Enable Javscript for better performance
அச்சத்தில் இந்திய ராணுவம்!- Dinamani

சுடச்சுட

  

  நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் நமது ராணுவ வீரர்களின் தியாகத்தைத் தேர்தல் பிரச்னையாக மாற்றியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. 
  ஒருபுறம் பாலாகோட் துல்லியத் தாக்குதலை ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது சாதனையாக மார்தட்டிக் கொள்ள முற்படுவதும், இன்னொருபுறம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்திய விமானப் படையின் துல்லியத் தாக்குதலையே கேள்வி கேட்க முற்பட்டிருப்பதும் எந்த அளவுக்கு இந்திய ராணுவத்தைப் பாதித்திருக்கும் என்பது குறித்து யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 
  ஏற்கெனவே தாங்கள் விவாதப்பொருளாக்கப்பட்டிருப்பதில் வருத்தமடைந்திருக்கும் பாதுகாப்புப் படையினரை இன்னொரு சோதனையும் எதிர்கொள்கிறது. இந்தியாவில் 41 ராணுவ தளவாடத் தொழிற்சாலைகள் அரசால் நடத்தப்படுகின்றன. இந்திய ராணுவத்திற்கு வழங்கப்படும் அடிப்படைத் தளவாடங்களும், தாக்குதலுக்குப் பயன்படும் குண்டுகளும் அந்த அரசு ராணுவ தளவாட நிறுவனங்களில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்திய ராணுவம் தங்களுக்கு வழங்கப்படும் ரவைகளும் குண்டுகளும் மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகவும், அதனால் அதிக அளவில் விபத்துகள் நடைபெறுவதாகவும் பாதுகாப்பு அமைச்சகத்துக்குத் தெரிவித்திருப்பது அபாயகரமான நிலைமையை வெளிப்படுத்துகிறது. 
  அரசின் ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரவைகள், குண்டுகள் தொடர்பான விபத்துகள் அதிகரிப்பது ராணுவ வீரர்கள் மத்தியில் நம்பிக்கைக் குறைவை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் டாங்குகளில் பயன்படுத்தப்படும் 125 எம்எம் அதிதிறன் கொண்ட குண்டுகளின் பயன்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட விபத்துகள் நேர்ந்திருக்கின்றன. அது மட்டுமல்லாமல் எல்-70 என்கிற விமானங்களைத் தாக்கும் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் அதிதிறன் கொண்ட 40 எம்எம் குண்டுகளை ராணுவ வீரர்களின் பயிற்சியின்போது பயன்படுத்துவது அறவே நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்குக் காரணம், இதனால் ஏற்பட்ட எதிர்பாராத விபத்துகளால் பல ராணுவ வீரர்கள் பயிற்சின்போது காயமடைந்தார்கள் 
  என்பதுதான். 
  சில குண்டுகள் வெடிக்காமல் போவதும், வேறுசில பயன்படுத்துவதற்கு முன்பே வெடித்து விடுவதும், இன்னும் சில தாமதமாக வெடிப்பதும் ராணுவ வீரர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. தரமில்லாத தயாரிப்பாலும், முறையான பாதுகாப்புடன் வழங்கப்படாததாலும் விரைவிலேயே அவை செயலிழந்துவிடுகின்றன என்கிறது ராணுவம். 
  ராணுவ தளவாடங்களில் மட்டுமல்ல, நமது விமானப் படையும் பல சவால்களை எதிர்கொள்கிறது. பாலாகோட் தாக்குதல் இந்திய விமானப் படையின் பலவீனத்தை வெளிச்சம் போட்டதை நாம் உணர வேண்டும். பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்களுக்கு நமது பழைமையான மிக்-21 போர் விமானங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதையும் மீறித்தான் நமது விமானப் படையினர் பாலாகோட்டில் துல்லியத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 
  பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது நாம் தற்காப்புத் தாக்குதல் நடத்த வேண்டுமென்றால், நமது பாதுகாப்பு குறித்து மீள்பார்வை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானிடம் அதிநவீன ரக போர் விமானங்கள் இருக்கும் நிலையில், நம்முடைய பழைய தொழில்நுட்பத்துடன் கூடிய விமானங்களால் அவற்றை எதிர்கொள்ள முடியாது என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
  இந்தியாவின் ரஃபேல் போர் விமான கொள்முதல் விவாதப் பொருளாகி இருப்பது, இந்திய ராணுவத்தைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டுவதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் மீதான போஃபர்ஸ் களங்கத்தை துடைக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் விமர்சனங்களைப் பல முன்னாள் ராணுவ, விமானப் படை அதிகாரிகள் கண்டித்திருப்பதில் நியாயமிருக்கிறது. காரணம், இதற்கு முன்னால் போஃபர்ஸ் வாங்கியது விவாதப் பொருளாக்கப்பட்டாலும், 1999 கார்கில் போரில் பாகிஸ்தானிய ஊடுருவிகளை அகற்ற அந்த பீரங்கிகள்தான் பயன்பட்டன என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். விமர்சனங்களை எழுப்பி ரஃபேல் போன்ற அதிநவீன போர் விமானங்களை வாங்குவது  தடுக்கப்பட்டால், அதனால் இந்தியாவின் பாதுகாப்பு பேராபத்தை எதிர்கொள்ளும் என்று அவர்கள்  எச்சரிக்கிறார்கள்.
  ராணுவ தளவாடங்களை இந்தியாவில் தயாரிப்பது என்கிற நரேந்திர மோடி அரசின் முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. உலகிலேயே மிக அதிகமாக ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான் என்பதால், தளவாட உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது தொழிற்சாலைகளை அமைக்க முன்வரவில்லை. இந்திய ராணுவத்தின் ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை மிகவும் கடினமானதும், காலதாமதம் ஏற்படுத்துவதாகவும் இருப்பதால் தனியார் துறையினர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. உத்தரவாதமும், தொடர்ந்து ஆதரவும் இல்லாதபோது தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததில் வியப்பும் இல்லை. 
  முறையான, உறுதியான ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை இல்லாமல் இருப்பதும், அரசின் ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் தரமான தளவாடங்களைத் தயாரிக்காமல் இருப்பதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன. இது குறித்து யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai