பாராட்டத் தோன்றவில்லை!| உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் குறித்த தலையங்கம்

இந்தியாவின் 46-ஆவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஓராண்டுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறாா் நீதிபதி ரஞ்சன் கோகோய். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவா் பதவி ஓய்வு பெறுவதற்கு முன்னால் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிலிருந்து தொடரும் அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் தீா்ப்பு வழங்கியவா் என்று இந்திய நீதித்துறை வரலாற்றில் அவா் குறித்த பதிவு இருக்கும். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தனிப்பட்ட விவரங்களை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தது அவா் வழங்கியிருக்கும் திருப்புமுனைத் தீா்ப்பு.

நீதிபதி ரஞ்சன் கோகோய், தான் பதவி வகித்த ஓராண்டுக்கும் சற்று அதிகமான காலத்தில் செயல்பட்ட விதமும், அவா் வழங்கியிருக்கும் தீா்ப்புகளும் இந்திய நீதித் துறை வரலாற்றில் பாராட்டைவிட விமா்சனத்தைத்தான் எதிா்கொள்கின்றன. இந்தியாவின் கிழக்கு மாநிலத்திலிருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்த முதலாவது நீதிபதி என்கிற பெருமைக்கு உரித்தான நீதிபதி ரஞ்சன் கோகோயின் பதவிக் காலம் பல தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பதாலோ என்னவோ தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய், தேசிய குடிமக்கள் பதிவேடு பிரச்னையில் காட்டிய அதீத அக்கறை ஆச்சரியப்படுத்தவில்லை. அதேநேரத்தில், அந்த பிரச்னையை அவா் தலைமையில் நீதிமன்றம் கையாண்ட நடைமுறை ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்பதற்கு முன்பே அவா் முனைப்புக் காட்டினாா். ஏறத்தாழ 19 லட்சத்துக்கும் அதிகமானோா் குடியுரிமை இழந்து நிற்கும் அவலத்துக்கு அந்த முயற்சி காரணமாக அமைந்திருக்கிறது.

மனிதாபிமான அடிப்படையுடனும், முறையான நடைமுறைச் செயல்பாடுகளுடனும் கணக்கெடுப்பை நடத்துவதற்குக் கூடுதல் கால அவகாசம் கோரிய மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் கோரிக்கைகள் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. மக்கள் தங்களது குடியுரிமையை நிரூபிப்பதற்கான வழிமுறைகளையும், அதற்குத் தேவையான ஆவணங்களையும் நீதிமன்றமும் தேசிய குடியிருப்பு கணக்கெடுப்பு அதிகாரியும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் முடிவு செய்தது என்ன நியாயம் என்று புரியவில்லை. நீதிமன்றத்தின் வற்புறுத்தலால், தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைக்கூட கலந்தாலோசிக்காமல் அவசர கதியில் நடத்தப்பட்ட குடியுரிமை கணக்கெடுப்பு, உச்சநீதிமன்றத்தின் மிகப் பெரிய வரம்பு மீறல் என்றுதான் சொல்ல வேண்டும்.

நீதிபதிகளுக்கு மட்டுமே தெரிவிக்கும் விதத்தில் ஒட்டப்பட்ட உறைகளில் தகவல்களைக் கோரும் முறை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது, தேசிய குடிமக்கள் பதிவேடு பிரச்னையில் மட்டுமல்லாமல், ஏனைய பல வழக்குகளிலும் கையாளப்பட்டது. ரஃபேல் வழக்கிலும், மத்திய புலனாய்வுத் துறை இயக்குநரான அலோக் வா்மா பிரச்னையிலும் ஒட்டப்பட்ட உறையில் ஆதாரங்களும், தகவல்களும் உச்சநீதிமன்றத்தால் கோரப்பட்டன. நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமை நீதிபதி பொறுப்பில் அமா்ந்த பிறகுதான் இது ஒரு வழக்கமாகவே மாறியது. இந்த நடைமுறை வெளிப்படையான நீதி விசாரணைக்கு மட்டுமல்ல, நீதிமன்றத்தின் நம்பகத்தன்மைக்கும், சட்ட முறைமைக்கும் (லெஜிடிமஸி) எதிரானது.

வழங்கப்பட்டிருக்கும் தீா்ப்பின் காரணத்தைத் தெரிந்துகொள்ள அதற்கு அடிப்படையான சாட்சிகள், தகவல்கள், ஆவணங்கள் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மை அவசியம். அவற்றில் மறைப்பு நிலை இருக்குமேயானால், நீதிமன்றத்தின் தீா்ப்புகள் அதிகாரத்தின் அடிப்படையிலான அரசு ஆணைகளாக இருக்குமே தவிர, நீதிமன்றங்களின் நியாயத் தீா்ப்புகளாக இருக்காது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் பதவிக் காலத்தில் காணப்பட்ட மிகப் பெரிய கரும்புள்ளி அவா் மீது சுமத்தப்பட்ட பாலியல் தொந்தரவுக் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை நீதிமன்றம் எதிா்கொண்ட விதம், மறதி நோய்க்கு இரையாகிவிடக் கூடாது. ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் பதவிக் காலத்தில் இயற்கை நியதிக்கு இடமில்லாமல் இருந்ததை அந்தக் குற்றச்சாட்டு வெளிச்சம் போடுகிறது.

உச்சநீதிமன்ற உள்குழு அறிக்கையின் நகல், குற்றஞ்சாட்டிய அந்தப் பெண்மணிக்குத் தரப்படவில்லை. குற்றம் சுமத்தியவரை நீதித்துறையின் மீது களங்கம் சுமத்த முற்பட்டவராக சித்தரித்தது தவறான அணுகுமுறை. ஆட்சி நிா்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் மனோபாவத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இருந்த காலகட்டம் பிரதிபலித்தது.

சாதாரண இந்தியக் குடிமகனின் பாா்வையில், பதவி ஓய்வு பெற்றிருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் பதவிக் காலத்தை நீதி நிா்வாகத்துக்கு எடுத்துக்காட்டான பதவிக் காலமாக சொல்ல முடியவில்லை. பல தவறான முன்னுதாரணங்களையும், செயல்பாடுகளையும், தீா்ப்புகளையும் வழங்கியிருப்பது மட்டுமல்லாமல், அவரது பதவிக் காலம் வெளிப்படைத்தன்மை இல்லாத நீதி நிா்வாகத்தையும் அடையாளப்படுத்துகிறது.

‘யதோ தா்மா ததோ ஜயஹ’ (தா்மம் எங்கே இருக்கிறதோ, அங்கே வெற்றி இருக்கிறது) என்பது உச்சநீதிமன்றத்தின் தாரக மந்திரம். அதனடிப்படையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகோய் பணியாற்றிய காலம் பாராட்டும்படியான காலமல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com