மறுக்கப்படும் நீதி!

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து  10 ஆண்டுகளான பிறகும்கூட இன்னும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படாமல் இருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை ஜெனிவாவில் கூடிய ஐ.நா. சபையின் மனித உரிமைக் கவுன்சில், ஈழ விடுதலைப் போர் குறித்த குற்றங்களை விசாரிக்க இலங்கைக்கு மேலும் இரண்டாண்டு அவகாசம் வழங்கியிருப்பது எதிர்பாராத அதிர்ச்சி. இப்படி விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவது இது இரண்டாவது முறை. 
இலங்கையில் 1983 ஜூலை 23-ஆம் தேதி தொடங்கிய இலங்கை உள்நாட்டுப் போர் அல்லது ஈழ விடுதலைப் போர் ஏறத்தாழ 26 ஆண்டுகள் தொடர்ந்தது. இலங்கை அரசுக்கு எதிராக விடுதலைப் புலிகளால் வடக்கு - கிழக்கு பகுதிகளில் நடத்தப்பட்ட கொரில்லா யுத்தம் 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 
ஏறத்தாழ 80,000-லிருந்து ஒரு லட்சம் பேர் அந்த இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்டிருப்பதாக சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. சபையின் குழு ஒன்று நடத்திய மதிப்பீடு உள்நாட்டுப் போரின் கடைசி கட்டத்தில் மட்டும் 40,000-த்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.
ஐ.நா. சபை உள்ளிட்ட பல அமைப்புகளும் உயிரிழப்புகள் குறித்து ஆய்வுகள் நடத்தி அறிக்கைகள் வெளியிட்டாலும்கூட, இலங்கை அரசு அவற்றை ஏற்றுக்கொள்வதாக இல்லை. பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் இலங்கை ராணுவம் மிகவும் கவனமாக விடுதலைப் புலிகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும், பெருமளவு உயிர்ச்சேதம் எதுவும் தங்களால் ஏற்படவில்லை என்றும் அரசும் ராணுவமும் பிடிவாதம் பிடிக்கின்றன. 
கடைசி கட்டப் போர் முடிவடைந்தபோது  மூன்று லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள்  வவுனியா மாவட்டத்திலுள்ள முகாம்களுக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டனர். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தனியார் நிலங்கள் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்டது. அடைக்கப்பட்ட பொதுமக்களில் பலரும் முகாம்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டாலும்கூட,  ராணுவம் கையகப்படுத்திய நிலங்கள் இன்னும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. 
ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி கட்டத்தில் நடந்த வரம்பு மீறல்கள் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கை இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டதற்கான அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாகவும்  அது குறித்து ஐ.நா. விசாரிக்கலாம் என்றும் பரிந்துரை செய்தது.
அந்தக் குழு, சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து  விசாரிப்பதற்காக சர்வதேச அளவிலான விசாரணையை நடத்தும்படி ஐ.நா.வின் பொதுச்செயலாளருக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இலங்கை அரசோ தனது ராணுவம் எந்தவித போர்க் குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதிலும், சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்வதில்லை என்பதிலும் பிடிவாதமாக இருக்கிறது. ஏற்கெனவே இலங்கை அதிபரால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம், 1983 முதல் 2009 வரையிலான உள்நாட்டுப் போர் குறித்து விசாரணை நடத்தி அறிக்கையை இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டதால், ஐ.நா. அறிக்கைக்கு தேவையே இல்லை என்பது இலங்கை அரசின் வாதம். 
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூறியிருப்பதுபோல விசாரணை நடத்துவதற்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னை குறித்து விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அப்படியொரு சர்வதேச அளவிலான நீதிமன்றம் அமையாமல் போனால், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கும் போர்க் குற்றங்களுக்கும் முறையான விசாரணையோ, தீர்ப்போ கிடைக்காது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 
தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த சுமந்திரன் கூறுவதுபோல, அப்படியொரு சிறப்பு நீதிமன்றத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளாமல் போனால், அது குறித்து சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட முடியும். வெளிநாட்டு நீதிபதிகளுடன் கூடிய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க இலங்கை அரசு ஒப்புக்கொள்ளாவிட்டால், சர்வதேச விசாரணைக் குழு இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் தமிழ் தேசிய கூட்டணி முன்வைத்திருக்கிறது. 
இலங்கை அரசு, தனது அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க தானே நீதிமன்றத்தை அமைப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல, வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் அமைவதை இலங்கையின் அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் ஏற்புடையதல்ல. 
ஏறத்தாழ ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும், அதே அளவிலான பொதுமக்கள் வீடு, வாசலை இழந்து அநாதைகளாக்கப்பட்டும் மிகப் பெரிய மனித உரிமை மீறல் நிகழ்ந்
திருக்கும் நிலையில், சிறப்பு நீதிமன்றம் அமைவதற்கு ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் மேலும் கால அவகாசம் வழங்கியிருப்பது தவறு. 10 ஆண்டுகள் கழிந்தும் நீதி வழங்கப்படவில்லை எனும்போது, தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com