சுடச்சுட

  


  மீண்டும் ஒருமுறை சர்வதேச பயங்கரவாதியாக ஜெய்ஷ் ஏ முகமதின் நிறுவனத் தலைவர் மசூத் அஸாரை அறிவிப்பதை ஐ.நா. பாதுகாப்பு சபையில் கடந்த புதன்கிழமை சீனா தடுத்துவிட்டிருக்கிறது. ஜெய்ஷ் ஏ முகமதின் தலைவரை சீனா பாதுகாப்பது இது நான்காவது முறை. இதற்கு முன்னால் 2009,  2016, 2017-ஆம் ஆண்டுகளிலும் இதேபோல மசூத் அஸாருக்கு எதிராக ஐ.நா. சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, அதை சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துவிட்டிருக்கிறது. 
  பிரான்ஸ் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பாதுகாப்புக் கவுன்சிலின் சீனாவைத் தவிர ஏனைய நிரந்தர உறுப்பினர்களும், 10 நிரந்தரமில்லாத உறுப்பினர்களும் ஆதரித்தன. முக்கியமான ஐரோப்பிய நாடுகளும் சார்க் உறுப்பினர்களான பூடான், வங்கதேசம், மாலத்தீவு ஆகியவையும் பிரான்ஸ் கொண்டு வந்த தீர்மானத்தை வழிமொழிந்தும்கூட, பெய்ஜிங் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. 
  புல்வாமா தாக்குதலும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள பாலாகோட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் விமானத் தாக்குதலும் நடந்தபோது இவை குறித்து சீனா கடுமையான எதிர்வினைகள் எதையும் முன்வைக்கவில்லை. அது இந்த முறை  ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சீனா எதிர்க்காது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் பயங்கரவாதிகள் பிரச்னையில் பாகிஸ்தானின் கரங்களை கட்டிப்போட உலக நாடுகள் முயற்சியில் இறங்கியிருக்கும் நிலையில், தன்னை உலக வல்லரசாக நிலைநிறுத்திக் கொள்ளும் சீனா ஏனைய வல்லரசு நாடுகளுடன் இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிரான கொள்கைக்கு வலுசேர்க்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதினார்கள். ஆனால், உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவது மட்டுமல்லாமல், பயங்கரவாத முகாம்களுக்கு ஆதரவளித்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான செயல்பாடுகளில் தான் ஈடுபடத் தயாராக இல்லை என்பது சீனா இதன் மூலம் தெரிவித்திருக்கிறது. 
  அனைவருக்கும் ஏற்புடைய தீர்வை எட்ட வேண்டும் என்று சீனா அறிக்கை விடுத்திருப்பதிலிருந்து, அந்த நாடு தெரிவித்திருக்கும் செய்தி இதுதான். பயங்கரவாதத்துக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டையும் மீறி மசூத் அஸாருக்கு பெய்ஜிங் கருணை காட்டுவதன் பின்னணியில், தன்னுடைய சொந்த நலனுக்கு சீனா முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது தெளிவாகிறது. தெற்காசியாவில் அமைதி நிலவுவது குறித்து சீனா கவலைப்படத் தயாராக இல்லை. பாகிஸ்தானின் ஆதரவுடன் சீனாவில் பயங்கரவாதிகள் செயல்படாமல் இருந்தால் போதும் என்பதை பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதன் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறது பெய்ஜிங். 
  அதுமட்டுமல்லாமல், ஜெய்ஷ் ஏ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளையும் அதன் தலைவர்களையும் பாதுகாக்கும் பாகிஸ்தானை ஆதரிப்பதன் மூலம் ஆசியாவில் ஒரு சக்தியாக இந்தியா வளர்ந்துவிடாமல் தடுத்துவிட முடியும் என்பதும்கூட சீனாவின் எண்ணமாக இருக்கக் கூடும். இன்னொரு காரணமும் உண்டு. சீனா  - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஏற்படுத்துவதில் மிகப்பெரிய அளவிலான கட்டமைப்பு முதலீட்டை சீனா செய்திருக்கிறது. பாகிஸ்தானிலுள்ள க்வாடர் ராணுவத் துறைமுகத்தை சீனா தனது முதலீட்டில் உருவாக்கி வருகிறது. இவையெல்லாம்தான் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளிப்பதற்கான காரணிகள்.
  இந்தியாவைப் பொருத்தவரை இந்தப் பிரச்னை இத்துடன் முடிவடைந்துவிடுவதில்லை. சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அஸார் அறிவிக்கப்பட்டிருந்தால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாக இருந்திருக்கும் என்றாலும்கூட, அந்த முயற்சி தோல்வியடைந்ததால் மசூத் அஸார் உலகத்தின் பார்வையில் பயங்கரவாதியல்ல என்று கருதப்பட்டுவிட மாட்டார். மேலும், இந்தத் 
  தீர்மானம் அடுத்த 12 மாதங்களுக்கு உயிர்ப்புடன் இருக்கும் என்பதால் இந்தியா தன்னுடைய முயற்சியில் தொடர்ந்து முனைப்புக்காட்டி வர வேண்டும். 
  இந்தியாவின் உணர்வுகளை சீனா மதிக்காமல் இருக்கும் நிலையில், நாம் மேலும் சீனாவின் நட்புறவுக்காக பல்வேறு முக்கியமான பிரச்னைகளில் மெளனம் சாதிக்க வேண்டிய அவசியம் இனிமேலும் இல்லை. தைவான், திபெத், ஷின்ஜியாங் உள்ளிட்ட பிரச்னைகளில் சீனா ஆதரவு நிலையை எடுக்க வேண்டிய அவசியம் இனிமேல் நமக்கில்லை. மசூத் அஸாருக்கு எதிரான பல்வேறு ஆதாரங்களை அளித்தும்கூட, அதைச் சீனா ஏற்காத நிலையில், சீனாவில் உயிகர் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியாவும் வெளிப்படையாகவே விமர்சிக்க முற்பட வேண்டும். 
  இந்தியாவின் இறக்குமதிகளை சீனா கடுமையாகச் சுருக்கியிருக்கும் நிலையில், நாமும் வர்த்தக ரீதியாக  சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தவறே இல்லை. ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறை 63 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4.34 லட்சம் கோடி) என்பதை நம்மைவிட சீனா உணர வேண்டும். குட்டக் குட்ட இந்தியா குனியும் என்கிற சீனாவின் எண்ணத்தை, டோக்கோலாமில் ஏற்கெனவே உணர்த்தியதுபோல், இந்தியா துணிந்து செயல்படுவதற்கு மசூத் அஸார் தீர்மானம் குறித்த சீனாவின் எதிர்ப்பு நமக்கு வாய்ப்பளிக்கிறது. 
  ஐ.நா. சபையில் சீனாவை சேர்த்துக் கொள்வதற்கு கடுமையாகப் போராடிய நாடு இந்தியா. அதற்கு ஆதரவு திரட்டியவர் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. பாம்புக்கு பால் வார்த்ததன் விளைவை அனுபவிக்கிறோம்!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai