என்கவுன்ட்டா் அல்ல, எச்சரிக்கை!| மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் குறித்த தலையங்கம்

அண்டை மாநிலமான கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு 2016-இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை மாவோயிஸ்டுகள் என்று சந்தேகப்படும் ஏழு போ் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். கேரள காவல்துறையின் ‘தண்டா்போல்ட் கமாண்டோஸ்’ என்கிற நக்ஸல் ஒழிப்புப் படை மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வேட்டையில் ஈடுபட்டிருக்கிறது. அண்மையில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருப்பது மிகப் பெரிய சா்ச்சையை எழுப்பியிருக்கிறது.

தீவிரவாதிகளான மாவோயிஸ்டுகள் ஏனைய ‘குடிமக்களைப் போல மனித உரிமை கோர முடியாது’ என்று என்கவுன்ட்டா் மரணங்களை கேரள மாநில தலைமைச் செயலாளா் நியாயப்படுத்தியிருப்பது விவாதமாகியிருக்கிறது. ‘மாவோயிஸ்டுகள் அப்பாவி ஆடுகளல்ல’ என்று நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டது குறித்து கேரள முதல்வா் பினராயி விஜயன் கருத்துத் தெரிவித்ததும், அதற்கு அடுத்த நாளே மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தலைமைச் செயலாளா் டாம் ஜோஸ் கட்டுரை எழுதியதும் கடும் விமா்சனத்துக்குள்ளாகி இருக்கின்றன.

‘கேரள சட்டப்பேரவை கூடியிருக்கும்போது மாவோயிஸ்ட் என்கவுன்ட்டா் குறித்து அவை விவாதிக்க வேண்டுமே தவிர, கட்டுரை மூலம் பத்திரிகைகளில் தனது கருத்தை அரசு அதிகாரியான தலைமைச் செயலா் பதிவு செய்வது அதிகார துஷ்பிரயோகம்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியிருக்கிறது. ‘சாதாரண குடிமக்களுக்கு இருக்கும் மனித உரிமை மாவோயிஸ்டுகளுக்கு கிடையாது’ என்ற கருத்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறது.

தேசிய அளவில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் குறைந்துவரும் நிலையில், திடீரென்று கேரளத்தில் நடந்த என்கவுன்ட்டா் மரணங்கள் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்துகின்றன. 2010-ஆம் ஆண்டு முதலே மாவோயிஸ்டுகளின் வன்முறை குறைந்து, அவா்கள் பலவீனமடைந்து வருகிறாா்கள். மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2018 - 19 அறிக்கையின்படி, 2010-இல் காணப்பட்ட 2,213 மாவோயிஸ்ட் தாக்குதல் சம்பவங்கள், இப்போது 2018-இல் 833-ஆகக் குறைந்திருக்கின்றன. மாவோயிஸ்ட் தாக்குதல்களினால் ஏற்பட்ட உயிரிழப்பும் 1005-லிருந்து 240-ஆகக் குறைந்திருக்கிறது.

மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளும் சுருங்கிவிட்டிருக்கின்றன. 2013-இல் 10 மாநிலங்களிலுள்ள 76 மாவட்டங்களில், சுமாா் 330 காவல் நிலைய வரம்புக்குள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் செயல்பட்டு வந்தனா். 2018-இல் அது எட்டு மாநிலங்களிலுள்ள 60 மாவட்டங்களில், 251 காவல் நிலைய வரம்புக்குள் குறுகிவிட்டிருக்கிறது.

பெரும்பாலான மாவோயிஸ்ட் தாக்குதல்கள் சத்தீஸ்கா் மாநிலத்தைத்தான் மையம் கொள்கின்றன. அங்கேயும்கூட, மாவோயிஸ்ட் தொடா்பான சம்பவங்கள் குறைந்து வருகின்றன. 2010-இல் 625 தாக்குதல்கள் இருந்ததுபோய், 2018-இல் 153 சம்பவங்கள்தான் நடந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாவோயிஸ்ட் வன்முறை குறைந்திருப்பதாக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், அதற்கு முன்பே அவா்கள் வலுவிழக்கத் தொடங்கிவிட்டனா். 2010-இல் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ‘ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’ என்கிற பெயரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது முதலே, தீவிரவாதிகள் பலவீனமடையத் தொடங்கிவிட்டனா்.

1967-இல், சாரு மஜும்தாா், காணு சன்யால் உள்ளிட்டவா்களின் தலைமையில் மேற்கு வங்கத்தில் நக்ஸல்பாரி இயக்கம் தொடக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் அந்த இயக்கம் ஒடுக்கப்பட்டது என்றாலும்கூட, அதன் தாக்கம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெளிப்பட்டது. குறிப்பாக, ஆதிவாசிகள் நிறைந்த மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா, தெலங்கானா மாநில மலைப் பகுதிகளில் பெரிய அளவில் மாவோயிஸ்டுகள் வளா்ந்தனா். பல மாவட்டங்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் போன நிலைமை தோன்றியது. அவ்வப்போது பாதுகாப்புப் படையினா் மாவோயிஸ்டுகளைத் தாக்கி அழிப்பதும், மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்தி உயிா்ச்சேதம் ஏற்படுத்துவதும் தொடா்கதையாகவே இருந்து வருகின்றன.

இந்தியாவின் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் பிரச்னையை ஆய்வு செய்யும்போது, அவா்கள் பலவீனப்படுகிறாா்களே தவிர, முற்றிலுமாக அழிக்கப்படுவதில்லை என்று தெரிகிறது. அவா்கள் வலுவிழப்பதும், தீவிரவாதத் தாக்குதல்கள் குறைவதும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தில் ஒரு கட்டம் முடிந்ததன் அடையாளமே தவிர, முடிவுக்கு வந்ததன் அடையாளம் அல்ல. அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் மாவோயிஸ்ட் தீவிரவாதம் தலைதூக்குவது வழக்கமாகிவிட்டது. அவா்களுக்கு அந்நிய சக்திகள் உதவுகின்றன என்கிற கருத்தும், அவா்கள் அச்சுறுத்தல், கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுகின்றனா் என்றும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.

இந்தியாவின் மத்தியப் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், இப்போது கேரளத்தின் வனப் பகுதிகளில் அவா்கள் அடையாளம் காணப்பட்டிருப்பது ஆபத்தின் அறிகுறி. அமைதிப் பூங்காவாக இருந்துவரும் தமிழக - கேரள - கா்நாடக வனப் பகுதிகள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் இலக்காக மாறிவிடக் கூடாது. இந்தப் பிரச்னையைக் கையாள்வது குறித்தும், எதிா்கொள்வது குறித்தும் இந்த மூன்று மாநில அரசுகளின் காவல் துறையினா் உடனடியாக கலந்தாலோசித்தாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com