மீண்டும் மோடி ஆட்சி... வாழ்த்துகள்!

இந்திய ஜனநாயகம் வலுவானதாக இருக்கிறது என்பதன்

இந்திய ஜனநாயகம் வலுவானதாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள். 
சுதந்திர இந்திய வரலாற்றில், பண்டித ஜவாஹர்லால் நேருவிற்கும், இந்திரா காந்திக்கும் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் பிரதமர் என்கிற தனிச்சிறப்பை பெறுகிறார் மோடி. சமூக, பொருளாதாரப் பிரச்னைகளைப் பின்தள்ளி, பாஜக முன்வைத்த தேசத்தின் பாதுகாப்புக்கு வாக்காளர்கள் முன்னுரிமை அளித்திருக்கிறார்கள் என்பதுதான் தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளிப்படுத்தும் செய்தி. 
தேசிய ஜனநாயகக் கூட்டணி  மிகப் பெரிய வெற்றியை அடைந்திருப்பதற்கு, பாஜக மிகவும் புத்திசாலித்தனமாக ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியும் ஒரு காரணம். பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செல்வாக்கும், மக்கள் அவரது தலைமையின் மீது வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கையும்தான் அடிப்படைக் காரணங்கள் என்றாலும்கூட, கருத்து வேறுபாடுகளை அகற்றித் தனது கூட்டணிக் கட்சிகளை பாஜக தலைமை அரவணைத்துக் கொண்டதும், அந்தக் கூட்டணியின் மிகப் பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணம்.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடனும், மகாராஷ்டிரத்தில் சிவசேனையுடனும் இருந்த கருத்து வேறுபாடுகளை அகற்றி, சுமுகமாகக் கூட்டணியை வலுப்படுத்திக் கொண்ட பாஜக தலைவர் அமித் ஷாவின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி இது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கடந்த 2014 தேர்தலில் வெற்றி பெற்ற அத்தனை இடங்களையும் தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து, ஒடிஸாவிலும், மேற்கு வங்கத்திலும் அதை ஈடுகட்டும் விதத்தில் பாஜகவை வளர்த்ததும், பல இடங்களில் வெற்றி பெற்றதும் பிரமிக்க வைக்கும் அரசியல் சாதுர்யம் என்றுதான் கூற வேண்டும்.
கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிட்டதால்தான் அமேதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி மக்களவையில் இடம் பெற முடிந்திருக்கிறது. மூன்றிலக்க இடங்களைப் பெற முடியாவிட்டாலும், தனது எண்ணிக்கை பலத்தை இரட்டிப்பாக்கும் என்று எதிர்பார்த்த காங்கிரஸ், கடந்த முறையைவிட ஒருசில இடங்கள்தான் அதிகம் பெற்றிருக்கிறது. அதுவும்கூட, தமிழகம், கேரளத்தின் தயவால்.   இடதுசாரிகள் இரண்டிலக்க எண்ணிக்கையைத் தொடவில்லை என்பது மட்டுமல்ல, விரல் விட்டு எண்ணுமளவில் சுருங்கிப் போய்விட்டார்கள்.
சில வாரங்களுக்கு முன்பே ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால், பாஜகவின் வெற்றியை எதிர்பார்த்திருந்தார் என்றுதான் தோன்றுகிறது. "பாஜகவும் நரேந்திர மோடியும் மீண்டும் வெற்றி பெற்றால் அதற்குக் காங்கிரஸ்தான் காரணமாக இருக்கும்' என்று அவர் வெளியிட்டிருந்த கருத்து உண்மையாகிவிட்டிருக்கிறது. எந்தவொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடாமல் கூட்டணி அமைக்கத் தவறியது காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய தவறு.
எதிர்க்கட்சியில் உள்ள திமுகவைத் தவிர, எல்லா மாநிலக்  கட்சிகளும் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைமையை எதிர்பார்த்தன. அந்தச் சூழலில் தாங்களே பிரதமராகும் கனவில் மம்தா பானர்ஜியும், மாயாவதியும் மட்டுமல்ல, சந்திரபாபு நாயுடுவும், சந்திரசேகர் ராவும் கூட வலம்வரத் தொடங்கினர். எந்தவொரு எதிர்க்கட்சியும், திமுக முன்மொழிந்த ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக வழிமொழியத் தயாராக இருக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணியிலேயே பல தலைவர்கள் அதற்குத் தயாராக இருந்தார்களா என்று தெரியவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியைத் "திருடன்' என்று மீண்டும் மீண்டும் ராகுல் காந்தி வர்ணித்ததுகூட காங்கிரஸூக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கக் கூடும். புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலும், அதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் நடத்திய பாலாகோட் துல்லியத் தாக்குதலும் மக்கள் மத்தியில் தேசத்தின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தி இருந்தன. இந்தப் பின்னணியில், ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு என்று கூறி பிரதமர் நரேந்திர மோடியின் நேர்மை குறித்துக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டு, வாக்காளர்களால் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டது மட்டுமல்ல, காங்கிரûஸயும் சேர்த்தே நிராகரிக்க வைத்திருக்கிறது.
2014 மக்களவைத் தேர்தலில், ஊழலற்ற அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, முந்தைய மன்மோகன் சிங் அரசின் குறைபாடுகள் ஆகியவற்றை முன்வைத்து பாஜக தனது தேர்தல் பிரசாரத்தை அமைத்து  வெற்றி பெற்றது. இந்த முறை, பிரதமர் மோடியை மட்டுமே முன்னிறுத்தி, மக்களவைத் தேர்தலை ஏறத்தாழ ஒரு அதிபர் தேர்தலாகவே மாற்றிவிட்டது. 
பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டபோது, அவருக்கு மாற்றாக எதிர்க்கட்சியால் யாரையும் முன்னிறுத்த முடியவில்லை. மோடியை அகற்றிவிட்டுப் பிரதமர் நாற்காலியில் மாயாவதியையும், மம்தா பானர்ஜியையும், சரத்பவாரையும், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவையும் ஒப்பிட்டுப் பார்த்த இந்திய வாக்காளர்கள், புத்திசாலித்தனமாக மீண்டும் பிரதமர் மோடியையே தேர்ந்தெடுத்திருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?
பதினேழாவது மக்களவைத் தேர்தல், வலுவான இந்தியாவைக் கட்டமைக்க இன்னொரு வாய்ப்பை வழங்கிப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னிலும் வலுவான பிரதமராக்கி இருக்கிறது. ஜாதிக் கட்சிகளை ஓரம்கட்டி, தேசியப் பார்வையுடன் இந்திய வாக்காளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களித்திருப்பது "ஸப்கா சாத், ஸப்கா விகாஸ்' (அனைவரும் இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காக) என்கிற அவரது அறைகூவல் குறித்த எதிர்பார்ப்பில்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com