சுடச்சுட

  

  பொள்ளாச்சி கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமை விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது எதிர்பாராத ஒன்று என்றோ, பொள்ளாச்சி பகுதியில் மட்டுமே நடந்தேறியிருக்கும் சம்பவம் என்றோ யாராவது நினைத்தால் அவர்கள் இன்றைய இந்தியாவின் யதார்த்த சூழல் குறித்த புரிதல் இல்லாதவர்கள் என்றுதான் கூற வேண்டும். செல்லிடப்பேசியும் கையுமாக அலையும் இளைஞர் கூட்டம், சமூக ஊடகங்கள் எனப்படும் புதைகுழியில் சிக்கிக் கொண்டு வெளியில் வர முடியாமல் தவிக்கிறது என்கிற உண்மையை நாம் உணர 
  வேண்டும்.
  பொள்ளாச்சி சம்பவம் குறித்து உணர்ச்சி வசப்படுவதும், ஆத்திரப்படுவதும் புரிந்துகொள்ள முடிகிறது. இதை ஒற்றைச் சம்பவமாகக் கருதி வெகுண்டெழுவது பேதைமை. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாகத்தான் பொள்ளாச்சி சம்பவத்தை தமிழ்ச் சமுதாயம் எதிர்கொள்ள வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக இதுபோல ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் வெளியில் சொல்லப்படாமல் நடந்திருக்கக் கூடும். 
  பொள்ளாச்சியில் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு  படிக்கும் 19 வயது மாணவி அவர். முகநூலில் சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த் என்பவருடன் நட்பு கொள்கிறார். வேறு எந்தவிதப் பின்னணியோ, அறிமுகமோ இல்லாமல் ஏற்படுத்திக் கொண்ட முகநூல் நட்பை நிஜம் என்று கருதுகிறது அந்த அப்பாவி இளம் பெண்ணின் மனது. கல்லூரி மதிய இடைவேளையின்போது, அருகிலுள்ள ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு செல்லிடப்பேசியில் அழைக்கிறார் முகநூல் நண்பர் சபரிராஜன். அந்த அழைப்பை நம்பி 19 வயது கல்லூரி மாணவி அந்த நண்பரைச் சந்திக்க 
  விரைகிறார். 
  ஊஞ்சவேலாம்பட்டியில் தனது நண்பர்களுடன் காத்துக் கொண்டிருந்த சபரிராஜன், அவரைக் காருக்குள் இழுத்துப் போடுவதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அது குறித்து வெளிவந்த காட்சிகளும் நம்மை உறைய வைக்கின்றன. உன்னை நம்பித்தானே வந்தேன் என்று கண்ணீரும் கம்பலையுமாக அந்தப் பெண் கதறி அழுதபோது, அவருக்காக பரிதாபப்படுவதா, அவரை வஞ்சித்தவர்கள் மீது ஆத்திரப்படுவதா எனத் தெரியவில்லை. 
  இந்தச் சம்பவத்துடன் தொடர்புள்ள நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்லிடப்பேசிகளில் இதுபோல மிரட்டி பாலியல் வக்கிரத்துக்கு பலியாக்கப்பட்ட ஏராளமான பெண்களின் காட்சிப் பதிவுகள் கிடைத்திருக்கின்றன. 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், குடும்பப் பெண்கள் இவர்களது முகநூல் காதல் வலையில் சிக்கி பாலியல் கூட்டு வல்லுறவுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. 
  குற்றவாளிகள் நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 
  இப்போது இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வு முகமையிடம் (சிபிஐ) ஒப்படைக்க தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. 
  பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் புகார் அளித்திருப்பது ஒருவர் மட்டும்தான் என்றாலும், இந்த வழக்கில் இதுபோலப் பலரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது. அவர்களில் எத்தனை பேர் புகார் அளிக்க முன்வருவார்கள், வழக்கை எதிர்கொள்ளத் தயார் ஆவார்கள், அதனால் ஏற்படும் சமூகக் களங்கத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற கேள்விகள் எல்லாம் எழுகின்றன. இதுபோன்ற சம்பவம் பொள்ளாச்சியில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்திருக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. எல்லாச் சம்பவங்களையும் தோண்டித் துருவி வெளிக்கொணர முடியுமா? தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்க அந்தப் பெண்கள் முன்வருவார்களா?
  ஊடகங்களிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் இதுபோன்ற நிகழ்வுகளில் வக்கிரத்தனமாக நடந்துகொள்ளும் ஆண் மிருகங்களைப் பற்றி மட்டுமே பேசப்படுகிறது. அறிமுகமில்லாத ஆண்களை நம்புவதும், அவர்களுடன் நட்பு பாராட்டுவதும் தவறு என்று பெண்களுக்கு அறிவுரை கூறுவதும், ஆண்கள் தவறாக நடப்பார்கள் என்கிற ஜாக்கிரதை உணர்வுடன் பெண்கள் நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுவது ஆணாதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடு என்று அவர்கள் கண்டிக்கிறார்கள். அதை முழுமையாக ஏற்பதற்கில்லை. மேல்தட்டு பணக்கார வர்க்க சிந்தனையில் நடுத்தர வர்க்கத்தின் உணர்வுகளைப் பார்க்க முற்படுவது தவறு. 
  தொழில்நுட்பம் மிகப்பெரிய சீரழிவுக்கு இன்றைய இளைய தலைமுறையினரை இட்டுச் சென்று கொண்டிருக்கிறது என்று கவலைப்படுபவர்களைப் பழைமைவாதிகள் என்று புறந்தள்ளக் கூடாது. முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நமது முன்னோர் அறிவுறுத்தியது பெண்கள் அடங்கிப் போக வேண்டும் என்பதற்காகவோ, ஆண்களுக்கு நிகரான தேர்ச்சி பெறக்கூடாது என்பதற்காகவோ அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
  சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த த்ருஷ்யம் என்கிற மலையாளத் திரைப்படத்தையும், அதன் தமிழாக்கமான பாபநாசம் திரைப்படத்தையும் பார்த்தும்கூட தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதிப்புகள் எத்தகையவை என்பது புரியவில்லை என்பதைத்தான், பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் வெளிச்சம் போடுகின்றன.
  பொள்ளாச்சி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் பாரபட்சமற்ற முறையில் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும். அதே நேரத்தில், இந்தப் பிரச்னை தமிழ்ச் சமூகத்தை வலைப்பின்னலாகப் பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து, அதை எதிர்கொள்வது எப்படி என்று ஆத்திரப்படாமல் ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதுதான் பகுத்தறிவு!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai