இப்போதைக்கு இடைவேளை!| மகாராஷ்டிர மாநில அரசியல் நிலவரம் குறித்த தலையங்கம்

தேர்தல் முடிவுகள் எதிர்பாராத திருப்பங்களை வழங்கும் என்பதற்கு மகாராஷ்டிரம் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் ஆளும் பாஜகவால் அதிக எண்ணிக்கை பலம் கொண்ட கட்சியாக வெற்றி பெற முடிந்ததே தவிர, தனிப் பெரும்பான்மை பெற முடியவில்லை. இரண்டாவது பெரிய கட்சியாக சிவசேனையும், மூன்றாவது பெரிய கட்சியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியும், நான்காவது இடத்தில் காங்கிரஸும் வந்தன. இவையெல்லாம் ஆட்சிப் பேரத்தின் பரிமாணங்களைப் பாதித்தன.
 தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்தும், சட்டப்பேரவையின் பதவிக் காலம் முடிந்து நான்கு நாள்கள் ஆகியும், எந்த ஒரு கட்சியாலும், கூட்டணியாலும் ஆட்சியமைக்க முடியாத நிலையில், சட்டப்பேரவை கலைக்கப்படாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆளுநர் சட்டப்பிரிவு 356-ஐ பரிந்துரைப்பதற்கு முன்னால் ஆட்சி அமைப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்தாரா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.
 சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையேயும் ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. அதிக எண்ணிக்கை பலம் கொண்ட பாஜகவுக்கு ஆட்சி அமைக்க 48 மணி நேரமும்,
 இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனைக்கு 24 மணி நேரமும் வழங்கிய ஆளுநர், மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸுக்கு, தனது எண்ணிக்கை பலத்தை நிரூபிக்க 16 மணி நேரம் மட்டுமே வழங்கியது பாரபட்சமாகத்தான் தெரிகிறது.
 கடந்த அரை நூற்றாண்டு காலமாக மகாராஷ்டிர அரசியலில் மறைந்த பால் தாக்கரேயின் இல்லமான மாதோஸ்ரீயிலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் இல்லமான சில்வர் ஓக்கிலும்தான் முக்கியமான தீர்மானங்களை எடுப்பது வழக்கம்.
 2014 மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும், முன்பிருந்த அந்த அரசியல் சக்தி கேந்திரங்களை வலுவிழக்கச் செய்துவிட்டனர்.
 1995-இல் 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சிவசேனை 73 இடங்களிலும், பாஜக 65 இடங்களிலும் வெற்றி பெற்றபோது, முதலமைச்சர் பதவி சிவசேனைக்கு வழங்கப்பட்டது. 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் தனியாக போட்டியிட்ட சிவசேனை 68 இடங்களில் வெற்றி பெற்றது என்றால், 2019-இல் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும்கூட 56 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது. சிவசேனையின் செல்வாக்கு தேர்தலுக்குத் தேர்தல் சரிந்து வருகிறது.
 பாஜகவைப் பொருத்தவரை, மகாராஷ்டிரத்தில் வளர்ந்து வரும் கட்சியாக மாறியிருப்பதுடன், சிவசேனையிடமிருந்து ஹிந்துத்துவா அடையாளத்தை தன்வயப்படுத்திக் கொண்ட கட்சியாகவும் மாறியிருக்கிறது. 2009 முதலே பாஜகவின் வளர்ச்சி தொடங்கிவிட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனை 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றபோது, பாஜக 54 இடங்களில் வென்றது. கூட்டணியின் தலைமை மட்டுமல்ல, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பாஜகவுக்குக் கைமாறிவிட்டது. 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் 122 இடங்களிலும், 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் 105 இடங்களிலும் வெற்றி பெற்ற பாஜக, மகாராஷ்டிரத்தின் அதிக எண்ணிக்கை பலம் கொண்ட கட்சியாக தொடர்கிறது.
 கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்டு வெற்றியும் பெற்ற பிறகு ஆட்சி அமைக்க முடியாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது விசித்திரமான அரசியல் நிகழ்வு. கடந்த மாத சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனைக் கூட்டணி பெரும்பான்மை பெற்றும்கூட வாய்ப்பை நழுவ விட்டிருக்கின்றன. கால் நூற்றாண்டுக்கும் மேலாக கூட்டணிக் கட்சிகளாக உள்ளாட்சி அமைப்புகளிலும், மத்திய - மாநில அரசுகளிலும் தொடர்ந்த பாஜக - சிவசேனைக் கூட்டணியில், முதலமைச்சர் பதவி பிளவை ஏற்படுத்தியிருப்பது அதைவிட விசித்திரமான திருப்பம்.
 தேசியவாத காங்கிரஸும் காங்கிரஸ் கட்சியும், சிவசேனை - பாஜகவும் போல கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன என்றாலும், காங்கிரûஸவிட அதிக இடங்களில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்று காங்கிரஸை நான்காவது இடத்துக்குத் தள்ளியிருப்பது அந்தக் கூட்டணியிலும் பரஸ்பர அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ளவோ, அதற்கு ஆதரவு கொடுக்கவோ காங்கிரஸ் முன்வராததற்குக் காரணம், கொள்கை வேறுபாடு மட்டுமல்ல; அதிகார பலம் சரத்பவாரிடம் சென்றுவிடக் கூடாது என்ற காங்கிரஸின் அச்சமும் இருக்கிறது.
 கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, முதலமைச்சர் பதவி பாஜகவுக்குத்தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டதாக பாஜக தலைவரான உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கும் நிலையில், சிவசேனை தனது தகுதியையும் எண்ணிக்கை பலத்தையும் மீறி, முதல்வர் பதவி கோருகிறது என்று தெரிகிறது. ஒருவேளை சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைந்தால், அதன் விளைவாக சிவசேனை முதல்வர் பதவியைப் பெறக்கூடும். ஆனால், தனது ஹிந்துத்துவா அடையாளத்தை சிவசேனையும், மதச்சார்பற்ற அடையாளத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இழக்க நேரிடும். அதைத்தான் பாஜக தலைமை எதிர்பார்க்கிறதோ என்னவோ?
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com