மன்னிப்பா, எதற்காக?

கடந்த வாரம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை உருமாற்றம் செய்து ஒரு நையாண்டிப் பதிவு சமூக ஊடகங்களில்


கடந்த வாரம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை உருமாற்றம் செய்து ஒரு நையாண்டிப் பதிவு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. அந்த நையாண்டிப் பதிவை மேற்கு வங்க பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய யுவ மோர்ச்சா தலைவர் பிரியங்கா சர்மா மே 10-ஆம் தேதி மீள்பதிவு செய்தார். அதை சகித்துக் கொள்ள முடியாமல் மேற்கு வங்க அரசு நடவடிக்கை எடுக்க முற்பட்டது, முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் எந்த அளவுக்கு கருத்துச் சுதந்திரம் கழுத்து நெரிக்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. 
மம்தா பானர்ஜியும் அவரது அரசும் சகிப்புத்தன்மை இல்லாமல் எதிர்க்கட்சியினரை மட்டுமல்ல, எதிர்க் கருத்துகளை முன்வைத்தவர்களையும் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாக்குவது புதிதொன்றுமல்ல. அந்தப் பாடங்களையெல்லாம் அவர் மறந்துவிட்டார் போலிருக்கிறது. நரேந்திர மோடி அரசின் சகிப்புத்தன்மையில்லாத அரசியலுக்கும், சர்வாதிகாரப் போக்குக்கும் எதிராகக் களமிறங்கியிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பின்னணி, அவரது குற்றச்சாட்டுகளை கேலிக்கூத்தாக்குகின்றன. 
பாஜக இளைஞரணி தலைவரான பிரியங்கா சர்மா, உருமாற்றம் செய்த மம்தா பானர்ஜியின் உருவத்தை சமூக ஊடகங்களில் மீள்பதிவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் ஹெளரா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரை உடனடியாக எடுத்துக்கொண்ட ஹெளரா காவல் துறையினர், பிரியங்கா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகளில் மட்டுமல்லாமல், மான- நஷ்ட வழக்கும் பதிவு செய்ததுதான் வேடிக்கை. மான-நஷ்ட வழக்குகளை பாதிக்கப்பட்டவர்கள்தான் தொடுக்க முடியுமே தவிர, இன்னொருவருக்காக யாரோ ஒருவர் மான-நஷ்ட வழக்கு தொடர முடியாது என்பதுகூட வழக்குப் பதிவு செய்த காவல் துறையினருக்குத் தெரியவில்லை. 
பிரியங்கா சர்மா மீதான வழக்கை விசாரிக்கும் பொறுப்பு சைபர் குற்றப் பிரிவினரிடம் தரப்பட்டது. அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ஏ பிரிவின் கீழும், 67 ஏ பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்தார்கள். 66 ஏ பிரிவு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி அந்தப் பிரிவையே உச்சநீதிமன்றம் 2015-இல்  அகற்றிவிட்டது. 67 ஏ பிரிவு பாலியல் ரீதியான பதிவுகளைச் செய்வதற்கு எதிரான பிரிவு. பிணையில் விடுதலை இல்லாத அந்தப் பிரிவின் கீழ், உருமாற்றப் பதிவுக்காக பிரியங்கா சர்மா மீது வழக்குப் பதிவு செய்திருப்பது அதைவிட விசித்திரமாக இருக்கிறது.
வழக்குப் பதிவு செய்த ஹெளரா காவல் துறையினர் பிரியங்கா சர்மாவைக் கைது செய்து, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிரிவுகள், வழக்கின் அடிப்படை ஆகியவை குறித்து குற்றவியல் நடுவராவது சிந்தித்து முடிவெடுத்து தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவரோ, எல்லா வழக்குகளையும்போல இந்த வழக்கையும் காவல் துறையினரின் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டு, பிரியங்கா சர்மாவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
மேற்கு வங்கம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை எதிர்த்தது. உச்சநீதிமன்றத்துக்கு வழக்கு வந்தது. பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, உச்சநீதிமன்ற விடுமுறை அமர்வு அவசர அவசரமாக வழக்கை விசாரித்தது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத் தீர்ப்பின்படி 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் இருந்த பிரியங்கா சர்மாவை, பிணையில் விடுவிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை உடனடியாகப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்,  தவறான முறையில் சட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பதன் வக்கிரத்தைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். 
பிரியங்கா சர்மா பிணையில் வெளிவர மறுத்துவிட்ட நிலையில், மறுநாளே அவரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுடன் நின்றிருக்க வேண்டும். ஆனால், அவர் விடுவிக்கப்படும்போது மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டது எந்த வகையிலான நியாயம் என்று புரியவில்லை. 
அவர் எதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருக்க வேண்டும். அவர் மீதான குற்றம் சட்டப்படி நிரூபிக்கப்படாத நிலையில், பிரியங்கா சர்மாவை மன்னிப்புக் கடிதம் கொடுக்கும்படி உச்சநீதிமன்றம் கூறியிருப்பது இயற்கை நியதிக்கு எதிரானது. 
எல்லாவற்றையும்விட வேடிக்கை, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும்கூட பிரியங்கா சர்மாவை விடுதலை செய்யாமல் மேற்கு வங்க அரசு காலம் தாழ்த்தியது. உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டித்ததைத் தொடர்ந்து அடுத்த நாள் அவர் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்படும்போது, தவறுதலான தகவலின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி அந்த வழக்கையே காவல்துறை கைவிட்டிருக்கிறது என்பதுதான் எல்லாவற்றையும்விட விசித்திரம். 
மேற்கு வங்க அரசின் வரம்பு மீறிய அடக்குமுறை நடவடிக்கையைவிட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான வரம்பு மீறிய, சட்டவிரோதமான குற்றச்சாட்டுகளில், உச்சநீதிமன்றம் கூறியிருப்பதுபோல மன்னிப்பு கோருவது என்று சொன்னால் ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் வெளிவரும் கார்ட்டூன்களுக்காக மன்னிப்பு கோர வேண்டியிருக்கும். திரைப்படங்களிலும், நாடகங்களிலும் வரும் காட்சிகளுக்காக மன்னிப்பு கோர வேண்டிவரும். 
ஜனநாயக நாட்டில் பொதுவாழ்க்கையில் ஈடுபடும் எவருமே விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே. அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாமல் இருப்பது, கருத்துச் சுதந்திரத்தை சிலுவையில் அறைவதாகத்தான் இருக்கும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com