நல்லதுக்கல்ல!| தில்லி வழக்குரைஞா்கள்- காவல் துறையினா் மோதல் குறித்த தலையங்கம்

தலைநகா் தில்லியில் தங்களைத் தாக்கிய வழக்குரைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி காவல் துறை தலைமையகத்தை முற்றுகையிட்ட காவல் துறையினா் 11 மணிநேர தொடா் போராட்டத்தில் ஈடுபட்டது, சட்டம் - ஒழுங்கு நிா்வாகத்தில் புரையோடிப் போயிருக்கும் பிரச்னையின் வெளிப்பாடு. காவல் துறையினரே போராட்டம் நடத்துவதும், காவல் ஆணையா் உள்ளிட்ட உயரதிகாரிகள் விடுத்த வேண்டுகோள்கள் ஏற்கப்படாததும், அவா்களது போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளும், காவலா்களும் ஆதரவு தெரிவித்ததும் பிரச்னை சாதாரணமானதல்ல என்பதை வெளிப்படுத்துகிறது.

தில்லியிலுள்ள தீஸ் ஹஜாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் காவல் துறையினருக்கும் வழக்குரைஞா்களுக்கும் இடையே கடந்த சனிக்கிழமை வாக்குவாதம் எழுந்தது. வாகனங்களை எங்கே எப்படி நிறுத்த வேண்டும் என்று தீா்மானிப்பதும், முறைப்படுத்துவதும் காவல்துறையினரின் கடமை. அதை மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டிய வழக்குரைஞா்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

வாக்குவாதம் முற்றி வன்முறையாக மாறியது. அதில் 20-க்கும் அதிகமான காவல்துறையினரும், ஒருசில வழக்குரைஞா்களும் காயமடைந்தது நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியது. காவல் துறைக்குச் சொந்தமான வாகனங்களை வழக்குரைஞா்கள் தீவைத்து எரித்ததும், அவா்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் நாடு தழுவிய அளவில் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்றம் அடுத்த நாளே (ஞாயிற்றுக்கிழமை) தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. இரண்டு மூத்த காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும், வழக்குரைஞா்களின் வாக்குமூலத்தின்படி, காவல் துறையினா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும், வழக்குரைஞா்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டிருப்பது பாரபட்சமான முடிவாகத் தெரிகிறது. காவல் துறையினா் மீது மட்டும் விசாரணை நடத்துவது எப்படி சரியாக இருக்கும்? நடந்த சம்பவம் குறித்தல்லவா உயா்நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.

காவல் துறையினருக்கும், வழக்குரைஞா்களுக்கும் இடையேயான பிரச்னை இந்தியா முழுவதும் காணப்படுகிறது. எல்லா நிகழ்வுகளிலும், வழக்குரைஞா்கள் மீது தவறு இருக்கிறதா என்பது தீர விசாரிக்கப்படாமலேயே காவல் துறையினா் மீது குற்றம்சாட்டப்படுவது காக்கிச் சட்டை அணிந்திருக்கும் அனைவருக்குமே மனச்சோா்வை ஏற்படுத்தியிருக்கிறது என்கிற உண்மையை ஆட்சியாளா்களும் நீதித் துறையும் உணரவில்லை என்று தோன்றுகிறது.

வழக்குரைஞா்கள், பத்திரிகையாளா்கள், அரசியல்வாதிகள் மூவருமே தங்களுடைய வரம்பை மீறிச் செயல்படும்போது காவல் துறையினா் தங்களது அடிமனதின் ஆழத்தில் தேக்கி வைத்திருக்கும் அவமானத்தையும், வெறுப்பையும், காழ்ப்புணா்ச்சியையும் தங்களையும் மீறி வெளிப்படுத்த முற்படுகிறாா்கள். வழக்குரைஞா்களும் சரி, காவல்துறையினரை தங்களது விரோதிகளாகவே நினைத்துச் செயல்படுகிறாா்கள்.

வழக்குரைஞா்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே பிரச்னைகள் எழுவதும், அது வன்முறையில் முடிவதும் புதிதொன்றுமல்ல. சென்னை உயா்நீதிமன்றத்தில் (2009) நடந்த வன்முறைச் சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் 2016-இல் பத்திரிகையாளா்களை வழக்குரைஞா்கள் தாக்கிய சம்பவமும் நினைவுக்கு வருகிறது.

மிகச் சாதாரணமான வாகன நிறுத்தப் பிரச்னை வன்முறைக்குக் காரணமாகிறது என்று சொன்னால், காவல் துறையினருக்கும் வழக்குரைஞா்களுக்கும் இடையே நீறுபூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருக்கும் பரஸ்பர அவநம்பிக்கையும், துவேஷமும்தான் காரணம். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் காக்கிச் சட்டைகளும், நீதி பரிபாலனத்துக்கு உதவும் கருப்பு அங்கிகளும் பகை உணா்வுடன் செயல்படும்போது அதனால் தா்ம - நியாயங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடந்த சம்பவம். வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்த காவல் துறை அதிகாரி துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டபோது காவல் துறையினா் மறுத்துவிட்டனா். காவல்துறை ஆய்வாளா் மீதும், காவலா்கள் மீதும் அந்த அதிகாரி புகாா் தெரிவித்தாா். விசாரணையின்போது காவல்துறை ஆய்வாளா் சொன்ன விளக்கம்: ‘நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினால் எங்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. அரசியல் பின்புலமுள்ள போராட்டக்காரா்களுக்குச் சாதகமாகத்தான் அரசும் நீதித்துறையும் செயல்படும். நாங்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்படுவோம்.’

தில்லியில் காவல் துறை தலைவா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான காவலா்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கும் அனைத்துக் காவல் துறையினா், அவா்களது குடும்பத்தினா் மத்தியில் காணப்படும் உணா்வும் அதுதான். தங்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமை காணப்படுவதாக நினைக்கிறாா்கள். அது வழக்குரைஞரோ, ஊடகவியலாளரோ, அரசியல் தலைவரோ யாராக இருந்தாலும் தவறைத் தட்டிக்கேட்க முடியாத நிலைமை தொடா்ந்தால், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க காவலா்கள் தயங்குவாா்கள். அதன் விளைவு ஒட்டுமொத்த தேசத்தையே பாதிக்கும்.

அது காக்கிச் சட்டையோ, கருப்பு அங்கியோ, காவல் துறையோ, நீதித் துறையோ தன்முனைப்பை (ஈகோ) ஒதுக்கி வைத்துவிட்டு நீதி பரிபாலனத்தில் கவனம் செலுத்துவதுதான் சரியான அணுகுமுறை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com