தூய்மையான தேர்தல்?

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு இன்றுடன் நிறைவு  பெறுகிறது. ஓரிரு கட்சிகளைத் தவிர அனேகமாக எல்லா முக்கியக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை 


தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு இன்றுடன் நிறைவு  பெறுகிறது. ஓரிரு கட்சிகளைத் தவிர அனேகமாக எல்லா முக்கியக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. பலரும் வேட்புமனு தாக்கல் செய்து முழு மூச்சில் தங்களது பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். 
பெருமளவில் இளைய தலைமுறை வாக்காளர்கள் தேர்தல் தோறும் இணையும் நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார உத்திகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நடைபெற இருக்கும் தேர்தலில் புதிய வாக்காளர்களின் பங்களிப்புதான் வெற்றிபெறும் அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கப் போகிறது என்பதில் யாருக்கும் எந்தவித ஐயப்பாடும் தேவையில்லை.
தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் தமிழகமெங்கும் நடத்தப்படும் சோதனைகள் வரவேற்புக்குரியவை என்றாலும்கூட, சோதனைகள் நடத்தப்படும் விதம் கேலிக்குரியதாக மாறிவிட்டிருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலத்தில் தொடங்கிய வாக்குக்குப் பணம் கொடுக்கும் கலாசாரம், இப்போது ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையையே பாதித்திருக்கும் புற்று நோயாக மாறிவிட்டிருக்கிறது. பண விநியோகத்தைத் தடுப்பதற்கும், வேரறுப்பதற்கும் களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும் சரி, காவல் துறையும் சரி முழுமனதுடன் ஈடுபடவில்லை என்பதை அவர்கள் மனசாட்சியே உணர்த்தும். 
தேர்தலுக்குத் தேர்தல் பண விநியோகம் என்பது கட்டாயமாகிவிட்டிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறதோ என்கிற அச்சம் எழுகிறது. வாக்காளர்களே வேட்பாளர்களிடமும் அவர்களது முகவர்களிடமும் வாக்குக்குப் பணம் கோரும் அவலம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் காணப்படுவதை மண்ணில் தலையைப் புதைத்துக் கொண்டிருக்கும் நெருப்புக் கோழி போல ஊடகங்கள் உள்பட அனைவருமே வேதனையுடன் தெரிந்தும் தெரியாததுபோல செயல்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்படியே போனால், தேர்தலும் ஜனநாயகமும் பணநாயகமாக மாறி விற்பனைக்கு வரும் வாக்குகளை அதிக விலை கொடுத்து வாங்கும் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என்பதை வேட்பாளர்களும் வாக்காளர்களும் புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். 
கடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலிலிருந்து தேர்தல் களத்தில் சுட்டுரை, முகநூல், கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மிகப் பெரிய பங்கை வகிக்கத் தொடங்கியிருக்கின்றன. அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் தகவல் தொழில்நுட்பப் பிரிவை ஏற்படுத்தி தங்களது பிரசார உத்தியில் சமூக ஊடகங்களின் முக்கியமான பங்கை உறுதிப்படுத்தியிருக்கின்றன. 
சமூக ஊடகம் என்கிற தேர்தல் பிரசார வழிமுறை குறித்து மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 எதுவும் கூறவில்லை. அந்தச் சட்டம் இயற்றப்பட்டபோது, தகவல் தொழில்நுட்பம் என்பது உலகில் அறியாத ஒன்றாக இருந்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில்தான் தேர்தல் நடத்தப்பட்டு நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைகள் செயல்படுகின்றன எனும்போது, தேர்தல் பிரசார உத்திகளில் ஒன்றான சமூக ஊடகம் குறித்த புதியதொரு அணுகுமுறை அவசியமாகிறது. இன்றைய நிலையில் சமூக ஊடகங்கள் எந்தவிதக் கட்டுப்பாடோ, ஒழுங்காற்றலோ இல்லாமல் இருந்து வருகின்றன என்பது உடனடி கவனத்துக்குரியது. 
சமூக ஊடகங்களை எப்படி நெறிப்படுத்தலாம் என்பது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை கலந்தாலோசித்தது. இந்திய இணைய நிறுவனங்கள் மற்றும் இந்திய செல்லிடப்பேசி கூட்டமைப்பு ஆகிய இரு நிறுவனங்களும் தேர்தல் ஆணையத்தின் கலந்தாலோசனையில் பங்கு பெற முன்வந்ததும், சில அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள முற்பட்டிருப்பதும் வரவேற்புக்குரியவை. மக்களவைத் தேர்தலின்போது நடத்தை விதிமுறைகளை சமூக ஊடகங்கள் பின்பற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை அந்த இரண்டு அமைப்புகளுமே அடிப்படையில் ஏற்றுக்கொண்டிருக்கின்றன.
கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. அதனால், பிரசார உத்திகளில் வெளிப்படைத் தன்மையும், சமூக ஊடகங்கள் மூலம் நடத்தப்படும் தரக்குறைவான களங்கம் ஏற்படுத்தும் பதிவுகளும் தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும். பண விநியோகம் எப்படி முறையாகத் தடுக்கப்படவில்லையோ அதுபோல, சமூக ஊடகங்களைக் கண்காணிப்பதும், அவதூறு  பரப்புவதை தடுப்பதும் கடினம் என்பதை தேர்தல் ஆணையமும், இணைய நிறுவனங்களும் ஏற்றுக்கொள்கின்றன. 
வாக்குப்பதிவுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னால் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தங்களது பிரசாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 127-ஆவது பிரிவு வலியுறுத்துகிறது. அந்த விதிமுறையை சமூக ஊடகங்களில் நடைமுறைப்படுத்துவது எப்படி? அதேபோல, கண்டனத்துக்குரிய, கண்ணியக்குறைவான, தவறான பதிவுகள் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பப்பட்டால்,  அவற்றை தடுப்பது எப்படி? தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்ட மூன்று மணி நேரத்தில், அவற்றை அகற்ற வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோள் இணைய நிறுவனங்களால் ஏற்கப்படுமா என்பதும், அப்படியே ஏற்கப்பட்டாலும் அது சாத்தியமா என்பதும் கேள்விக்குறி. 
தூய்மையான தேர்தல் இலக்காக இருக்க வேண்டுமென்றால், சமூக ஊடகங்களின் மூலம் நடத்தப்படும் அவதூறு பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாக வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com