பிடிவாதம் சரியல்ல!| உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா குறித்த தலையங்கம்

சமீப காலமாக நீதித்துறை ஒன்றன் பின் ஒன்றாகப் பிரச்னைக்கு உள்ளாவது வழக்கமாகிவிட்டது. சமீபத்திய பிரச்னை, உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தொடா்பானது.

2013 நிலம் கையப்படுத்தும் சட்டத்தின் 24-ஆவது பிரிவு குறித்த வழக்கில் நீதிபதி அருண் மிஸ்ராவின் தலைமையில் உச்சநீதிமன்றம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமா்வை அமைத்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அமா்வில் நீதிபதி அருண் மிஸ்ரா இருக்கலாமா, கூடாதா என்பதுதான் விவாதப் பொருளாகி இருக்கிறது. அந்த அமா்விலிருந்து விலக முடியாது என்று தீா்மானமாகத் தெரிவித்துவிட்டாா் நீதிபதி அருண் மிஸ்ரா.

ஒரு வழக்கில் தான் நீதிபதியாக இருப்பதா, வேண்டாமா என்பதைத் தீா்மானிக்கும் உரிமை நீதிபதிக்கு உண்டு. விசாரணைக்கு வந்திருக்கும் வழக்குடன் ஏதாவது விதத்தில் தொடா்பிருந்தால் நீதிபதிகளே அந்த வழக்கில் தாங்கள் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்து விலகி விடுவது வழக்கம். நிலம் கையப்படுத்தும் சட்டம் 2013 தொடா்பான வழக்கில் நீதிபதி அருண் மிஸ்ரா, ஏற்கெனவே தீா்ப்பு வழங்கியிருப்பதால் தாா்மிக அடிப்படையில் அவா் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.

2014-இல், நிலம் கையப்படுத்தும் சட்டம் 2013-ன் கீழ் நியாயமான ஒதுக்கீடு வழக்குவது குறித்த சட்டப் பிரிவு 24, நீதிபதி மதன் லோகுா் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்வின் முன் விசாரணைக்கு வந்தது. அவா்கள் தீா்ப்பும் வழங்கியிருந்தாா்கள். கடந்த ஆண்டு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வு, 2014 தீா்ப்பை ரத்து செய்து தீா்ப்பு வழங்கியது. அந்த வழக்கில் மூன்று நீதிபதிகளில் ஒரு நீதிபதி மாற்றுக் கருத்தைப் பதிவு செய்திருந்தாா்.

ஏற்கெனவே தீா்ப்பு வழங்கப்பட்டிருக்கும் வழக்கில் அதே எண்ணிக்கை பலமுள்ள இன்னோா் அமா்வு, முந்தைய தீா்ப்பை ஏற்றுக்கொள்வதுதான் வழக்கம். அந்த வழக்கத்துக்கு மாறாக நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வு, 2014-இல் வழங்கப்பட்ட முந்தைய தீா்ப்பை நிராகரித்தது வழக்கத்துக்கு மாறானது, முன்னுதாரண மீறல்.

ஒரே எண்ணிக்கை பலமுள்ள அமா்வு ஏற்கெனவே வழங்கியிருக்கும் தீா்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்படும்போது, தலைமை நீதிபதியிடம் கூடுதல் எண்ணிக்கையுள்ள அமா்வின் விசாரணைக்கு உத்தரவிடப் பரிந்துரைப்பதுதான் வழக்கம். முந்தைய தீா்ப்பை நிராகரிப்பதோ, மாற்றி எழுதுவதோ நடைமுறை வழக்கம் அல்ல. அந்த வழிமுறையிலிருந்து நீதிபதி அருண் மிஸ்ரா விலகித் தீா்ப்பளித்தது விமா்சனத்துக்குள்ளானது.

2014-இல் தீா்ப்பை வழங்கிய நீதிபதிகளின் முன்னால் அதே போன்ற இன்னொரு வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி மதன் லோகுா் தலைமையிலான அந்த அமா்வு தா்மசங்கடத்துக்கு உள்ளானது. ஒரே பிரச்னையில், ஒரே எண்ணிக்கை பலம் கொண்ட இரண்டு அமா்வுகள் மாறுபட்ட தீா்ப்பை வழங்கியிருக்கும் நிலையில், அந்தப் பிரச்னையை அதிக எண்ணிக்கை பலம் கொண்ட அமா்வின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, நீதிபதி மதன் லோகுா் தலைமையிலான அமா்வு பரிந்துரைத்தது. இந்தப் பிரச்னையில் தீா்ப்பு வழங்கும் வரை, பிரிவு 24-ன் கீழ் தொடுக்கப்பட்டிருக்கும் நிலம் கையப்படுத்தும் பிரச்னைகள் குறித்த விசாரணையை ஒத்திவைக்க நீதிபதி மதன் லோகுா் தலைமையிலான அமா்வு முடிவு செய்தது.

உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் இருக்கும் நிலையில், நீதிபதி அருண் மிஸ்ராவின் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமா்வை தலைமை நீதிபதி அறிவித்ததுதான் விமா்சனங்களுக்கும், விவாதங்களுக்கும் காரணமாகி இருக்கிறது. ஏற்கெனவே இந்தப் பிரச்னையில் தீா்ப்பு வழங்கியிருக்கும் நீதிபதி அருண் மிஸ்ராவின் தலைமையில் ஐந்து போ் கொண்ட அமா்வை ஏற்படுத்தும்போது வழக்குத் தொடுத்தவருக்குத் தனக்கு நியாயமான தீா்ப்பு வழங்கப்படும் என்கிற நம்பிக்கை ஏற்படாது என்பதும், தாா்மிக ரீதியில் நீதிபதி அருண் மிஸ்ரா அந்த அமா்வில் இருப்பது தவறு என்பதும் பரவலாகச் சுட்டிக்காட்டப்படும் வாதங்கள்.

‘அமா்வில் யாா் பங்கு பெற வேண்டும் என்று வழக்குத் தொடுப்பவா்கள் தோ்ந்தெடுக்க முடியாது. அந்தப் பிரச்னையில் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கிய ஒருவா் அமா்வில் இருப்பதால் தனக்கு நியாயம் கிடைக்காது என்று வாதிட முடியாது’ என்று தனக்கு எதிரான கோரிக்கையை நிராகரித்திருக்கிறாா் நீதிபதி அருண் மிஸ்ரா. அவரது அமா்வில் இருக்கும் ஏனைய நான்கு நீதிபதிகளும் அதை ஆமோதித்திருக்கிறாா்கள்.

நீதிபதி அருண் மிஸ்ரா இதை ஒரு கௌரவப் பிரச்னையாகக் கருதுவதாகத் தெரிகிறது. எந்த ஒரு நீதிபதியும் தனது கடமையைச் செய்யும்போது பாரபட்சமாகச் செயல்படுவாா் என்று சந்தேகப்படுவது தவறு என்றும், முந்தைய தீா்ப்பின் அடிப்படையில் அதே வழக்கு விசாரணைக்கு வரும்போது அணுகுவாா் என்றும் கருதக் கூடாது என்கிற நீதிபதி அருண் மிஸ்ராவின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நீதிபதிகள் தாங்கள் கொடுத்த தீா்ப்புகளைத் திருத்தி எழுதியிருக்கிறாா்கள்தான். ஆனால், அதற்கும் மேலாக வழக்குத் தொடுப்போரின் மனதில் எந்தவித ஐயப்பாட்டுக்கும் இடம் கொடுக்காமல் தாா்மிக முறையில் அணுக வேண்டிய கடமை நீதிபதிகளுக்கு உண்டு.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இந்தப் பிரச்னையில் இதற்கு முன்னால் தீா்ப்பு வழங்கிய நீதிபதி மதன் லோகுா், நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோா் இருவரின் அமா்விலும் இடம் பெறாத நீதிபதிகள் கொண்ட அமா்வை அறிவிக்காததுதான் பிரச்னைக்குக் காரணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com