தேர்தலில் பணம்!

17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட முதல் 15 நாள்களில் கண்காணிப்பு அமைப்புகள் கைப்பற்றியிருக்கும் கணக்கில் இல்லாத பணத்தின் மதிப்பு,

17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட முதல் 15 நாள்களில் கண்காணிப்பு அமைப்புகள் கைப்பற்றியிருக்கும் கணக்கில் இல்லாத பணத்தின் மதிப்பு, முந்தைய 2014 மக்களவைத் தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட மொத்தப் பணத்தின்  மதிப்பில் பாதியை எட்டியிருக்கிறது. 2014-இல் கைப்பற்றப்பட்ட மதுவின் அளவை, கடந்த பதினைந்தே நாள்களில் தாண்டியிருக்கிறது. கடந்த மார்ச் 11-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை கைப்பற்றப்பட்ட ரொக்கத்தின் மதிப்பு ரூ.143 கோடி. 2014 தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காலகட்டத்தில் மொத்தமாக கைப்பற்றப்பட்டது ரூ.300 கோடிதான் எனும்போது, எந்த அளவுக்குப் பணம் தேர்தலில் விளையாடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.  
கடந்த மார்ச் 10-ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்டிருக்கும் ரொக்கம், மது, போதை மருந்து உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு ரூ.540 கோடி என்று தேர்தல் ஆணையமே தெரிவிக்கிறது என்று சொன்னால், மறைமுகமாக விநியோகம் செய்யப்படும் பணமும் மதுவும் எந்த அளவில் இருக்கும் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம். இந்தியா முழுவதும் கைப்பற்றப்பட்டிருக்கும் ரூ.143.47 கோடி ரொக்கப் பணத்தில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு தமிழகத்தில் கைப்பற்றப்பட்டிருக்கிறது.  சுமார் 209 கிலோ தங்கமும், 318 கிலோ  வெள்ளி பிஸ்கட்டுகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. 
இதுபோல கைப்பற்றப்படும் பணமோ, பொருள்களோ பெரும்பாலும் அரசு கஜானாவில் உரிமை கொண்டாடுவோர் இல்லாமல் இருக்கும் என்பதுதான் வேடிக்கை. 2014 மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து ரூ.300 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதில் முறையாக உரிமை கோரி திரும்பப் பெறப்பட்டது ரூ.38 கோடி மட்டுமே. திருப்பூரில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது சரக்குப்பெட்டக லாரியில் பிடிபட்ட ரூ.570 கோடி ரொக்கத்தின் ரகசியம் இன்றுவரை புதிராகவே தொடர்கிறது. 
பணி ஓய்வுபெற்ற இரண்டு இந்திய வருவாய்த் துறை அதிகாரிகளை மகாராஷ்டிரம், தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்குமான சிறப்புச் செலவின கண்காணிப்பாளர்களாக கடந்த வாரம் தேர்தல் ஆணையம் நியமித்திருக்கிறது. இதேபோல, அதிகமாக  சட்டவிரோதப் பண விநியோகம் நடைபெறும் மாநிலங்களில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
இந்தியாவில் தேர்தலின்போது பணம் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் தமிழகம் (ரூ.107.24 கோடி), அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (ரூ.104.53 கோடி), ஆந்திரப் பிரதேசம் (ரூ.103.40 கோடி) இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இவையெல்லாம் கைப்பற்றப்பட்ட பணத்தின் அளவே தவிர மொத்தமாக விநியோகம் செய்யப்பட்ட தொகையின் 
புள்ளிவிவரம் அல்ல. 
இந்தியா முழுவதும் பண விநியோகத்தைத் தடுப்பதற்கும், வாக்காளர்களை பணம், பொருள் ஆகியவற்றின் மூலம் விலை பேசுவதைக் கண்காணித்து முறியடிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. வாக்குக்குப் பணம் வழங்குவது தங்கு தடையின்றி சர்வ சாதாரணமாகக் காணப்படும்  போக்குக்கு அரசியல்வாதிகளின் ஊழல்தான் காரணம் என்று வாக்காளர்கள் நம்புகிறார்கள். ஊழலில் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை, தேர்தலின்போது தங்களுக்கு அரசியல்வாதிகள் தருவதில் தவறில்லை என்கிற கருத்து வாக்காளர்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையம் முனைப்புடன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும்கூட, ஆணையத்தின் சில நடவடிக்கைகள் நகைப்புக்குரியவையாக இருக்கின்றன. வங்கிகளின் தானியங்கி பண விநியோக இயந்திரங்களுக்குக் கொண்டு செல்லப்படும் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றுவதும், சாமானியர்கள் வியாபாரத்துக்காகவும், வேறு அத்தியாவசிய செலவினங்களுக்காகவும் எடுத்துச் செல்லும் சொற்பத் தொகையையெல்லாம் கைப்பற்றி  அவர்களைத் துன்புறுத்துவதும் வேடிக்கையாக இருக்கிறது. இவையெல்லாம் வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகள்தானோ என்கிற ஐயப்பாட்டை எழுப்பும் விதமாக இருக்கிறது தேர்தல் ஆணையத்தின்  நடவடிக்கைகள்.
தேர்தல் என்பது சின்னங்களையும், தலைவர்களையும் முன்னிறுத்தி நடத்தப்படுபவை. தேர்தல் ஆணையமே சின்னங்களை வழங்கி தேர்தலை நடத்தும் நிலையில், கண்ணில் தென்படும் சின்னங்களையெல்லாம் அழிக்க முற்படுவது வேடிக்கையாக இருக்கிறது. பெரும் பொருள் செலவில் தலைவர்களின் சிலைகளையெல்லாம் துணியைப் போட்டு மூடி மறைப்பதும், அதன் மூலம் தேர்தலில் வேட்பாளர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் முயற்சியும் அநாவசியமான செயல்பாடுகள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இதனாலெல்லாம் தேர்தலில் தூய்மையை ஏற்படுத்திவிட முடியும் என்று தேர்தல் ஆணையம் நினைத்தால், அதற்காக நாம் பரிதாபப்படுவதைத் தவிர, வேறொன்றும் சொல்வதற்கில்லை. 
2014 தேர்தலின்போது பெருமளவில் பணம் புழங்கியதும், க்குக்குப் பணம் கொடுக்கப்பட்டதும் ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனால், தற்போது நடைபெறும் 17-ஆவது மக்களவைத் தேர்தலில் இந்த அளவுக்குப் பணப்புழக்கம் காணப்படுவது வியப்பை ஏற்படுத்துகிறது. கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்தை ஒழிப்பதற்குத்தான் மத்திய அரசு அதிக மதிப்புள்ள செலாவணிகளை செல்லாததாக்க முற்பட்டது. அதற்குப் பிறகும் தேர்தலில் பணம் புழங்குகிறதே எப்படி?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com