவிலும், மக்கள்தொகை அளவிலும் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவை நடத்த முற்பட்டிருப்பதில் குறை காண முடியாது. ஆனால், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்திலும், 40 மக்களவைத் தொகுதிகள் கொண்ட பிகாரிலும் உத்தரப் பிரதேசத்தைப்போல ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியை திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் எழுப்புகின்றன. 
  17-ஆவது மக்களவையில் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்க வழியில்லை என்று கருதுகிறது திரிணமூல் காங்கிரஸும் அதனுடன் கைகோக்கும் சில மாநிலக் கட்சிகளும். கடந்த ஜனவரி மாதம் கொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிரான 20 எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்தினார் அவர். பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், 1996 போல அந்த இரண்டு கட்சிகளையும் அகற்றி நிறுத்திவிட்டு மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையும் என்பது மம்தா பானர்ஜியின் 
  எதிர்பார்ப்பு. அந்தக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று பிரதமராகும் கனவு அவருக்கும் ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கும்கூட உண்டு. 
  இந்தப் பின்னணியில்தான் மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் எதிரான குற்றச்சாட்டை திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்மொழிந்திருக்கிறது. மத்திய அரசு மேற்கு வங்க அரசியல் நிலை குறித்த தவறான விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அளித்திருக்கிறது என்பது அவரது குற்றச்சாட்டு. முதல்வர் மம்தா பானர்ஜியின் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான குற்றச்சாட்டையும், வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்கிற யோசனையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, காங்கிரஸ் கட்சியோ, ஏன் பாஜகவேகூட ஏற்றுக்கொள்வதாக இல்லை. தேர்தல் ஆணையத்தின் முடிவு, மேற்கு வங்கத்தில் சிதைந்துவிட்டிருக்கும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையைத்தான் வெளிச்சம் போடுகிறது என்பது அவர்களது கருத்து. 
  திரிணமூல் காங்கிரஸ் இன்னொரு குற்றச்சாட்டையும் முன் வைக்கிறது. முஸ்லிம்களின் ஈகைத் திருநாள் நோன்பு மே 5-ஆம் தேதி தொடங்கிவிடுகிறது. அதற்குப் பிறகுதான் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மேற்கு வங்கத்தின் தென்பகுதியிலுள்ள தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற இருக்கின்றன. ஈகைத் திருநாள் நோன்பு நோற்று, களைத்துப் போயிருக்கும் முஸ்லிம் வாக்காளர்கள் தேர்தலில் பங்குபெற முடியாமல் போகும் என்றும், அவர்கள் வாக்குப்பதிவில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்காகத் தேர்தல் ஆணையத்தின் மூலமாக மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜக தடுக்க முற்பட்டிருக்கிறது என்பதும் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு. அகில இந்திய மஜ்லிஸ் அமைப்பின் தலைவர் அஸாதுதீன் ஓவைசி, மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டை நிராகரித்து, தேர்தலில் முஸ்லிம் வாக்குவங்கியின் ஆதரவைப் பெறுவதற்காக அவர் கையாளும் உத்திதான் இது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
  மம்தா பானர்ஜியின் முஸ்லிம்களுக்கு எதிரான சதி வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவை அப்
  படியே ஒதுக்கிவிட முடியவில்லை. சித்திரைத் திருவிழா போல பெரிய பண்டிகைகள் நடக்கும் நிலையில், அதுபோன்ற தொகுதிகளுக்கு சற்று விதிவிலக்கு அளித்து, மாற்றுத் தேதியில் வாக்குப்பதிவை மேற்கொள்வதில் தவறில்லை. ஒரு மாதம் கழித்து, மே 23-ஆம் தேதிதான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், குறிப்பிட்ட தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தேதியில் மாற்றம் ஏற்படுத்துவதில் தவறேதுமில்லை. நீதிமன்றம் என்ன  முடிவெடுக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai