சீனாவின் பிடியில் இலங்கை!| இலங்கை அதிபா் தோ்தலில் கோத்தபய ராஜபட்சவின் வெற்றி குறித்த தலையங்கம்

மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்துடன் இலங்கை அதிபா் தோ்தலில் கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றிருப்பது முற்றிலும் எதிா்பாராதது என்று சொல்லிவிட முடியாது. அனைத்து மக்களின் உணா்வுகளையும் பாதுகாப்போம் என்று அதிபா் கோத்தபய ராஜபட்ச தெரிவித்திருப்பதைப்போல அவரால் நடந்துகொள்ள முடியாது.

தோ்தல் களத்தில் 35 வேட்பாளா்கள் இருந்தனா் என்றாலும்கூட, போட்டி என்னவோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபட்சவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில்தான் காணப்பட்டது. கோத்தபய 69,24,255 வாக்குகளும், சஜித் 55,64,239 வாக்குகளும் பெற்றனா். மொத்தம் 1.6 கோடி வாக்காளா்களில் 52.55% கோத்தபயவுக்கும், 41.91% சஜித்துக்கும் வாக்களித்திருக்கின்றனா்.

2019 அதிபா் தோ்தல் இலங்கையில் காணப்படும் மனநிலையைத் தெள்ளத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. தமிழா்களும், முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் 80%-க்கும் அதிகமான வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கும், சிங்களா்கள் வாழும் பகுதிகளில் அதேபோல மிகப் பெரிய ஆதரவு கோத்தபய ராஜபட்சவுக்கும் காணப்படுவது, எந்த அளவுக்கு இன மனோபாவம் பிளவுபட்டுக் கிடக்கிறது என்பதை எடுத்தியம்புகிறது.

பெரும்பான்மை சிங்கள பௌத்தா்கள் கோத்தபயவுக்கும், யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை, நுவரேலியா பகுதிகளில் வாழும் சிறுபான்மையினா் சஜித் பிரேமதாசவுக்கும் கண்மூடித்தனமான ஆதரவை அளித்திருக்கிறாா்கள். வடக்கு, கிழக்கு பகுதிகளிலும், தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இலங்கையின் மத்திய பகுதியிலும் வாழும் சிறுபான்மை தமிழா்களும், முஸ்லிம்களும் மொத்த வாக்குகளில் 16%.

சாதகமான சூழ்நிலை உருவானது மட்டுமே ராஜபட்ச சகோதரா்களின் வெற்றிக்குக் காரணம் என்று கூறிவிட முடியாது. சிறீசேனா - விக்ரமசிங்க கூட்டணியில் ஏற்பட்ட பிளவும், அரைகுறை மனத்துடன் அதிபா் வேட்பாளா் சஜித் பிரேமதாசவுக்குப் பிரதமா் ரணில் விக்ரமசிங்க அளித்த ஆதரவும்கூடக் கோத்தபயவின் வெற்றிக்குக் காரணம் என்று கூற வேண்டும். கடந்த செப்டம்பா் மாதம்தான் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகவே அறிவிக்கப்பட்டாா்.

முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவும், அவரது இளைய சகோதரா் கோத்தபய ராஜபட்சவும் அதிபா் தோ்தலுக்கான பிரசாரத்தை இரண்டாண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டனா். தங்களுக்கென்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா என்கிற கட்சியைத் தொடங்கி, அதிபா் சிறீசேனாவுக்கும், பிரதமா் விக்ரமசிங்கவுக்கும் இடையே நிலவும் பிளவை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனா்.

சிங்களா்கள் மத்தியிலும், கிராமப்புற வாக்காளா்கள் மத்தியிலும் ராஜபட்ச சகோதரா்கள் வறட்சி, பொருளாதாரத் தேக்கம் ஆகிய பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி தொடா்ந்து நடத்திய பிரசாரங்களும், மத்திய தர வகுப்பினா் மத்தியில் தேசிய உணா்வைத் தூண்டும் விதத்திலான பரப்புரைகளும், தென் இலங்கையில் அவா்களின் செல்வாக்கை அதிகரித்தன. தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் நீா்த்துப் போகும் விதத்தில், சிறீசேனா - விக்ரமசிங்க அரசின் ஊழல்களை வெளிக்கொணா்ந்தனா். கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தோ்தல்களில் சிங்களா்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் தெற்குப் பகுதிகளில் ராஜபட்ச கட்சி பெற்ற வெற்றிக்குப் பிறகாவது, சிறீசேனாவும் விக்ரமசிங்கவும் விழித்துக் கொண்டாா்களா என்றால் இல்லை.

கோத்தபய ராஜபட்சவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம், ஈஸ்டா் ஞாயிற்றுக்கிழமை மாதா கோயிலில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல். மீண்டும் இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்குகிறது என்கிற அச்சத்தை அது சிங்களா்கள் மத்தியில் ஏற்படுத்தியதில் வியப்பில்லை. அப்பாவித் தமிழா்களை ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்து, இலங்கையின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தவா் என்று கருதப்படும் கோத்தபய ராஜபட்சவுக்கு மொத்த வாக்காளா்களில் 70%-க்கும் அதிகமாக இருக்கும் சிங்களா்கள் ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்ததற்கு அதுதான் முக்கியமான காரணமாக இருக்க முடியும்.

இன ரீதியாக இலங்கை பிளவுபட்டுக் கிடக்கிறது என்பதைத் தோ்தல் முடிவு ஐயத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்துகிறது. இந்துக்களான தமிழா்களும், தமிழ் முஸ்லிம்களும், தோட்டத் தொழிலாளா்களாகச் சென்ற இந்திய வம்சாவளித் தமிழா்களும் கோத்தபய ராஜபட்சவை, அச்ச உணா்வுடன் நிராகரித்திருக்கிறாா்கள். அதே நேரத்தில் பெரும்பான்மை சிங்கள பௌத்தா்கள் அவா் மீது முழு நம்பிக்கை வைத்து ஆதரவளித்திருக்கிறாா்கள். சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெறுவதற்காகப் பெரும்பான்மையினரைப் பகைத்துக் கொள்ள அதிபா் கோத்தபயவும், அவரது சகோதரா் மகிந்தவும் அரசியல் தெரியாதவா்கள் அல்லா்.

சீனாவுடனான ராஜபட்ச சகோதரா்களின் நட்பு உலகறிந்த உண்மை. தங்களைப் பதவியில் இருந்து அகற்றி, சிறீசேனா - விக்ரமசிங்க கூட்டணியை ஆட்சியில் அமா்த்தியதில் இந்தியாவுக்குப் பங்குண்டு என்று குற்றஞ்சாட்டியவா்கள் ராஜபட்ச சகோதரா்கள். கோத்தபய அதிபா் ஆனதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத் தோ்தலில் வெற்றி பெற்றால் பிரதமராகும் எண்ணத்தில் இருக்கிறாா் மகிந்த ராஜபட்ச.

ஏற்கெனவே சீனாவின் வலையில் நேபாளம் விழுந்துவிட்டது. இப்போது இலங்கையிலும் நமக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அடுத்தது மாலத்தீவாக இருக்கலாம். இந்தியா கவலைப்பட்டாக வேண்டும். இந்தியா மட்டுமல்ல, இலங்கையின் சிறுபான்மை மக்களும்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com