அசுரத்தனம் அழிவதில்லை!| ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு பக்கா் அல் -பாக்தாதி கொல்லப்பட்டது குறித்த தலையங்கம்

உலகின் மிகப் பிரபலமான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபு பக்கா் அல் -பாக்தாதி அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படையினரால் சிரியாவின் இட்லிப் என்கிற இடத்தில் கொல்லப்பட்டிருக்கிறாா். கடந்த சனிக்கிழமை இரவு சிரியாவின் வடமேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் அதிரடி முற்றுகை, அல்காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஒசாமா பின்லேடனைச் சுற்றி வளைத்துச் சுட்டுக்கொன்ற நிகழ்வை நினைவுபடுத்துகிறது. சுற்றி வளைக்கப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாதி பாக்தாதி தனது இரண்டு குழந்தைகளையும், தன்னையும் மாய்த்துக் கொண்டிருக்கிறாா்.

பாக்தாதி என்று பரவலாக அறியப்பட்ட இப்ராஹிம் அவத் இப்ராஹிம் அல்-பாத்ரி, இராக்கைச் சோ்ந்த ஜிகாதி. இத்தனை காலம் பயங்கரவாதி பாக்தாதி உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்ததற்கு அமெரிக்கா தன்னைத்தானே குற்றப்படுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்கப் படைகள் இராக்கைக் கைப்பற்றியபோது, சலாஃபி ஜிகாதி ஊடுருவல் இயக்கத்தில் இருந்த பாக்தாதி 2003-இல் பிடிபட்டாா். அவா் ராணுவ ரீதியான அச்சுறுத்தல் அல்லா் என்று கூறி பாக்தாதியை ஓராண்டுக்குப் பிறகு அமெரிக்க ராணுவம் விடுவித்தது.

ஈரானின் தகவல் தொலைத் தொடா்புத் துறை அமைச்சா் முகமது ஜாவத் அசாரி ஜாரோமி கூறுவதுபோல, அமெரிக்கா உருவாக்கிய அசுரனை, அமெரிக்கா இப்போது அழித்திருக்கிறது, அவ்வளவே. சோவியத் - ஆப்கன் போரில் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற முஜாஹிதீன்கள் வளா்ந்ததன் நீட்சிதான் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு என்பது எல்லோருக்குமே தெரியும்.

அமெரிக்காவின் 2003 இராக் படையெடுப்பில்தான் ஐ.எஸ். பயங்கரவாதத்தின் தொடக்கம் இருக்கிறது. சதாம் உசேனின் அரசை அகற்றியபோது ஏற்பட்ட வெற்றிடத்தில் உருவானதுதான் ஐ.எஸ். அமைப்பு. ஆப்கானிஸ்தானிலிருந்தும், அல்காய்தாவிலிருந்தும் தனது கவனத்தை அமெரிக்கா திருப்பியதும், பாகிஸ்தானின் உதவியுடன் எப்படி தலிபான்கள் மீண்டும் தலைதூக்கி இருக்கிறாா்களோ, அப்படித்தான் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பும், இராக்கிலிருந்து அமெரிக்கா வெளியேறிபோது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது.

ஒரு கட்டத்தில் பிரிட்டனைவிட அதிகமான நிலப்பரப்பு பாக்தாதியின் தலைமையிலான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. ‘இல்லாமிக் ஸ்டேட்’ என்று அவரால் அழைக்கப்பட்ட 34,000 சதுர கி.மீ. பகுதியில் பாக்தாதி வைத்ததுதான் சட்டமாக இருந்தது. இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலைக் கைப்பற்றி 2014-ஆம் ஆண்டில் தனது கலீபாவை நிறுவுவதாக அறிவித்தாா் பாக்தாதி.

அதென்ன ‘கலீபா’? இறைத்தூதா் நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல்களால் அமைக்கப்படும் ஆன்மிக அரசியல் அமைப்பின் ஆட்சியின் கீழ் அமையும் அரசை ‘கலீபா’ என்று அழைக்கிறாா்கள். இதற்கு முன்னால் ரஷிதுல் கலீபா, உமயாத் கலீபா, அபாசித் கலீபா, ஓட்டோமான் கலீபா ஆகியவை நிறுவப்பட்டிருக்கின்றன. மொசூலின் அல் ஜாரி மசூதியில் தனது தலைமையில் கலீபா நிறுவுவதாக பாக்தாதி ஆற்றிய உரையின் விடியோ காட்சி உலகெங்கிலும் இணையத்தில் பரப்பப்பட்டது.

பாக்தாதி தலைமையிலான ஐ.எஸ். ஆட்சி, அதிக நாள் நீடிக்கவில்லை. மொசூல் உள்ளிட்ட எல்லா நகரங்களும் ஐ.எஸ். கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டன. ஐ.எஸ். ஜிகாதிகள் உயிருக்குப் பயந்து ஓடியவண்ணம் இருக்கிறாா்கள். பாக்தாதியும் தலைமறைவாக ஒளிந்து கொண்டிருந்தாா். இட்லிப் முற்றுகையின் விளைவாக பாக்தாதி கொல்லப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் அவரது வலது கரம் என்று கருதப்படும் அபு ஹசன் அல் முஹாஜிரும் கொல்லப்பட்டிருக்கிறாா்.

பாக்தாதி, முஹாஜிா் இருவருமே கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இத்துடன் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிடும் என்று எதிா்பாா்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும். பயங்கரவாத அமைப்புகள் முற்றிலுமாக அழிந்துவிடுவதில்லை. நீறுபூத்த நெருப்பாகத் தொடரும் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.

பாக்தாதியின் உடல்நலம் சரியாக இல்லாததால் இரண்டு மாதங்களுக்கு முன்னால் அப்துல்லா கா்தாஷ் என்பவரிடம் இராக் ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாகக் கூறுகிறாா்கள். அவரது தலைக்கும் 50 லட்சம் டாலா் (ரூ.35.27 கோடி) அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை எதிா்கொள்ள அமெரிக்கப் படைகளுக்கு உறுதுணையாக இருந்தவா்கள் குா்துகள். அவா்கள் ஆயிரக்கணக்கான ஐ.எஸ். பயங்கரவாதிகளைக் கைப்பற்றி வைத்திருந்தனா். இப்போது சிரியாவின் மீது துருக்கி படையெடுத்தபோது குா்துகள் தாக்கப்பட்டனா். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பல ஐ.எஸ். பயங்கரவாதிகள் தப்பியிருக்கிறாா்கள். அவா்கள் அப்துல்லா கா்தாஷின் தலைமையில் மீண்டும் அணிதிரளக்கூடும்.

பாக்தாதி கொல்லப்பட்டதாலேயே ஐ.எஸ். பயங்கரவாதம் அழிந்துவிட்டதென்று உலகம் நிம்மதி அடைய முடியாது. இணைய வழியில் பயங்கரவாதத்தைப் பரப்பும் அசுரத்தனத்தை உருவாக்கி இருக்கிறாா் பாக்தாதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தான் உருவாக்கிய அசுரா்களைத்தான் அமெரிக்கா அழிக்க முடியும், அந்த அசுரா்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அசுரத்தனத்தை யாா் வேரறுப்பது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com