Enable Javscript for better performance
இனி ரெய்வா காலகட்டம்!- Dinamani

சுடச்சுட

  

  ஜப்பானில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை, தலைமை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக ஜப்பானின் அரசராக இருந்த 85 வயது அகிஹிடோ தனது அரச பதவியை பட்டத்து இளவரசரும் மூத்த மகனுமான நருஹிடோவிடம் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றிருக்கிறார். மே மாதம் முதல் ஜப்பானில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகி இருக்கிறது. இத்துடன் மன்னர் அகிஹிடோவின் ஹெய்சே காலகட்டம் முடிந்து, புதிய அரசர் நருஹிடோவின் ரெய்வா காலகட்டம் ஆரம்பமாகிறது.
  ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் மன்னர் அகிஹிடோவின் பதவிக்காலம் முடிவடைந்து மன்னர் நருஹிடோவின் ஆட்சி மே முதல் தேதியே தொடங்கியது என்றாலும், உடனடியாக பட்டம் சூட்டும் நிகழ்ச்சி நடந்துவிடாது. அதற்கு முன்னால் பல சடங்குகள் நடைபெற்றாக வேண்டும். அக்டோபர் 22-ஆம் தேதி பட்டம் சூட்டு விழாவுக்கு  நாள் குறிக்கப்பட்டிருக்கிறது. 
  டோக்கியோவிலுள்ள ஜப்பானிய மன்னர்களின் கியோடோ அரண்மனையில் உள்ள சிறப்பு சிம்மாசனமான கிரசாந்திமம் சிம்மாசனம் பதவி ஏற்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. முந்தைய மன்னர் அகிஹிடோ 1989 ஜனவரி 7-ஆம் தேதி, அவரது தந்தையும் மன்னருமான ஹிரோஹிடோவின் மரணத்தைத் தொடர்ந்து ஜப்பானின் 125-ஆவது அரசராக அரியணை ஏறினார். ஜப்பானியர்கள், ஒவ்வொரு மன்னரின் ஆட்சிக்காலத்தையும் ஒரு காலகட்டமாகக் கருதுகிறார்கள். அந்தக் காலக்கட்டத்துக்கு ஒரு பெயர் சூட்டப்படுகிறது. 
  மன்னர் அகிஹிடோவின் காலகட்டமான ஹெய்சே என்பதற்கு சமாதானம் ஏற்படுத்துதல் என்று பொருள். இப்போதைய மன்னர் நருஹிடோவின் காலகட்டமான ரெய்வா என்பதற்கு இணக்கமான சூழலை ஏற்படுத்துதல் என்று பொருள். 
  ஜப்பானிய அரசர்களின் காலகட்டத்தைக் குறிக்கும் பெயர்களை சீன இலக்கியங்களிலிருந்துதான் தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த முறை பிரதமர் ஷின்சோ அபே அந்த வழக்கத்துக்கு விடையளித்து, 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய ஜப்பானிய கவிதை நூலான மன்யோஷூவிலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்.
  இதற்காக ஒரு குழுவே கடந்த சில மாதங்களாகப் பணியாற்றிஇருக்கிறது.
  இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பானிய அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. மன்னர்கள் வெறும் அடையாளமாக்கப்பட்டுவிட்டனர். மன்னரிடமிருந்து அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டுவிட்டன. வெறும் அடையாளமாக மட்டுமே மன்னரும், அரச குடும்பமும் செயல்பட்டாலும்கூட, பிரிட்டனைப் போலவே ஜப்பானிலும் மன்னருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதை நிலவுகிறது. யாரும் மன்னரைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை.
  பேரரசர் என்று மரியாதையுடன்தான் குறிப்பிடுவார்கள்.
  மன்னராக அரியணை ஏறியிருக்கும் நருஹிடோ, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்றாலும் குறிப்பிடத்தக்க கல்வித் தகுதிகளைப் பெறவில்லை. தண்ணீர் சேமிப்பு குறித்தும், நீர் மேலாண்மை குறித்தும் ஆர்வம் காட்டும் மன்னர் நருஹிடோவின் பதவிக்காலம் எப்படி இருக்கப்போகிறது என்று இப்போதே சொல்லிவிட முடியாது. ஓய்வு பெற்ற மன்னர் அகிஹிடோவின் பதவிக்காலத்தில், அவரது தந்தையின் காலகட்டம்போல ஜப்பான் போர் எதையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால் சுனாமிகள், எரிமலை வெடிப்புகள் போன்ற பல இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொண்டது.
  சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலங்களில் இந்திய -ஜப்பானிய உறவு நெருக்கமானதாக இருக்கவில்லை. 1957-இல் பிரதமர் நொபுசுகே கிஷியும், 1960-இல் பிரதமர் ஹயாடோ இகேடாவும் தாங்கள் பிரதமராகப் பதவியேற்ற மூன்று மாதங்களில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தனர். அப்போது ஜப்பானுக்கு அதிக அளவில் இரும்புத் தாதுவையும், பருத்தியையும் இந்தியா ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. அதற்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகுதான், 1984-இல் ஜப்பானியப் பிரதமராக இருந்த யாசுஹிரோ நகாசோனேயின் இந்திய விஜயம் நடந்தது. பிரதமர் நரசிம்ம ராவ் இந்தியப் பிரதமரானதைத் தொடர்ந்து, பிரதமர் டோஷிகி கைஃபு இந்தியா வந்தார். அதுமுதல்தான் இந்திய - ஜப்பானிய உறவு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது.
  2005-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்திய - ஜப்பான் கூட்டுறவு மாநாடுகள் நடந்து வருகின்றன. 2013-இல் மன்னர் அகிஹிடோவின் அரசு முறைப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சரி, பிரதமர் நரேந்திர மோடியும் சரி,ஜப்பானுடனான உறவை நெருக்கமானதாகத் தக்கவைத்துக் கொண்டார்கள் என்பதை மறுக்க முடியாது. அதேபோல, இப்போதைய ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே ஜப்பானின் நெருக்கமான நட்பு நாடாக இந்தியாவைக் கருதுகிறார்.
  சீனாவில் ஜப்பானின் அந்நிய நேரடி முதலீடு 2016-இல் 953 கோடி டாலராக இருந்தது, கடந்த ஆண்டில் 1,075 கோடி டாலராக அதிகரித்திருக்கிறது. ஆனால், இந்தியாவுடனான முதலீடு அதே காலகட்டத்தில் 328 கோடி டாலரிலிருந்து 425 கோடி டாலராகத்தான் உயர்ந்திருக்கிறது. ஆனாலும்கூட, இந்தியாவில் இப்போது 1,441 ஜப்பானிய தொழில் நிறுவனங்களும், 5,102 வர்த்தக
  நிறுவனங்களும் செயல்படுகின்றன. அந்த நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யும் பொருள்களை ஜப்பானுக்கும், ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.
  ஜப்பானில் அரியணை ஏறியிருக்கும் மன்னர் நருஹிடோ பட்டத்து இளவரசராக 1987-இல் இந்தியா வந்தார். 32 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இப்போது மன்னராக நருஹிடோவை வரவேற்க இந்தியா காத்துக் கொண்டிருக்கிறது!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai